April

ஏப்ரல் 17

ஏப்ரல் 17

கர்த்தருடைய கரம் இதைச் செய்த(து) (யோபு 12:9).

அநேக ஆண்டுகளுக்குமுன் ஆப்பிரிக்கா கண்டத்திலுள்ள சுரங்கத்தில், உலக சரித்திரத்தில் இதுவரை காணப்படாத மாட்சிமையான வைரக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது இங்கிலாந்து மன்னருக்கு அவருடைய மணிமுடியில் ஒளிவிடும்படி வெகுமதியாக அளிக்கப்பட்டது. வெட்டப்படும்படி      ஆம்ஸ்டர்டாமுக்கு மன்னர் அதை அனுப்பினார். அது ஒரு கைதேர்ந்த வைரம் இழைப்போன் கையில் கொடுக்கப்பட்டது. அவன் அதை என்ன செய்தானென்று நினைக்கிறீர்கள்?

அவன் அந்த விலைமதிப்பிலா கல்லை எடுத்து அதில் ஒரு வடு உண்டாக்கினான். பின்பு அதைத் தன் ஆயுதத்தால் பலமாய் அடித்தான். இதோ அந்த ஒப்பிலா வைரக்கல் அவன் கையில் இரண்டாய் பிளந்துவிட்டது. என்ன கவலையீனம்! என்ன பொறுப்பற்ற செயல்! எவ்வளவு வீண்! அந்த அடி சில வாரங்களாக ஆராய்ந்து திட்டம்பண்ணின அடி. அந்தக் கல்லைப்போல் மாதிரி வைரங்கள் செய்யப்பட்டன. அதைப்போல் படம் வரையப்பட்டது. அதன் தன்மை, அதிலுள்ள குறை வெடிப்பு வரிகள் யாவும் துல்லியமாய் ஆராயப்பட்டன. உகிலேயே கைதேர்ந்த வைரம் இழைப்போன் கையில்தான் அது கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த அடி தவறு என்று நீ சொல்லுகிறாயா? இல்லை. அதுவே வைர இழைப்பின் திறத்தில் மகா உச்சநிலை. அந்த அடி ஒன்றே அதன் பூரண அழகையும், வடிவத்தையும், பிரகாசத்தையும் கொண்டுவரக்கூடிய காரியம் என்று அவன் அறிவான்.

அந்த அபூர்வ ஒப்புயர்வற்ற கல்லை அழித்துவிடுவதுபோல காணப்பட்ட அந்த அடியே, உண்மையில் அதைப் பூரணமாய் மீட்டதாகும். ஏனென்றால் அந்த வைரப் பரிசோதகன் தனது அனுபவம் மிகுந்த கண்களோடு பார்க்கையில், கரடு முரடாய், சுரங்கத்திலிருந்து வந்தபடியே, செதுக்கப்படாதிருந்த அந்த வைரத்தில் இரண்டு வைரங்கள் இருப்பதைக் கண்டான். அந்த இரு துண்டுகளிலிருந்து ஒரு மாட்சிமையான வைரங்கள் செதுக்கினான்.

அப்படியே நம் ஜீவியத்தின்மீது ஒரு பலத்த அடி விழ தேவன் அனுமதிக்கிறார். இரத்தம் பீரிடுகிறது. நரம்புகள் வதைப்படுகின்றன. ஆத்துமா வேதனையில் கதறுகிறது. அந்த அடி அதிகத் தவறாக உனக்குத் தோன்றுகிறது. அது பிசகல்ல. நீ தேவனுக்கு உலகிலேயே விலைமதிப்பில்லா ஆபரணமாயிருக்கிறாய். சர்வ உலகத்திலும் கைதேர்ந்த வைரம் இழைப்போர் அவரே.

ஒருநாள் நீ அரசரின் கீரிடத்தில் ஜொலிக்க வேண்டும். இப்பொழுது நீ அவர் கரத்திலிருப்பதால் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்பதை அவர் அறிவார். தேவனுடைய அன்பு அதை அனுமதித்தது அதன் ஆழத்திலிருந்து நீ காணாததும், நினையாததுமான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பாக்கியங்களையும் தருவதாலன்றி, பயந்து நடுங்கும் உன் ஆத்துமாவின்மேல் ஓர் அடிதானும் விழாது.

ஜார்ஜ் மெக்டோனால்ட் எழுதிய புத்தகங்கள் ஒன்றில் பின்வரும் சம்பாஷணை துணுக்கு இருக்கிறது. மேபர் அம்மாள் மிகக் கசப்பபோடு கர்த்தர் ஏன் என்னை உண்டாக்கினார்? என்னை உண்டாக்கியதின் நோக்கத்தை நிச்சயமாகவே நான் அறியக்கூடவில்லையே என்றாள்.

அதற்கு டாரதி, ஒருவேளை இதுவரை அதிகப் பயனில்லை போலும், ஆனால் அவர் உன்னைச் செய்து முடிக்கவில்லை. அவர் உன்னை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அதற்குள் நீ போராடுகிறாய் என்றாள்.

மனிதர் நாங்கள் இன்னும் உருவாக்கப்படும் நிலையில்தான் இருக்கிறோம் என்று நம்பவேண்டும். உருவாக்கப்படச் சம்மதிக்க வேண்டும். குயவன் களிமண்ணைக் கையாளுவதுபோல் அவர் நம்மை கையாள முற்றிலும் இடம் கொடுக்கவேண்டும். அவருடைய சக்கரம் சுற்றுகையில் அதன் அசைவுக்கு ஏற்றவாறு பணிந்து நம்பிக்கையான கிரியையால் வளைந்து கொடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் கொஞ்ச காலம் அவருடைய கரத்தின் அழுத்தம் வேதனை கொடுத்தாலும் அதைச் சந்தோஷமாய் வரவேற்கக் கூடியவர்கள் ஆவோம். சிலவேளைகளில் ஒரு புத்திரனை மகிமைக்குக் கொண்டு வருவதான தெய்வீக நோக்கத்தை நம்புவது மாத்திரமல்ல, காணவும் செய்வோம்.

அன்பின் தேவன் தகுதி என்று கண்டாலன்றி,
ஓர் அம்பும் உன்னைத் தாக்காது.