January

ஜனவரி 3

எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைகளுக்கும், பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாகமெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் (ஆதியாகமம் 33,14).

யாக்கோபு தன் மந்தைகளின் கால்நடைகளுக்கும், பிள்ளைகளையும் குறித்த இந்தச் சித்திரம் கரிசனையை எவ்வளவு ஆழமாய்க் காட்டுகிறது. ஒரு தினமேனும் அவர்களின் சக்திக்கு மிஞ்சி விரட்டப்பட அவனுக்கு சம்மதம் இல்லை. ஏசாவைப்போன்ற பலசாலி எதிர்பார்க்கக்கூடிய அத்துணை வேகத்தில் அல்ல, அவர்களின் பலத்துக்கு தக்கபடியே அவன் அவர்களை நடத்த விரும்புகிறான். ஒருநாளில் எவ்வளவு தூரந்தான் செல்லக்கூடும் என்பதைத் திட்டமாய் அறிந்திருக்கிறான். அதை முக்கியமாக மனதில்கொண்டே தன் பிரயாண ஒழுங்குகளைச் செய்தான். அநேக ஆண்டுகளுக்குமுன் அவன் அந்த பாலைவன வழியில் சென்றிருக்கிறான். ஆகையால் வழியின் தூரம், வெயிலின்கொடுமை, வருத்தம் யாவற்றையும் அவன் அறிவான். ஆகையால் அவன் நான் அவர்களை மெதுவாய் நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான். இதற்கு முன்னே நீங்கள் இந்த வழியாய் ஒருபோதும் நடந்துபோனதில்லை (யோசுவா 3,4).

நாம் இந்த வழியாய் முன்னே ஒருபோதும் நடந்துபோனதில்லை. ஆனால் இயேசு இரட்சகர் சென்றிருக்கிறார். இது நாம் முற்றும் நடவாததும் அறியாததுமான பாதை.

ஆனால் நம் தேவனுக்கு அனுபவத்தால் அவை யாவும் தெரியும். அங்கே நமக்கு மூச்சுத் திணறக்கூடியதான செங்குத்தான இடமும் உண்டு. நமது பாதங்களை நோகச்செய்யக்கூடிய கூரிய கற்கள் உண்டு. புரண்டோடும் ஆறுகளை நாம் கடக்க நேரிடும். இவை யாவற்றையும் இயேசு கிறிஸ்து கடந்திருக்கிறார். அவர் தமது பயணத்தால் களைப்படைந்திருக்கிறார். வெள்ளம் பல தடவை அவர்மீது புரண்டோடிற்று. ஆனால் அது அவருடைய அன்பை அழித்துப்போடவில்லை. அவர் தாம் சகித்த பாடுகளின்மூலமாய்ச் சிறந்த தலைவர் ஆனார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார். நாம் மண்ணென்று நினைவுகூறுகிறார். அவருடைய நடத்துதல் இரக்கமுள்ளதாவென்று நீ சந்தேகிக்கும்போது, இதை நினைவிற் கொள். அவர் எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிருக்கிறார். உன் பாதங்கள் தாங்கக்கூடிய அளவிற்குமேல் உன்னை ஓர் அடியும் எடுத்துவைக்கச் செய்யமாட்டார். அடுத்த அடி எடுத்துவைக்க இயலாது என்று நீ கவலைகொள்ளாதே. கர்த்தர் உன்னைப் பலப்படுத்துவார் அல்லது திடீரென்று அடுத்த அடி எடுத்துவைக்கத் தேவை இல்லாதபடி செய்வார்.

எப்போதும் புல்வெளிகளிலா? அல்ல
சில வேளை தம் அன்பினால்
யாவும் அறிந்தவர் என்னைநடத்துகிறார்
இருள் நிறைந்த கஷ்டபாதையில்
உயரமும் அழகுமுள்ள மலை உச்சியானாலும்
கதிரவனற்ற பள்ளமானாலும்
அங்கு நான் வசித்தல் நல்லதே
என் இயேசு நாதர் அங்கு இருக்கிறார்.