February

ஊழியரின் தாழ்மை

2025 பிப்ரவரி 15 (வேத பகுதி: 2 ராஜாக்கள் 4,27 முதல் 30 வரை)

  • February 15
❚❚

 “அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான்” (வசனம் 27).

சூனேமியாளின் ஆத்துமா இறந்துபோன தன் மகனின் நிமித்தம் மிகவும் துக்கமாயிருந்தது. ஆனால் இது எலிசாவுக்கு தெரியாமல் இருந்துவிட்டது. எலிசா இந்தக் குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்தவன், அவர்களுக்காக ஜெபித்து வந்தவன். எனினும் அந்தக் குடும்பத்தில் நேரிட்ட துக்கம் இவனுக்குத் தெரியவில்லை. கர்த்தரே இதை அவனுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டார். சில நேரங்களில் கர்த்தர் வெளிப்படுத்துவார், சில நேரங்களில் அவர் அதை மறைப்பார். தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளுக்கு தம்முடைய விருப்பத்தின்படி அறிவிக்கிறார், மற்றபடி அவர்களுடைய விருப்பத்தின்படி அல்ல. ஏன் கர்த்தர் எலிசாவுக்குச் சொல்லாமல் மறைத்தார்? இந்தப் பெண்மணியினுடைய வாயின் வார்த்தையினால் அதை எலிசா அறிந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் தீர்மானித்திருந்தார்.

கர்த்தர் நம்முடைய தேவைகளை நம்முடைய மனதின் குறிப்பறிந்து செய்தாலும், பல நேரங்களில் நாம் அவரிடத்தில் ஜெபித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். சூனேமியாள் எலிசாவின் காலைப் பிடித்துக்கொண்டு தன் மகனை உயிரோடு எழுப்பும்படி மன்றாடினாள். பல தருணங்களில் கர்த்தருடைய மனிதனுக்கு உணவு பரிமாறிய கரங்கள் இப்பொழுது அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டிருந்தன. தன் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகிறவர்தானே என்று அவள் ஒரு குறைந்த மதிப்பீட்டுடன் எலிசாவை அணுகவில்லை. மாறாக கர்த்தருடைய மனிதனுக்குக் கொடுக்க வேண்டிய கனத்துடனே அணுகினாள். அவ்வாறே எலிசாவும் அவளுடைய துக்கத்தை அறிந்து அவளை பரிவுடனே நடத்தினான். நம்முடைய ஆண்டவர் இந்த உலகத்தில் ஊழியம் செய்த நாட்களில், தம்மை நாடிவந்த பெண்களை குறிப்பாக அவளுடைய பாதங்களுக்கு பரிமள தைலம் பூசிய பெண், அவருக்கு முன்பாக மண்டியிட்டுக் கிடந்த விபசாரத்தில் பிடிக்கப்பட்ட பெண், தனது உதிரப்போக்கு நீங்க, அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட பெண் ஆகிய யாவரையும் கனிவுடன் பரிவுடனும் நடத்தின விதத்தையே எலிசாவின் செயலும் வெளிப்படுத்துகிறது.

“கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார்” என்னும் எலிசாவின் சொற்கள் அவனுடைய மனத்தாழ்மையை வெளிப்படுத்துகிறது. கர்த்தருடைய ஊழியர்களுக்கு அவர் தம்மை எவ்விதமான அளவில் நடத்துகிறார் என்பதை உணர்ந்து, அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். அந்த நாட்களில் வாழ்ந்த ஒரு பெரிய தீர்க்கதரிசி தான் எலிசா. கர்த்தர் அவனைக் கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். ஆயினும் சூனேமியாளின் காரியத்தில் கர்த்தர் நடந்துகொண்ட விதத்தை அவர் பொறுமையோடு அங்கீகரித்தார்.

இன்றைய நாட்களில் பிரபலமான ஊழியர்கள் முதல் உள்ளூர் சபைகளின் போதகர்கள் வரை கர்த்தர் தங்களுக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டார் என்பதுபோல நடந்துகொள்கிறார்கள். நாட்டு நடப்புகளை ஏதாவது ஒருவகையில் தங்களோடு தொடர்புபடுத்தி, அது கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார் என்பதைக் குறித்து தோராயமாக சொல்வதில் எல்லாரும் மும்முரமாயிருக்கிறார்கள். “கர்த்தர் இந்தக் காரியத்தை என்னிடம் சொல்லாதபடி மறைத்துவிட்டார் என்று பல போதகர்களும், பிரசங்கியார்களும் அறிக்கையிட்டால், அது திருச்சபைக்கு எவ்வளவோ நன்மையை உண்டாக்கியிருக்கும்” என்று திருவாளர் அலெக்சாண்டர் மெக்லாரன் கூறியிருக்கிறார். ஆம், கர்த்தர் சொல்லாததை, தனக்கு வெளிப்படுத்தினார் என்று பல பேர் சொன்னதினாலேயே திருச்சபைகள் பல தீமைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன.