2025 மார்ச் 6 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:1-3
- March 6
“குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம்”(வச. 2).
இஸ்ரவேல் தேசம் ஆவிக்குரிய இருளில் சிக்கியிருந்தாலும்கூட, கர்த்தரைத் தேடுகிற ஒரு கூட்டம் அங்கே இருந்தது. இவர்கள், “தீர்க்கதரிசிகளின் புத்திரர்” என்று அழைக்கப்பட்டார்கள். இது அந்நாட்களில் கர்த்தருடைய காரியங்களைக் கற்றுக்கொள்கிற “தீர்க்கதரிசனப் பள்ளியாக” விளங்கியது. “இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது” (வச. 1) என்ற கூற்றிலிருந்து அங்கே எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தோமானால் எத்தகைய நெருக்கடியான காலகட்டங்களிலும் அதில் வளர்ச்சி காணப்படும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறது.
கர்த்தருருடைய ஊழியத்தை ஊழியத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அங்குள்ள தீர்க்கதரிசிகளின் புத்திரர் உணர்ந்தார்கள். இந்தக் காரியத்தை எலிசாவிடம் அவர்கள் கொண்டு சென்றார்கள். தாங்கள் விரும்பியதை எலிசாவிடம் தெரிவிக்கும் சுதந்தரம் அந்தத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு இருந்ததைக் காண்கிறோம். அதுபோலவே நம்முடைய தேவைகளையும் எந்த நேரத்திலும் நம்முடைய எஜமானராகிய ஆண்டவரிடத்தில் சொல்லும் சிலாக்கியத்தைப் நாம் பெற்றிருக்கிறோம். நமக்கான திறந்த வாசல் எப்பொழுதும் இருக்கிறது.
ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் (வச. 2) என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் தங்களுடைய இடப் பற்றாக்குறையைக் குறித்தோ அல்லது நெக்கமாய் இருக்கிறதைக் குறித்தோ முறுமுறுக்கவில்லை. மாறாக அதை எந்த வகையில் விசாலமாக்கலாம் என்றே சிந்தித்தார்கள். கர்த்தருடைய ஊழியத்தைக் குறித்த குறுகிய கண்ணோட்டத்தை அல்ல. பரந்த பார்வையை அவர்கள் கொண்டிருந்தார்கள். “உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்” (சங். 81:10) என்று கர்த்தர் கூறியிருக்கிறார். “தேவனிடமிருந்து மகத்தான காரியங்களை எதிர்பாருங்கள்; அவருக்காக மகத்தான காரியங்களைச் செய்ய முயற்சி செய்யுங்கள்” என்ற இலக்கை வைத்துச் செயல்பட்டதாலேயே வில்லியம் கேரியால் பல மகத்தான காரியங்களைச் செய்ய முடிந்தது.
“ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி” எடுத்துவரும்படி எலிசாவிடம் ஒருவன் அனுமதி கேட்டான். கர்த்தருடைய ஊழியத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது ஒரு தனிப்பட்ட நபரின் முடிவாக இராமல் அதில் பங்கு பெறுகிற ஒவ்வொருவரின் கருத்தாக மட்டுமின்றி, அது ஒவ்வொருவரின் பங்களிப்பாகவும் இருக்க வேண்டும். என்றுமில்லாத அளவுக்கு அளவுக்கு இன்றைய நாட்களில் திருச்சபை மக்களிடைய ஒற்றுமையின்மை காணப்படுக்கிறது. அல்லது ஒரு சிலர் மட்டுமே கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஓர் உள்ளூர் சபையின் வளர்ச்சிக்கோ அல்லது ஓர் ஊழியத்தின் விசாலத்திற்கோ ஐக்கியமும் ஒருமனமும் முக்கியமான அம்சங்களாக உள்ளன.
ஒருவன் நாங்கள் போய் மரத்தை வெட்டுவதற்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டான், இன்னொருவன் நீரும் கூட வாரும் என்று கேட்டான். ஒரு காரியத்தில் ஒன்றுக்கு மேற்பட்டோருடைய ஆலோசனை இடம் பெறுவது நன்மை பயக்கும். ஒவ்வொருவருக்கும் வரங்களையும் தாலந்துகளையும் ஆண்டவர் அருளியிருக்கிறார். எத்தகைய அவசியமான தேவைகள் இருந்தாலும் கர்த்தரிடத்தில் தெரிவியாமலும், அவருடைய பிரசன்னம் இல்லாமலும் எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாம். “நான் தோல்வியைக் கண்டு பயப்படவில்லை, தவறான வெற்றியைக் கண்டே அதிகமாகப் பயப்படுகிறேன்” என்னும் வில்லியம் கேரியின் மற்றுமொரு சிந்தனையையும் நாம் கவனிக்க வேண்டியது அவசியம்.