April

ஏப்ரல் 9

ஏப்ரல் 9

இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது (ஆதி.42:36).

தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாக நடக்கிறது (ரோ.8:28).

அநேகருக்கு சக்தி தேவைப்படுகிறது. எப்படி சக்தி உண்டாகிறது? ஒருநாள் டிராலி வண்டிகள் மின்சார சக்தியால் ஓட்டப்படும் இயந்திரசாலையைக் கடந்து சென்றோம். அநேக உருளைகள் சப்தத்துடன் இரைந்து கொண்டிருப்பதைக் கேட்டு, நாங்கள் வேலையாள் ஒருவனை அச்சக்தியை எங்கனம் உற்பத்தி செய்கிறார்கள் என்று கேட்டோம்.

சக்கரங்கள் சுற்றுவதினாலும், அதனால் ஏற்படும் தேய்ப்பினாலும் உண்டாகிறது. உராய்தலே மின்சார ஓட்டத்தை உண்டாக்குகிறது என்று அவன் பதில் கூறினான்.

அவ்விதமாகவே கர்த்தர் உங்களில் அதிக சக்தியைக் கொண்டு வரவே வெகு நெருக்கத்தைக் கொடுக்கிறார். அதிகமாய் உராய்வதால் ஆவிக்குரிய சக்தியைப் பிறப்பிக்கிறார். சிலர் இவ்விதமாய் வல்லமை பெற்று வேதனை உண்டாக்கும் வழிக்கு மேலாக எழும்ப அதைப் பயன்படுத்தவிரும்பாமல் அந்நெருக்கடியிலிருந்து ஓட முயல்கிறார்கள். சக்தியைச் சமநிலையில் வைக்க எதிர்ப்பு அவசியம். மத்திய பாகத்தை நோக்கி இழுக்கும் கவர்ச்சியும், வெளியே தள்ளும் சக்தியும் இருப்பதால்தான் நம் பூமி தன் மண்டலத்தில் இருக்கிறது. ஒன்று இழுக்கிறது, ஒன்று தள்ளுகிறது. ஆகையால் அழிவடையத்தக்கதாய் இடைவெளியில் பாய்ந்து செல்லாமல், தன் ஒழுங்கான மண்டலத்தின் வழியாய், மத்தியிலுள்ள சூரியனைச் சுற்றி செல்கிறது.

இவ்விதமாகவே தேவன் நம்மை நடத்துகிறார். முன்னோக்கச் செய்யும் சக்தி மாத்திரம் போதாது. அதே அளவு பின்னோக்கித் தள்ளும் சக்தியும் அவசியம். ஆகையால் ஜீவியத்தில், சோதனையாக வரும் கஷ்டங்களினாலும் நமக்குத் தீமையாகத் தோன்றும் காரியங்களினாலும், பின்னிழந்து நிற்கவைத்து, உண்மையில் நாம் முன்னேறிச் செல்லவும் நம் காரியங்கள் உறுதிப்படவும் அவர் உதவி செய்கிறார்.

இவ்விருவகைக் காரியங்களுக்காகவும் அவரைத் துதிப்போமாக. சிறகுகளோடு பாரத்தையும் ஏற்றுக்கொள்வோமாக. இவ்விதமே பரத்திலிருந்து வரும் ஊக்கம் பெற்று நமது உன்னத பரலோகத்துக்கடுத்த ஊழியத்தை நிறைவேற்றுவோமாக.

ஓர் இயந்திரசாலையில் உருளைகளும்,
சக்கரங்களும், தோல்பட்டைகளுமுண்டு
சில வேகமாயும், சில மெதுவாயும் சுற்றுகின்றன
சில முன்னோக்கித் தள்ளுகின்றன
சில பின்னால் இழுக்கின்றன.
சில மிருதுவாய்ச் சப்தமின்றிச் சுழல்கின்றன
சில கரகரவென்று ஓடுகின்றன
இடித்தும் படபடத்தும்
விட்டுவிட்டு அசைந்து கொண்டுமிருக்கின்றன.
வெகு குழப்பத்தில் முறையின்றித் தோன்றும் வகையில்
தூக்கித் தள்ளி ஓட்டி வேலையைச் செய்கின்றன.

சிறு நெம்புக்கோலிலிருந்து பெரிய சக்கரம் வரை,
ஒரே நோக்கத்தோடு வேலை செய்கின்றன
இதை முறைப்படி நடத்தும் புத்தியும்
அதைச் சரியாய் நடத்தும் சக்தியும்
வழிகாட்டும் கரமும் பின்னாலுண்டு
தேவனால் நேசிக்கப்பட்டவர்களுக்கு
யாவும் நன்மைக்காகவே நடக்கிறது.

தனியே எடுத்துப் பார்த்தால் சில மனதை வருத்தும்
சில தடை செய்யும், பின்னால் அழுக்கும்
ஆனால் இவையனைத்தும் ஒன்று சேரும்பொழுது
நன்மையே உண்டாகிறது.
நிறைவேறாத ஆசைகளும் வேண்டுதல்களும்,
நமக்குப் புலனாகாத நேர்மாறான காரியங்களும்
ஒன்றாகச் சேர்ந்து நன்மைக்கென்றே உழைக்கின்றன.
இவற்றை நிற்கச் செய்வதும், ஓடச் செய்வதும்
தடை செய்வதும், துவக்குவதும்
நிலை நாட்டுவதும், நடத்துவதும், பரம பிதாவின் கரமே.