2025 மார்ச் 7 வேதபகுதி: 2 ராஜாக்கள் 6:4-6
- March 7
“அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது”(வச. 6).
தீர்க்கதரிசிகளின் புத்திரர் மரம் வெட்டுவதற்காக யோர்தான் ஆற்றருகே சென்றார்கள் (வசனம் 4). அவர்களோடு எலிசாவும் சென்றான். எலிசாவின் வாழ்க்கையில் சற்று முன்னர்தான் இரண்டு செயல்கள் நடைபெற்றிருந்தன. ஒன்று சீரியாவின் தளபதி நாகமானின் தொழுநோயை அற்புதமான வகையில் குணமாக்கியது. மற்றொன்று தன்னுடைய நெருங்கிய உதவியாளன் கேயாசியின் வீழ்ச்சி. ஒன்று பெருமைக்குரிய செயல், மற்றொன்று கவலைக்குரிய செயல். ஆயினும் இவையிரண்டும் தன்னுடைய அடுத்தகட்ட நகர்வுக்குத் தடையாயிராதபடிக்குப் பார்த்துக்கொண்டான்.
மேலும், சீரியாவுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த நாகமானை குணமாக்கியதன் வாயிலாகப் பெருமை கொள்ளவுமில்லை, கடினமான மரம் வெட்டும் வேலையிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவுமில்லை. ஒரு ராணுவத் தளபதியின்மேல் கொண்டிருந்த அதே அக்கறையையும் கரிசனையையும் உண்மையுள்ள கர்த்தருடைய ஊழியக்காரர்கள் மீதும் காட்டினான். ஆராய்ந்து முடியாத அதிசயமான காரியங்களையும், எண்ணற்ற அற்புதங்களையும் செய்திருந்தாலும் எளிய மனிதர்களாகிய தன்னுடைய பண்ணிரண்டு சீடர்களுடனே நாட்களைச் செலவழித்த நம்முடைய ஆண்டவரின் சாயலை இந்த எலிசாவிடம் காண்கிறோம்.
“ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது” (வசனம் 5).” ஊழியம் செய்வதில் மும்முரமாய் இருக்கும்போது நம்முடைய ஆவிக்குரிய கூர்மையை இழந்து விடக்கூடாது” என்னும் இன்றியமையாத பாடத்தை இங்கே கற்றுக்கொள்கிறோம். தேவனுடைய ராஜ்யத்தின் விரிவாக்கப் பணியில் நேரிடுகிற தடைகளையும், புதிய சவால்களையும் எதிர்கொள்வதற்கு நாம் எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாகவும் கவனமுள்ளவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
கோடாரியைத் தவறவிட்ட மனிதன்: “ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே” என்று கூவினான் (வசனம் 5). ஆம், அவன் இந்தக் காரியத்தை உடனடியாக எலிசாவின் பார்வைக்குக் கொண்டு சென்றான். தோல்விகள் ஏற்படுவது இயல்பு, ஆயினும் அதை உடனடியாக ஆண்டவரின் சமூகத்துக்குச் கொண்டு செல்வதும், அதற்குத் தீர்வு காண முயற்சிப்பதும் மிகவும் முக்கியமானது. நம்முடைய அற்பமானதும் சிறியதுமான தேவைகளுக்கும் நம்முடைய தேவன் செவிகொடுக்கிறவராகவும், அதைச் சரிசெய்கிறவராகவும் இருக்கிறார்.
“தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்” (வசனம் 6). அந்த மனிதன் அந்த இடத்தைச் சுட்டிக் காண்பித்தான். நம்முடைய தோல்விகள் சரிசெய்யப்படுவதற்கும், வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கும் நமது தவறுகள் சரியாக அடையாளம் காணப்பட வேண்டியது அவசியம். எவ்வித ஒளிவுமறைவுமின்றி அவை அறிக்கை செய்யப்பட வேண்டியது அவசியம். கேயாசியைப் போன்றோருடைய தவறுகள் நமக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கேயாசி தன் தவறை மறைத்தான், ஒத்துக்கொள்வதற்கு மறுத்தான், முடிவாக தன் ஸ்தானத்தை இழந்தான். இத்தகைய நிலைக்கு நாம் ஆளாகிவிடக் கூடாது. நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால் எல்லாவற்றையும் மன்னித்து நம்மைப் புதுப்பித்துப் பயன்படுத்துவதற்கு ஆண்டவர் எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறார். எப்பொழுதும் நமக்கு திறந்தே இருக்கிற இந்தக் கிருபையின் வாசலை நாம் பயன்படுத்திக்கொள்வோமாக.