March

இழந்துபோனதை மீட்டெடுத்தல்

2025 மார்ச் 8 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:6-7)

  • March 8
❚❚

 “ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி, அதை எடுத்துக் கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான்”(வச. 6,7).

எலிசா மரத்திலிருந்து ஒரு கொம்மை வெட்டி, கோடாரி (கோடாரியிலுள்ள வெட்டும் இரும்புக் கருவி) விழுந்த இடத்தில் தண்ணீரில் போட்டான். அப்பொழுது அந்தக் கோடாரி மிதந்தது. ஒரு விசுவாசிக்கு உதவி செய்ய வேண்டும் தேவன் நினைப்பாரானால் அவரால் இரும்புத் துண்டையும் தண்ணீரில் மிதக்கச் செய்ய முடியும். தனிப்பட்ட முறையில் எலிசாவிடம் எந்த வல்லமையும் கிடையாது, அல்லது மரத்தில் வெட்டப்பட்ட அந்தக் கொம்புக்கும் எவ்வித மந்திர சக்தியும் கிடையாது. ஆனால் எலிசா விசுவாசம் வைத்திருந்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அந்த வல்லமையைக் கொண்டிருந்தார். நம்முடைய தேவைகளுக்காக இயற்கைக்கு அப்பாற்பட்ட வகையில் செயல்படும் இந்தத் தேவனையே நாம் விசுவாசிக்க வேண்டும்.

எலிசா தண்ணீரில் எறிந்த அந்தக் கொம்பின் முக்கியத்துவம் என்ன? இது சிலுவையின் வல்லமைக்கும் வேதவசனத்தின் வல்லமைக்கும் ஒரு சித்திரமாக இருக்கிறது என்று கூறலாம். கிறிஸ்துவின் சிலுவையே நமக்காக ஒரு மபெரும் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது. கோடாரியைத் தவறவிட்ட தீர்க்கதரிசியின் புத்திரர், தண்ணீரில் மிதந்த கோடாரியை தன் கையை நீட்டி பிடித்துக்கொண்டது போல. தேவனுடைய அன்பை நாம் கையை நீட்டிப் பிடிக்கும் அளவுக்கு சிலுவை மரணம் நமக்கு அருகில் கொண்டுவருகிறது. ஆம், சிலுவையே நாம் தேவனோடு இழந்துபோயிருந்த உறவையும் ஐக்கியத்தையும் மீட்டெடுப்பதற்கு உதவி செய்கிறது. கிறிஸ்து சிலுவையில் சம்பாதித்த தேவனுடைய ஆசீர்வாதங்களை நம்முடைய கைக்கெட்டும் தூரத்தில் நிறுத்தி, நாம் அதைப் பிடித்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறார்.

எந்தவொரு உபகரணமோ அல்லது அவன் எட்டிப் பிடிக்கத் தேவையில்லாதபடி எலிசாவால் அங்கே அற்புதத்தை நிகழ்த்தியிருக்க முடியும். ஆயினும் தேவன் தன்னால் செய்யக்கூடியதை செய்கிறார், மனிதனால் செய்யக்கூடிய காரியங்களை விசுவாசத்துடன் செய்யும்படி அவர்களிடமே விட்டுவிடுகிறார். பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் தேவன் மனிதர்களுக்காக செய்த அற்புதங்கள் அனைத்திலும் அதைப் பெற்றுக்கொள்கிறவர்களின் விசுவாசமுள்ள பங்களிப்பு இருந்ததைத் காண்கிறோம். அதே வல்லமையுள்ள தேவன் இன்றைய நாட்களிலும் அற்புதங்களைச் செய்துகொண்டிருக்கிறார். வாஞ்சையும் விசுவாசம் உடைய மனிதர்கள் அதைப் பெற்றுக்கொள்கிறார்கள்.

தேவன் எலிசாவைப் பயன்படுத்தியதுபோல இன்றைய நாட்களிலும் தேவன் நம்மைப் பயன்படுத்த விரும்புகிறார். நம்முடைய ஜெபங்களின் மூலம் தேவன் இன்றும் மற்றவர்களைக் குணப்படுத்துகிறார். நம்முடைய அன்பின் மூலம் தேவன் இன்றும் மற்றவர்களை உற்சாகப்படுத்துகிறார். தம்முடைய ஞானத்தை வழங்குவதன் மூலம் தேவன் இன்றும் குழப்பங்களுக்குத் தெளிவைக் கொடுக்கிறார். தம்முடைய உதாரணத்துவ குணத்தின் மூலமாக தேவன் இன்றும் மக்களின் தேவைகளைச் சந்திக்கிறார். இழந்துபோனோரை மீட்டுக்கொண்டு வருகிறார். இழந்துபோன உறவைக் கட்டியெழுப்புகிறார். யோர்தான் ஆற்றின் ஆழத்தில் மூழ்க்கிக் கிடந்த இரும்புக் கோடாரியை மிதக்கப்பண்ணியதுபோலவே, நம்முடைய  இருதயமென்னும் தண்ணீரில் புதைந்து கிடக்கும் பகைமையையும், வெறுப்பையும், கசப்பையும் வெளியே கொண்டுவந்து, நம்மைச் சரிப்படுத்தி மீண்டும் பயன்படுத்த விரும்புகிறார். நம்முடைய தயக்கங்களையும், தோல்விகளையும் அப்புறப்படுத்தி மீண்டும் உபயோகப்படுத்த விரும்புகிறார். இதற்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோமா?