March

சோதனையின் ஊடாகச் சமாதானத்தோடிருத்தல்

2025 மார்ச் 11 (வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:13-17)

  • March 11
❚❚

“அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்”(வச.17).

நம்மனைவருக்கும் ஒரு சிறப்புக் கண் கண்ணாடி தேவைப்படுகிறது. ஏனெனில் நாம் எல்லாவற்றையும் அவை உண்மையில் இருப்பதைப் போலப் பார்க்க முடிகிறதில்லை என்பதுதான். பகலின் குளிர்ச்சியான வேளையில் உலாவுகிற தேவனைக் காணும்படியே ஆதாமும் ஏவாளும் படைக்கப்பட்டிருந்தனர். ஆனால், “நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்” (ஆதி. 3:5) என்னும் சாத்தானின் வஞ்சகப் பேச்சை நம்பி என்றைக்கு ஏவாள் அதைப் புசித்தாளோ அன்றைக்கே தேவனைக் காணும் அவளுடைய கண்கள் மூடப்பட்டன. அன்று முதல் ஏவாளின் பிள்ளைகளாகிய நாம் அனைவருமே கண்கள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் தேவனுடைய மகத்துவங்களைக் காணக்கூடாதவர்களாகவே இருக்கிறோம்.

இப்படி இருந்தாலும் பல்வேறு தருணங்களில் கண்களை மூடியிருக்கிற செதில்கள் நீக்கப்பட்டு மனிதர்கள் யதார்த்தத்தையும் நிஜத்தையும் கண்ட நிகழ்வுகளையும் பல்வேறு இடங்களில் வாசிக்கிறோம். பாலைவனத்தில் தண்ணீர் துரவைக் கண்ட ஆகார், துக்கத்துடன் எம்மாவு கிராமத்துக்குச் சென்ற இரு சீடர்கள், மத்தியான வேளையில் தமஸ்குவின் நெடுஞ்சாலையில் பயணம் செய்த பவுல், மறுரூப மலையில் பேதுரு உள்ளிட்ட சில சீடர்கள். இப்பொழுது எலிசாவின் வேலைக்காரன். ஆம், சில நேரங்களில் நம்பாதவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் தேவன் தம்முடைய மகத்துவத்தைக் காணும்படி வெளிப்படுத்திக் காண்பிக்கிறார்.

இஸ்ரவேலுக்கு விரோதமாக அசீரியப் படைகள் வந்தபோதெல்லாம் அதை தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்திக் காட்டிய தேவன், இந்தமுறை அவர்கள் அந்தத் தீர்க்கதரிசிக்கு விரோதமாக வந்தபோது அவனுக்கு வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேவன் எப்போதும் ஒரே மாதிரியாகச் செயல்படுகிறதில்லை. எலியாவைக் கைது செய்யும்படி வீரர்கள் வந்தபோது, வானத்திலிருந்து அக்கினி புறப்பட்டு வந்து அவர்களை எரித்துப் போட்டது. முன்னொரு முறை இதே எலிசாவைக் கேலி செய்த இளைஞர்களை காட்டிலிருந்து புறப்பட்டு வந்த கரடிகள் கடித்துக் கொன்றன. ஆனால் இப்பொழுது தேவன் அவ்விதமாகச் செயல்படவில்லை. அவர் ஆராய்ந்து முடியாத அதிசயங்களையும் எண்ணி முடியாத பெரிய காரியங்களையும் செய்கிறவர். அவருடைய சிந்தையை அறிந்தவர் ஒருவருமிலர். அவருடைய கற்பனை வளத்துக்கும், சிந்தனைத் திறனுக்கும் ஒப்பானவர் எவருமிலர்.

எலிசா தன் வேலைக்காரனின் கண்களைத் திறக்கும்படி ஜெபம் செய்தான். தேவனுடைய நிஜத்தைப் புரிந்துகொண்டவர்கள் அறியாதவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது அவசியம். மலையளவு பெரிய பிரச்சினைகள்கூட “கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும்” என்ற ஒரு சிறிய ஜெபத்தின் மூலமாக தீர்த்துவைக்கப்படும். ஆவிக்குரிய குருட்டுத்தன்மையே இன்றைய காலத்து விசுவாசிகளின் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இப்படி இருக்கிறபடியால்தான் நாம் தேவனுடைய பிரசன்னத்தின் மீது அல்லாமல், கண்ணுக்குத் தெரியும் அச்சுறுத்தல்களைக் கண்டு பயந்து நிற்கிறோம். நமக்குச் சோதனைகளும் எதிர்ப்புகளும் வருகிறபோது நாம் பயப்படாமல் சமாதானமாய் இருப்பதற்கான வழிகளில் ஒன்று ஜெபம் செய்வதுதான். நமக்கு எதிராக எத்தகைய ஆபத்துகள் எவ்விதமான வடிவில் வரும் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியாது. ஆனால் நாம் எப்போழுதும் ஜெபம் செய்து விழிப்புடன் இருக்க முடியும் என்பதை நான்றாகப் புரிந்துகொள்வோமாக.