April

ஏப்ரல் 18

ஏப்ரல் 18

அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார் (சங்.37:5).

நான் ஜெபித்தபின், ஜெபித்த காரியம் கைகூட என்னால் ஆனதையெல்லாம் என் கடமை என்று ஒருகாலத்தில் எண்ணினேன். அவர் எனக்கு அதைவிட ஒரு சிறந்த வழியைக் காட்டினார். என் சுயப்பிரயாசம் அவருடைய வேலைக்கு எப்போதும் தடங்கலாயிருக்கிறதென்பதைக் காட்டினார். நான் ஜெபித்து எல்லாவற்றிற்கும் முழுவதுமாய் அவரையே நம்பும்போது துதியோடு காத்திருந்து அவர் செய் என்று சொல்வதை மட்டுமே செய்யவேண்டுமென அவர் விரும்புகிறார். ஒன்றும் செய்யாமல் அவரையே நம்பிச் சும்மா உட்கார்ந்திருத்தல் ஆபத்துக்கிடம் கொடுப்பதுபோல் தோன்றுகிறது. போரை நாமே நடத்தவேண்டும் என்கிற சோதனை அடிக்கடி அதிகமாய் உண்டாகிறது.

தண்ணீரில் மூழ்கப்போகும் மனிதன் ஒருவன், தன்னைக் காப்பாற்றுகிறவனுக்கு உதவிசெய்ய முயன்றால் அவனைக் காப்பது மிகவும் கடினமான காரியம் என்பது நாம் யாவரும் அறிந்த விஷயம். அதுபோல நமது போரை நாமே தொடுப்போம் என்று பிடிவாதம் செய்யும்போது, தேவன் நமது போரை நமக்காக எடுத்து நடத்துவது முடியாத காரியம். நாம் தலையிடுதல் அவருடைய வேலைக்கு தடையாகும்.

பூலோகச் சக்தி செயல்படும்போது பரலோக சக்தி செயல்ப்பட முடியாது. நம்முடைய ஜெபத்திற்கு விடை தர தேவனுக்கு நேரம் வேண்டும். இவ்வகையில் நாம் கர்த்தருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கத் தவறுகிறோம். ஒரு ரோஜா மலருக்கு வர்ணம் கொடுக்க தேவனுக்கு நேரம் வேண்டும். கோதுமையிலிருந்து ரொட்டி செய்ய, தேவனுக்கு நேரம் ஆகும். அவர் மண்ணை எடுக்கிறார். அதை உடைக்கிறார், அதை மிருதுவாக்குகிறார். அதை வளமுள்ளதாக்குகிறார். பனி மழையினால் அதை நனைக்கிறார். ஜீவனால் அதை உஷ்ணம் பெறச்செய்கிறார். இலைகளும், தண்டுகளும், பொன்னிறத் தானியமணிகளும் கொடுக்கிறார். அதன்பின் கடைசியாகப் பசியுற்ற மக்களுக்கு ஆகாரமாக அப்பத்தைக் கொடுக்கிறார்.

இவை எல்லாவற்றிற்கும் நேரம் தேவை. ஆகையால் நாம் விதைத்துப் பண்படுத்தி கர்த்தருடைய நோக்கம் நிறைவேறுமளவும் நம்பிக்கையில் நிலைத்துக் காத்திருக்க வேண்டும். காலம் என்னும் விஷயத்தில் தேவனுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கவேண்டும். அதே பாடத்தை நமது ஜீவியத்திலும் கற்றக்கொள்ளவேண்டும். விடை அருள தேவனுக்கு நேரம் தேவை.