April

ஏப்ரல் 16

ஏப்ரல் 16

விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து புறப்பட்டுப்போனான் (எபி.11:8).

அவன் எங்கு செல்கிறான் என்பது அவனுக்கே தெரியாது தான் தேவனோடு சென்றான் என்ற அறிவு ஒன்றே அவனுக்குப் போதுமானதாயிருந்தது. வாக்குத்தத்தங்களைச் சார்ந்திருப்பதைவிட அதிகமாய் வாக்குத்தத்தம் தந்தவரைச் சார்ந்திருந்தான். அவன் கஷ்டங்களைப் பாராமல், தன் வழியைத் தனக்குக் காண்பித்த இராஜாவும், நித்தியரும், அழிவில்லாதவரும் காணக்கூடாதவரும் ஆகிய சர்வ ஞானமுள்ள தேவன் அதைச் சரியென்று காட்டக்கூடும் என்பதையே பார்த்தான். இது எவ்வளவு மகிமையான விசுவாசம். இதுவே உன் வேலை. இவைகளே நீ சாதிக்கக் கூடியவைகள். கப்பல் படையின் தலைவராகிய ஆண்டவரின் ஞானத்தில் அசையாத நம்பிக்கை இருந்தால் பின்னால் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய கட்டளைகளைத் திறந்து பார்க்காமலேயே அவரோடுகூட கப்பலைச் செலுத்திச் செல்ல சம்மதிப்பாயல்லவா? இவ்வுலகத்தின் சிறப்பு ஒன்றும் விண்ணுலகின் எள்ளளவுக்கும் ஒப்பாகாது என்ற நிச்சயம் உனக்கு உண்டானால் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கிறிஸ்துவைப் பூரணச் சம்மதத்தோடு பின் தொடர்வாய்.

விசுவாசக் கிரியைகளைச் செய்ய உன் தேவனோடு சந்தோஷமாய்ப் புறப்பட்டால் மாத்திரம் போதாது. உன் மனோபாவனையில், உன் பயணத்தில் எவைகளைச் செய்யவேண்டும் என்று விரும்பியிருந்தாயோ அவைகளைச் சிதைத்துப்போடு.

நீ எதிர்பார்த்ததுபோல ஒன்றும் நடவாது. உன் வழிகாட்டி பழகின பாதையில் செல்லமாட்டார். நீ சொப்பனத்திலும் பார்த்திராத வழியில் உன்னை நடத்துவார். அவர் பயமறியார். அவர் உன்னோடிருக்கையில், நீ ஒன்றுக்கும் பயப்படக்கூடாதென்று அவர் எதிர்பார்க்கிறார்.

பகல் சென்றது நான் தனித்துப் பெலவீனனாய்
சூரியனில்லா குளிர்ந்த நாட்டினுள்
தடவி வழிதேடி சென்றேன்.
ஒளிக்கு செல்லும் பாதையை
என்னால் காண முடியவில்லை – ஆனால் இருளில்
கர்த்தர் என் கரத்தைப் பற்றினார்.

நான் வழிவிலகாமல் என்னை நடத்தினார்
நான் அறியாத புது வழியில்
பத்திரமாய்க் கொண்டுவந்து சேர்த்தார்
அமர்ந்த தண்ணீர்களின் வழியேயும்
பசும்புற்றரையிலும் அவரைப் பின் தொடர்ந்தேன்
பாதை முள், கல் இன்றி சுத்தமாயிருந்தது.

காரிருள் தன் பயங்கரத்தை இழந்தது
காத்திருந்த என் கண்கள் மெதுவாக
பொழுது புலர்வதைக் கண்டன.
சூரிய ஒளியில் பத்திரமாய்
என் கரம் அவர் கையில் வைத்து நடந்தேன்
இதோ இரவு நீக்கிப் போயிற்று.