April

ஏப்ரல் 15

ஏப்ரல் 15

உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன் (சங்.119:42).

தேவன் தாம் சொன்னதை செய்வார் என்று எவ்வளவு உறுதியாய் நம்புகிறோமோ, அவ்வளவில் நமது விசுவாசம் பலனுள்ளதாக அல்லது பலனற்றதாக இருக்கிறது. நமது உணர்ச்சிகள், நம் மனதில் பட்ட காரியங்கள் வெளிப்பார்வைக்குத் தோன்றுபவை. இவற்றிற்கும் விசுவாசத்திற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. விசுவாசத்திற்கு இவை ஒன்றும் தேவையில்லை. இவைகளை விசுவாசத்தோடு இணைத்துவிட விரும்பினால் நாம் தேவனுடைய வார்த்தைகளை நம்பிச் சார்ந்திருப்பவர்களல்ல. விசுவாசம் தேவனுடைய வார்த்தை ஒன்றில் மாத்திரமே சார்ந்திருக்கிறது. அவருடைய வார்த்தைகளின்படி செய்வார் என்று நம்பினால் நமது இதயத்தில் சமாதானம் இருக்கும்.

நம் ஆத்துமத்தில் நாம் அசீர்வாதம் பெறவும், பின்பு சபையில் ஆசீர்வாதம் உண்டாகவும், பின் சபைக்குப் புறம்பானவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டாகவும், நம் விசுவாசத்தைப் பயன்படுத்தி மகிழவேண்டும். இப்படி விசுவாசத்தைப் பயன்படுத்தலை ஏற்றுக்கொள்ள முன்வராமல் நாம் பின்வாங்குகிறோம். நமக்குச் சோதனை வரும்போது நாம்: நான் வருங்காலத்தில் ஏதோ ஓர் இன்பத்தை அனுபவிக்க என் பரமபிதா இந்தப் பாத்திரத்தை என் கையில் கொடுத்திருக்கிறார் என்று சொல்லவேண்டும்.

சோதனைகளே விசுவாசத்தின் உணவு நம்மை நாம் நம் பரமபிதாவின் கரத்தில் விட்டுவிடுவோமாக. தம் பிள்ளைகளுக்கு நன்மை செய்வதே அவர் இருதயத்தின் மகிழச்சி. சோதனைகளும், கஷ்டங்களும் மாத்திரமே நம் விசுவாசம் பயனுள்ளதாய் வளரச்செய்யும் வழிகளல்ல. வேதத்தை வாசித்து, தேவன் தமது வார்த்தைகளின்மூலம் தம்மை வெளிப்படுத்தியிருப்பதை அறிந்துகொள்வதும் ஒரு வழியே.

அவரோடு தொடர்பு கொண்டதால், அவர் ஓர் அன்பின் சொரூபி என்று நீ கண்டிருக்கிறாயா? நீ அவ்வளவாய் அவரை அறிய வேண்டுமென்று தேவனை வேண்டிக்கொள் என்று உன்னை அன்பாய் கேட்டுக்கொள்கிறேன். அவருடைய பட்சத்தையும் அனுதாபத்தையும் நீ கண்டு வியக்கவேண்டும். தேவன் எவ்வளவோ நல்லவர் என்பதை நீ பிறருக்குக் காட்டவேண்டும். பின்னும் தமது பிள்ளைகளுக்கு நன்மை செய்வதால், அவர் மனம் எத்தனையாய் ஆனந்தங்கொள்ளும் என்று பிறர் காணச் செய்யவேண்டும்.

நமது அந்தரங்க ஆத்துமத்தில் அவரை எவ்வளவாய் நெருங்கிச் சேருகிறோமோ அவ்வளவாய் நாம் நம்மை அவர் கையில் ஒப்புவிக்கத் தயாராயிருப்போம். அவருடைய செயல்களில் திருப்தியாயிருப்போம். நமக்குச் சோதனை வரும்போது நாம் கர்த்தர் நன்மை செய்வார் என்ற நிச்சயத்தோடு அவர் இந்த சோதனையால் என்ன நன்மை செய்வார் என்று எதிர்பார்த்திருப்போமாக. இப்படியிருந்தால் நாம் உலகத்தில் மதிப்புக்குரிய சாட்சிகளாவோம். பிறர் கையைத் திடப்படுத்துவோம்.