2025 பிப்ரவரி 7 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,8 முதல் 9 வரை)
- February 7
“பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்”(வசனம் 8).
சூனேம் ஊரில் ஒரு கனம்பொருந்திய பெண் தன் கணவனுடன் வசித்து வந்தாள். எலிசா ஒரு நாள் அங்கே சென்றான். இந்தப் பெண்ணுக்கும் எலிசாவுக்குமான உறவு ஒரு விருந்தோம்பலில் தொடங்கியது. நம்முடைய ஊர்களுக்கு அல்லது நம்முடைய சபைகளுக்கு புதிதாக வருகிற தேவனுடைய பிள்ளைகளை உணவருந்தும்படி வீட்டுக்கு அழைப்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ள முக்கியமான காரியங்களில் ஒன்றாகும். இன்றைய நாட்களில் இந்த விருந்தோம்பல் படிப்படியாக மறைந்து வருகிறது துக்கத்துக்குரிய காரியம். சூனேம் ஊரில் பலர் வசித்தாலும், இந்தப் பெண் மட்டுமே எலிசாவை வருந்தி அழைத்தாள். சபையில் பலர் இருக்கலாம், ஆயினும் ஒரு சிலரே இத்தகைய அன்பின் விருந்தோம்பலை முக்கியமாக எண்ணுகிறார்கள். “பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள்” (ரோமர் 12,13) என்று பவுல் கூறுகிறார்.
எலிசாவின் ஊழியங்களைக் கவனித்துப் பார்த்தால், அவன் தனி நபர்கள், குடும்பங்கள், தனிப்பட்ட குழுவினர் ஆகியோரிடத்தில் அதிகமாக ஈடுபட்டதைக் காணமுடியும். இவன் இந்தக் காரியத்தில் இயேசு கிறிஸ்துவைப் பிரதிபலித்துக் காட்டுகிறான். நம்முடைய ஆண்டவர், யாராவது விருந்தோம்பலுக்கு அழைத்தால் எவ்விதப் பாகுபாடும் காட்டாமல் தாராளமாகச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எலியாவின் ஊழியம் ஏறத்தாழ யோவான் ஸ்நானகனின் ஊழியத்தைப் போல இருந்தது. எலியா பெரும்பாலும் தனிமை விரும்பியாக, மலைகளிலும், மரங்களிலும், குகைகளிலுமே நாட்களைக் கழித்தான். யோவானும் இவ்விதமாக வாழ்ந்தான் என்று நாம் அறிந்திருக்கிறோம்.
“யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசா சு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்” (லூக்கா 7,33 முதல் 34) என்று இயேசு கிறிஸ்து ஊழியங்களில் காணப்பட்ட வேறுபாடுகளின் அடிப்படையில் பாகுபாடும் பார்ப்பதையும், குறை கண்டுபிடிப்பதையும் கடிந்துகொண்டார். தேவன் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நோக்கத்திற்காக வித்தியாசமான வழிகளில் பயன்படுத்துகிறார். “ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே” (1 கொரிந்தியர் 12,5 முதல் 6) என்று பவுல் கூறுகிறார்.
“இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்” (வசனம் 9) என்று அந்தப் பெண் எலிசாவைக் குறித்துச் சாட்சி சொன்னாள். நமது நடக்கையைப் பார்த்து, மக்கள் நம்மை, “தேவனுடைய மனிதன்” என்றும் “பரிசுத்தவான்” என்றும் அழைத்தால் அதுவே நம்முடைய நற்குணத்திற்கு கிடைக்கிற மிகப் பெரிய சான்றாகும். எலிசாவைப் போலவே, மோசே, சாமுவேல், தாவீது, எலியா, தீமோத்தேயு போன்றோரும் தேவனுடைய மனிதர்கள் என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். நாம் தேவனுடைய மனிதர்கள் என்று அழைக்கப்படுவதற்கு, ஒரு தீர்க்கதரிசியாகவோ, ஒரு ராஜாவாகவோ, ஊழியக்காரர்களாகவோ, நியாயாதிபதியாகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு விசுவாசியாக, நமக்கு அளித்திருக்கிற பொறுப்பை உண்மையுடன் நிறைவேற்றி, நமது நடக்கையில் பரிசுத்தமாக வாழ்ந்தால் அதுவே சிறந்தது.