April

ஏப்ரல் 8

ஏப்ரல் 8

அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்.  ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன் (2.கொரி.12:10).

நாம் இதை வார்த்தைக்கு வார்த்தையாகப் பொருள்படுத்திப் பார்த்தால், அதில் முன் காணாத சத்தியங்களைக் கண்டு, அதன் முக்கியத்துவத்தை உணருவோம்.

ஆனபடியால் நான் பலவீனமாயிருப்பதிலும், தூஷிக்கப்படுவதிலும், துன்புறுத்தப்படுவதிலும், துரத்தப்படுவதிலும், இயேசுவுக்காக ஒரு முடுக்கில் அடைப்பட்டிருப்பதிலும் களிகூருகிறேன். ஏனென்றால் நான் பலவீனமாயிருக்கையில் நான் வெடிமருந்துபோலிருக்கிறேன். நமது வல்லமையையும் சந்தர்ப்பங்களையும் இழந்தபோது, கர்த்தரே நமக்குப் போதுமானவர் என்று நாம் உணரும் உண்மை அதிலிருக்கிறது. நாம்  இந்நிலையை அடையும்போது, நம் கஷ்டங்களிலும் மற்றவர்களின் பட்சதாபத்தைத் தேடுவதை விட்டு விடுவோம். ஏனென்றால் நாம் நமக்கு வரும் எல்லாக் கஷ்டநிலைமையிலும், கொடுரத்திலும் இவைகள் கர்த்தரின் ஆசீர்வாதத்தைப் பெறவேண்டிய நிபந்தனைகள் என்றுணர்ந்து அவைகளை விட்டுத் தேவனிடம் திரும்பி, தேவனிடம் சேரும் உரிமையை அவைகளில் காணுவோம்.

சிறிது காலத்திற்குமுன் கர்த்தரில் நித்திரையடைந்த ஜார்ஜ் மாத்திசன் என்ற லரு ஸ்காட்லாந்து தேசத்துக் கண்  தெரியாத பிரசங்கியார் ஒரு முறை என் தேவனே! என் சரீரத்திலுள்ள முள்ளைக் குறித்து நான் ஒருபோதும் நன்றி செலுத்தியதில்லை. என்னிலுள்ள ரோஜா மலர்களுக்குத் துதி செலுத்தியுள்ளேன். ஆனால் முள்களுக்காக நான் துதிக்கவில்லை. நான் சுமக்கும் சிலுவைக்கு ஈடுசெய்யக்கூடிய உலகத்தை எதிர்நோக்குகிறேன். ஆனால் என் சிலுவையே எனக்குத் தற்கால மகிமை என்று ஒருபோதும் எண்ணவில்லை. என் சிலுவையின் மகிமையை எனக்குப் போதியும். என் முள்ளின் மதிப்பை எனக்குக் காண்பியும். என் வேதனையின் வழியே நான் உம்மண்டை ஏறிவந்தேன் என்பதை விளக்கிக் காட்டும். என் கண்ணீரே எனக்கு வானவில்லை உண்டாக்கிற்று என்பதைக் காணச் செய்யும் என்றார்.

மரங்களினூடே நட்சத்திரம் பிரகாசிப்பதை ஒருபோதும் பார்க்காதவர்கள் நிர்ப்பாக்கியர்.