2025 மார்ச் 5 வேதபகுதி: 2 ராஜாக்கள் 5:27
- March 5
“ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்”(வச. 26).
எலியாவுக்குப் பின் எலிசா கர்த்தருடைய தீர்க்கதரிசியாக விளங்கியதைப் போன்று, எலிசாவுக்குப் பின் கேயாசி கர்த்தருடைய தீர்க்கதரிசியாகப் பயன்பட்டிருக்க வேண்டியவன். தன் பணத்தாசையால் ஒரு மாபெரும் பணியை இழந்துபோனான். இன்றைய நாட்களிலும்கூட பண ஆசை பல கர்த்தருடைய ஊழியக்காரர்களை ஊழியத்தைவிட்டு அப்புறப்படுத்த மூலகாரணமாக இருந்திருக்கிறது அல்லது பண ஆசையினால் தங்கள் செல்வாக்கை இழந்துபோயிருக்கிறார்கள். பண ஆசையினால் வருகிற தீமைக்கு நாம் தப்ப வேண்டுமானால், நாம் அவற்றிலிருந்து விலகி ஓடி, “நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாட” (1 தீமோ. 6:11) வேண்டும் என்று பவுல் நம்மை அறிவுறுத்துகிறார். பவுல் இந்த வசனத்தை எழுதுவதற்கு முன், பணத்தைப் பெற்றுக்கொள்ள நாகமானின் பின்னே ஓடிய கேயாசியின் ஓட்டம் நினைவுக்கு வந்திருக்கலாம்.
நாகமானிடமிருந்து எவ்விதமான வெகுமதியையும் பெற்றுக்கொள்வதற்கு எலிசா மறுத்தது ஏன்? “பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? (வச. 26) என்று கூறியது ஏன்? நாகமானின் வீட்டில் வேலைக்காரியாக இருந்து சிறு பெண், சமாரியாவிலுள்ள தீர்க்கதரிசிகளிடத்திற்குப் போனால் எஜமானனுடைய தொழுநோய் சரியாகும் என்று நம்பிக்கை கொடுத்து அனுப்பினாள். இது அவள் கர்த்தர் மீது கொண்ட ஆழமான நம்பிக்கையின் வெளிப்பாட்டின் வார்த்தைகள். அவளுடைய வார்த்தையில் கர்த்தரின் வல்லமை, அவருடைய மகிமை ஆகியவை மட்டுமே இருந்தன். இதை நம்பியே நாகமானும் வந்தான். எனவே நாகமான் தன் சுகத்தை பணத்தினால் சம்பாதித்தேன் என்றோ அல்லது ஊழியக்காரர்கள் பண ஆசை பிடித்தவர்கள் என்று கருதிவிடக்கூடாது என்றோ வாங்காமல் இருந்திருக்கலாம். கர்த்தருடைய மகிமையை குறைவாக மதிப்பிடச் செய்கிற வல்லமை பணத்துக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடவேண்டாம்.
மேலும் இஸ்ரவேல் நாடு ஆவிக்குரிய பின்மாற்றத்தில் இருக்கிறது. கர்த்தருடைய வசனத்தைப் போதித்து மக்களை உயிர்மீட்சி அடையச் செய்வதே பிரதான வேலையே தவிர, தங்கள் சொந்த நலனை முன்னேற்றமடையச் செய்வது பிரதான காரியம் அல்ல. கர்த்தருடைய சபையை தங்கள் சொந்த நலனை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆதார ஊற்றாகப் பார்க்கும் ஊழியர்கள் இன்றைய நாட்களில் பெருகியிருப்பது வருத்தத்திற்குரிய காரியம். இப்போக்கு பொதுமக்கள் மத்தியில் கிறிஸ்தவத்தைப் பற்றிய தவறான எண்ணத்தை விதைத்துவிடும்.
“தவறான முறையில் பணத்தைச் சம்பாதித்து அதனுடன் தேவனுடைய சாபத்தையும் சம்பாதித்தவர் கேயாசி மட்டுமே கடைசியான நபர் அல்ல” என்று தேவ விளக்கவுரையாளர் ஆடம் கிளார்க் கூறியிருக்கிறார். கேயாசி நாகமானின் பணத்தை மட்டுமே இச்சித்தான், ஆனால் தேவனோ அதோடுகூட அவனுடைய தொழு நோயையும் கொடுத்துவிட்டார். இது அவனை மட்டுமின்றி அவனுடைய சந்ததியையும் பாதித்தது. ஒரு புறஜாதி மனிதன் இரட்சிக்கப்பட்ட கர்த்தருடைய பிள்ளையாக மாறி, சந்தோஷத்துடன் சென்றான். தேவனை அறிந்த இஸ்ரவேலனோ தொழுநோயால் தேவனுடைய மக்களை விட்டு அந்நியராக்கப்பட்டான். ஆகவே நாம் ஒன்றைச் செய்வதற்கு முன் கர்த்தருடைய பார்வைக்கு பிரியமானதா என்பதை சோதித்து அறிந்துகொள்வோம்.