2025 மார்ச் 3 வேதபகுதி: 2 ராஜாக்கள் 5:20-23
- March 3
“தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டு வந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்”(வச. 20).
பெரிய செல்வந்தனும், செல்வாக்குமிக்கவனுமாகிய நாகமானிடமிருந்து எலிசா எதையும் பெற்றுக் கொள்ளாததைக் கண்ட கேயாசி மிகவும் அதிர்ச்சியடைந்தான். கூடவே இருந்தும் தன் குருநாதரின் சிந்தை அறியாத சீடனாகவே கேயாசி காணப்பட்டது ஆச்சரியமே. பல தருணங்களில் நம்முடைய எஜமானரும் ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவின் சிந்தை அறியாதவர்களாக இருக்கிறோம் என்பது துக்கத்துக்குரிய காரியம். உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் காண்பித்த பிசாசுக்கு சற்றேனும் அடிபணியாதவரும், இவ்வுலகப் பொருட்செல்வங்களைப் பொருட்டாகவே எண்ணாதவருமாகிய கர்த்தரையே நாம் இவ்வுலகில் எஜமானராகப் பெற்றிருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். மூன்றரை ஆண்டுகள் தங்கள் குருவிடம் சீடத்துவப் பயிற்சி பெற்ற ஏழையான சீடர் குழாமும் இவ்வுலக பொருட்செல்வங்களைக் குறித்து அக்கறையற்றவராகவே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெபம் செய்வதற்கும் பிரசங்கம் செய்வதற்கும் இடையூராக இராதபடிக்கு ஆரம்பத்திலேயே நிதியைக் கையாளுவதற்கு அதற்கான தகுதியான நபர்களிடம் அவர்கள் ஒப்படைத்துவிட்டார்கள் (அப். 6:2-5) என்பது தங்கள் குருநாதரிடம் பெற்ற பயிற்சியே அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
கேயாசி, “நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு, நாகமானைப் பின் தொடர்ந்தான்”. எலிசா எதை விட்டுவிட்டானோ கேயாசி அதைப் பெற்றுக்கொள்ளும்படி ஓடினான். எலிசா இழப்பதில் மனரம்மியமாக இருந்தான், கேயாசி பெற்றுக் கொள்வதில் இச்சையுடையவனாயிருந்தான். எல்லாத் தீமைகளுக்கும் வேராயிருக்கிற பணத்தை நோக்கி கேயாசியின் கால்கள் ஓடின. கேயாசி ஓடிவருகிறதைக் கண்ட நாகமான் மகிழ்ச்சியோடு அவனை வரவேற்றான். நாகமான் நம்புகிறமாதிரியும், அவன் சந்தேகப்படாதவண்ணமாகவும் கேயாசி யதார்ததமாக ஒரு பொய் சொன்னான். பண ஆசை பொய் சொல்லுதல் என்னும் பாவத்துக்கு நேராக அவனை நடத்தியது. இந்தப் பணம் எனக்கு அல்ல, ஊழியத்தில் ஈடுபட்டு இப்பொழுதுதான் வந்த மிஷனரிகளுக்காகத்தான் இந்தப் பணம் என்று அக்கறையுடன் பொய் சொhன்னான். விசுவாசிகளோ அல்லது ஊழியர்களோ பொய் கணக்கு எழுதியோ அல்லது பொய்யான புள்ளி விவரங்களைக் சமர்ப்பித்தோ பணம் சம்பாதிப்பவர்களாக ஒருபோதும் இருக்கக்கூடாது.
கேயாசி ஒரு தாலந்து வெள்ளியும், இரண்டு ஆடைகளும் கேட்டபோது, நாகமான் சந்தோஷத்துடன் இரண்டு தாலந்து வெள்ளியும் ஆடைகளும் மனமுவந்து கொடுக்க முன்வந்தான். தான் பெற்றுக் கொண்ட இரட்சிப்புக்காக இவ்வுலகப் பொருட்களால் நன்றி செலுத்துவதில் நாகமான் மகிழ்ச்சி உள்ளவனாயிருந்தான். ஆண்டவர் தன் வீட்டுக்கு வந்தபோது, தன் வீட்டிலிருந்த செல்வங்களை விநியோகிப்பதில் மகிழ்ச்சியுள்ளவனாயிருந்த சகேயுவை இந்த நாகமான் நமக்கு நினைவூட்டுகிறான் அல்லவா? கொடுப்பதில் வாஞ்சையுள்ள நாகமானைப் போன்ற இளம் விசுவாசிகளை, கேயாசியைப் போன்ற முதிர்ச்சியும் அனுபவமிக்க ஊழியர்கள் கொள்ளையடிப்பது இன்றும் தொடர்கதையாகவே உள்ளது. கேயாசி ஒன்று கேட்டான், இரண்டு கிடைத்தது. “ஆ…, இரட்டிப்பான ஆசீர்வாதம்” என அவன் புளங்காகிதம் அடைந்திருக்கலாம். துக்கமான காரியம் என்னவெனில், அவன் ஆசிர்வாதத்தை அல்ல சாபத்தையே மூட்டைகளில் சுமந்து சென்று கொண்டிருந்தான்.