March

வேலைக்காரனைப் புரிந்துகொண்ட எஜமான்

 2025 மார்ச் 4 வேதபகுதி: 2 ராஜாக்கள் 5:24-27

  • March 4
❚❚

 “என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா?”(வச. 26).

கேயாசி நாகமானிடமிருந்து பெற்ற இரண்டு பண மூட்டைகளையும் ஆடைகளையும் பத்திரமாய் வீட்டில் இறக்கி வைத்தான். மேலும் அவற்றை எலிசாவுக்குத் தெரியாமல் மறைத்துவைத்தான். கேயாசி தான் என்ன செய்கிறோம் என்பதை அறிந்தே செய்தான். பண ஆசை பணத்தை இரகசியமாய் மறைத்து வைத்தல் என்னும் மற்றொரு பாவத்துக்கு நேராக வழிநடத்தியது. தான் நாகமானிடமிருந்து பெற்ற பணத்தை எலிசாவிடம் கூறியிருந்தால், ஒருவேளை அவனுடைய வாழ்க்கையின் காரியங்கள் வேறு மாதிரி சென்றிருக்க வாய்ப்பு உண்டாயிருக்கலாம். விசுவாசிகளிடமிருந்து பெறுகிற பணத்தை ஊழியத்துக்கென்று செலவிடாமல்  அதைத் தங்களுடைய சொந்த நலனுக்காக வங்கிகளிலோ, அல்லது லாக்கர்களிலோ மறைத்து வைப்பதைப் பலரும் பாவமாகவே கருதுவதில்லை.

இவ்வாறெல்லாம் செய்துவிட்டு, எதுவும் அறியாததுபோலவே தன்னுடைய எஜமானனுக்கு முன்பாக கேயாசி நின்றான். செய்த பாவத்தை மறைப்பதற்காக எதுவும் அறியாததுபோல, அல்லது எவ்விதக் குற்றவுணர்வும் இல்லாமல், நடிக்கும் நிலை ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் நேரிடக்கூடாத மோசமான நிலையாகும். நீ “எங்கேயிருந்து வந்தாய்” என்று எலிசா கேட்டபோது, “உமது அடியான் எங்கும் போகவில்லை” என்று பொய் சொல்லி, கேயாசி தனது செயல்களை மறுத்துரைத்து இன்னும் மோசமான நிலை ஆகும். இந்த நேரத்திலும் தன் தவறை உணர்ந்து உண்மையைச் சொல்லியிருந்தால் அவனுடைய வாழ்க்கை வேறுமாதிரியாக போயிருக்கலாம். தவறை ஒத்துக்கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் கிடைத்த மற்றொரு வாய்ப்பையும் கேயாசி நிராகரித்துவிட்டான்.

“என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா?” என்று எலிசா கேட்டபோது, பதில் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றான்.  தனது பாவத்தை மறைக்க கேயாசி எடுத்துக்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. தேவனுடைய மனிதன் என்ற முறையில் எலிசா இயற்கைக்கு அப்பாற்பட்ட முறையில் தேவ ஆவியானவரின் துணையோடு கேயாசின் இருதயத்தை அறிந்திருந்தான் அல்லது தேவன் வெளிப்படுத்தியிருந்தார். தனது குருநாதர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை கேயாசி அறிந்துகொள்ளத் தவறினாலும், எலிசா தனது சீடனின் இருதயத்தை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார். “மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை” (யோவான் 2:25) என்று ஆண்டவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளதுபோலவே, கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றிருந்த எலிசாவும் நடந்துகொண்டான்.

“பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா?” (வ. 26) என்று எலிசா கேள்வியெழுப்பினான். பணத்தையும், வஸ்திரங்களையும் மட்டுமே கேயாசி வாங்கினானே தவிர, இதில் சொல்லப்பட்டுள்ள வேறு எதையும் வாங்கவில்லையே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் நாகமானிடம் வாங்கிய பணத்தைக் கொண்டு, ஒலிவத் தோப்புகள், திராட்சைத் தோட்டங்கள், ஆடுமாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரர்கள் ஆகிய எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்ற சிந்தையும் திட்டமும் அவனுக்குள் இருந்தது. அதையே எலிசா வெளிப்படுத்திக் காட்டினான். கேயாசி கர்த்தருடைய ஊழியத்தை உலகப் பொருட்களைச் சம்பாதிப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்தினான். இந்தக் கேயாசி இன்றைய காலத்து ஊழியர்கள் பலலை நம் கண் முன் நிறுத்துகிறான் அல்லவா? நம்முடைய காரியங்களைச் சிந்தித்துப் பார்ப்போம்.