2025 பிப்ரவரி 20 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,42 முதல் 44 வரை)
- February 20
“பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்”(வசனம் 42).
நேற்றைய நாளின் சிந்தனையில், உணவில் கசப்புக் கலந்திருந்தது, எலிசா அதை அற்புதத்தினால் நல்ல உணவாக்கினார். அவன் நல்ல மாவைக் கலந்ததினால் கசப்பின் தன்மையை நீர்த்துப் போகச் செய்தான். இன்றைய நாளின் வேத பகுதியில் மீண்டும் ஒரு பிரச்சனையைச் சந்திக்கிறோம். நல்ல உணவு இருக்கிறது, ஆனால் அது எல்லாரும் உண்பதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. எலிசா அதை எல்லாருக்கும் போதுமானதாக மாற்றினார். எலிசா ஓர் அற்புதங்களின் தீர்க்கதரிசி. அவர் மக்களின் தேவை அறிந்து கர்த்தரிடத்திலிருந்து அற்புதமான முறையில் நன்மைகளைப் பெற்றுக்கொடுத்தார்.
இங்கே பாகால் சலீஷாவிலிருந்து அப்பங்களைக் கொண்டு வந்த ஒரு மனிதனைக் குறித்து வாசிக்கிறோம். பொதுவான வட இஸ்ரவேல் நாடானது கர்த்தரை விட்டு விலகி, பாகாலைச் சேவித்து பின்மாற்ற நிலையில் இருந்தது. இத்தகைய நிலையிலும் நியாயப்பிரமாணத்தின்படி தன்னுடைய விளைச்சலில் முதற்பலன்களை எலிசாவிடம் கொண்டு வந்த தேவபக்தியுள்ள ஒரு மனிதனாக இவன் விளங்குகிறான். கர்த்தர் தனக்குத் தந்த விளைச்சலில் அவருடைய பங்கை அவருக்குச் செலுத்தும்படி வந்த ஒரு நன்றியுள்ள மனிதனாக அவனைக் காண்கிறோம். பெரும்பாலான மக்கள் திசைமாறிச் சென்றாலும் நேர் வழியில் பயணிக்கிற ஒரு மனிதனாக இவனைப் பார்க்கிறோம். சுகம் பெற்ற பத்து தொழுநோயாளிகளில், ஆண்டவருக்கு நன்றி சொல்ல வந்த ஒரு மனிதனைப் போல இவன் காணப்படுகிறான்.
பொதுவான முதற்பலன்களை ஆசாரிப்புக்கூடாரத்தில் வேலை செய்கிற ஆசாரியர்களிடத்தில் அல்லது லேவியர்களிடத்தில் அளிக்க வேண்டும் (லேவியராகமம் 23,20; எண்ணாகமம் 18,13; உபாகமம் 18,4 முதல் 5). ஆனால் தேவாலயம் இப்பொழுது எருசலேமில் இருக்கிறது. அங்கு கொண்டு செல்வதற்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும், அவன் உண்மையான தேவனுடைய மனிதனாகிய எலிசாவிடம் கொண்டுவந்தான். அவன் கர்த்தருக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகளைக் குறித்து எவ்விதச் சாக்குப்போக்கும் சொல்லாமல் தேவனுடைய மனிதனிடத்தில் கொண்டு வந்தான். தேவனுடைய தீர்க்கதரிசியும், தீர்க்கதரிசிகளின் புத்திரரும் இத்தகைய மனிதர்களின் வாயிலாகப் போஷிக்கப்படுகிறார்கள் என்பதை இன்றைய கிறிஸ்தவர்கள் அறிந்து, தேவையுடன் இருக்கிற கர்த்தருடைய ஊழியர்களைக் கண்டறிந்து உதவி செய்தால் பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவுடன் ஊழியம் செய்ய முடியும்.
நம்முடைய ஆண்டவர் ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு ஐயாயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு உணவளித்து மீதியான துணிக்கைகளை எடுத்ததற்கு ஒரு முன்னோட்டமாகத் திகழ்கிறது. இருபது அப்பங்களைக் கொண்டு நூறு பேருக்கு உணவளிக்க எவ்வாறு முடியும்? ஆம், தேவன் அவற்றைப் பெருகப் பண்ணுவதன் மூலமாக அது சாத்தியமாக்கலாம். தேவனுடைய வல்லமையும், அவருடைய இரக்கங்களும் மகா பெரியவை. நமது சிறிய கற்பனைகளால் அவருடைய பரந்துபட்ட வல்லமையை கட்டுப்படுத்திவிட வேண்டாம். அவருக்கு எண்ணிக்கை ஒரு பொருட்டே அல்ல, எவ்வளவு தேவை என்பதும் ஒரு பொருட்டல்ல. மனுஷருடைய பலத்தைக் காட்டிலும் தேவனுடைய பலவீனம் என்னப்படுவது அதிக பலமாயிருக்கிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவரை முழுமனதுடன் விசுவாசிப்போம், நம்முடைய தேவைகளையும் நிறைவான முறையில் சந்திப்பார்.