April

ஏப்ரல் 11

ஏப்ரல் 11

நான் உங்களுக்கு இருளிலே சொல்வதை நீங்கள் வெளிச்சத்தில் சொல்லுங்கள்.  (மத்.10:27).

நம்முடைய தேவன் அடிக்கடி நம்மிடம் பேசுவதற்காக நம்மை இருளில் அழைத்துச் செல்கிறார். நமக்கு அருமையானவர்களை இழந்த மரண இருளுக்குள்ளும், துக்கம் ஏமாற்றம் என்னும் இருளுக்குள்ளும் அழைத்துச் செல்கிறார்.

பின்பு அவர் நமக்கு உன்னதமானதும், ஆச்சரியமானதும், அழிவில்லாததும், முடிவில்லாததுமான தமது இரகசியத்தைச் சொல்கிறார். உலக ஒளியால் கூசிப்போன நம் கண்களால், பரலோக நட்சத்திரக் கூட்டங்களைக் காணச் செய்கிறார். உலகத்தின் குழப்பங்கள், சப்தங்களுக்கிடையில் நமது செவிகளைத் தமது மெல்லிய சத்தத்தைக் கேட்கும்படி செய்கிறார்.

இப்படிப்பட்ட வெளிப்படுத்துதல் செயலாற்றும் ஒரு கடமையை நம்மேல் சுமத்துகிறது. நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள். வீடுகள் மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
இருளிலும் மறைவான இடத்திலுமே நாம் எப்பொழுதும் தரித்திருக்க முடியாது. சீக்கிரமாக வாழ்வின் புயலிலும் வேலையிலும் ஈடுபடவேண்டும். அப்பொது நாம் அவரிடமிருந்து அறிந்துகொண்டதை பிறர்க்கு அறிவிக்க வேண்டும்.

துக்கத்தின் அதிக துக்கமான வேளை, அத்துக்கம் ஏன் ஏற்பட்டது என்று நமக்கு விளங்காதிருப்பதே. மேற்சொன்ன காரியங்கள் துக்கத்திற்கு ஓர் அர்த்தம் கொடுக்கின்றன. நான் எவ்வளவு பிரயோஜனமற்றவன். மனித வர்க்கம் முன்னேற நான் என்ன செய்கிறேன்? என் ஆத்துமத்திலுள்ள விலைமதிப்பிலா வாசனை ஏன் வீணாகிறது?

நம்பிக்கையிழந்து துக்கிப்பவன் மேற்சொன்ன கேள்விகளைத் தனக்குள் கேட்கிறான். ஆனால் தேவன் ஒவ்வொன்றிலும் ஒரு நோக்கம் வைத்திருக்கிறார். தேவனோடு முகம் முகமாய் பேசுவதைக் கேட்கவும், மலையடிவாரத்திலுள்ள தன்னைப்போலொத்த அநேகருக்கு, அவர் சொன்ன செய்திகளை எடுத்துச் சொல்லவும், அவர் தமது பிள்ளையை உன்னதமான உயரங்களுக்கு வரச் செய்கிறார்.

மோசே மலையின்மேல் தனித்திருந்து நாற்பது நாட்களும், ஒரேப் மலையில் எலியா செலவிட்ட நாட்களும், அரேபியாவில் பரிசுத்த பவுல் செலவிட்ட நாட்களும் வீணாகப் போயினவா?

பரிசுத்தமான வெற்றிகரமான ஜீவியத்தின் ஜீவ நாடியான விசுவாச வாழ்க்கைக்கு குறுக்கு வழி கிடையாது. தனித்திருந்து தேவனோடு ஐக்கியப்படுதல் அவசியம். நமது உடலுக்கு உணவு தேவையாயிருப்பதுபோல் நமது ஆத்துமாவுக்குக் கர்த்தரோடு ஐக்கியப்படுதல் என்ற பர்வதங்களும், பெரிய பாறையின் நிழலில் அமர்ந்து ஒய்ந்திருப்பதாகிய பள்ளத்தாக்குகளும் அவசியம். இருள், மாம்சத்துக்குரிய காரியங்களை மூடி, மனுஷ ஜீவியக் கிளர்ச்சியை, அமர்ந்திருக்கும் காலத்தில், நித்தியமான, முடிவில்லாத காட்சியைக் காண, கண்கள் திறக்கும்படி, நட்சத்திரங்களுக்குக் கீழ், திறந்த வெளியில் இரவைக் கழிக்க வேண்டியதும் அவசியமாகும். அப்பொழுதுதான் தேவபிரசன்னம் நம் ஆத்துமாவின் உறுதியான உரிமையாகும். அப்பொழுது நாமும் சங்கீதக்காரனோடு, தேவரீர் என் சமீபத்திலிருக்கிறீர் என்று சொல்லலாம்.

மாலையில் மலரும் அந்திமந்தாரையைப்போல், சில இருதயங்கள், ஜீவியத்திலுண்டாகும் துன்பம் என்னும் நிழலில் அழகாய் மலரும்.