November

இஸ்மவேலின் வெளியேற்றம்

(வேதபகுதி: ஆதியாகமம் 21:9-21)

“இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள்” (வச. 10).

ஆபிரகாம், சாராள்-ஈசாக்கு, ஆகார்-இஸ்மவேல் ஆகியோரின் கதை ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினை மட்டுமல்ல, அது கிறிஸ்தவ ஜீவியத்தில் ஆவிக்கும் மாம்சத்துக்கும் நடக்கும் போராட்டமாக புதிய ஏற்பாட்டில் விவரிக்கப்பட்டுள்ளது. இஸ்மவேல் மாம்சத்தின்படி பிறந்தவனுக்கு அடையாளமாயிருக்கிறான். ஈசாக்கோ ஆவியின்படி பிறந்தவனுக்கு அடையாளமாயிருக்கிறான். எப்பொழுது ஈசாக்கு பிறந்து சுதந்தரவாளியாக அறிவிக்கப்பட்டானோ, அதாவது ஆபிரகாம் பெரிய விருந்து செய்து, ஈசாக்கே என்னுடைய வாக்குத்தத்தத்தின் குமாரன் என்று தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினானோ, அப்பொழுது இஸ்மவேல் ஈசாக்கைப் பரியாசம் பண்ணத் தொடங்கினான். எப்பொழுது நாம் ஆவிக்குரிய வாழ்க்கையைத் தொடங்குகிறோமோ அப்பொழுது மாம்சம் தன்னுடைய போராட்டத்தை அறிவிக்கிறது. அப்பொழுதே மாம்சம் தன்னுடைய உண்மையான நிறத்தைக் காட்டத் தொடங்குகிறது. “மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல இப்பொழுதும் நடந்து வருகிறது” என்று பவுல் தெரிவிக்கிறார் (கலா. 4:29).

சாராள் மற்றும் ஆகார் இரண்டு ஏற்பாடுகளுக்குச் சித்திரமாக இருக்கிறார்கள் (கலா. 4:24). ஆகார் பெற்ற இஸ்மவேல் அரேபிய பாலைவனத்தில் அலைந்து திரிந்தான். ஆகார் என்பது அரபி தேசத்திலுள்ள சீனாய்மலை. அந்த ஆகார் இப்பொழுது இருக்கிற எருசலேமுக்கு ஒப்பானவள், அதாவது இன்னமும் எருசலேமை தலைமையிடமாகக் கொண்டு நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றி வருகிற யூத சமயத்துக்கு அடையாளமானவள். இந்த எருசலேம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மக்களை உபத்திரவப்படுத்தி கொலை செய்தது. நியாயப்பிரமாணத்தை பின்பற்றுகிறவர்கள் சபைக்கு சரீரப்பிரகாரமும், போதனை அடிப்படையிலும் மிகுந்த தீங்கு விளைவித்தார்கள். இவர்கள் கிறிஸ்துவைப் புறக்கணித்ததால் உலகம் முழுவதிலும் அலைந்து திரிந்தார்கள். இஸ்மவேல் பாலைவனத்தில் தண்ணீரின்றி சாகக்கிடந்ததுபோல, யூதர்கள் ஆவிக்குரிய ஜீவ தண்ணீரைக் காணாதபடி கண்கள் குருடாக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். ஆனால் கர்த்தரோ இரக்கமுள்ளவர். ஆகாரின் கண்களைத் திறந்து தண்ணீர் துரவைக் காண்பித்ததுபோல, ஒரு நாள் யூதர்களுடைய விசவாசக் கண்கள் திறக்கப்பட்டு கர்த்தரைக் கண்டடைவார்கள். தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார் (வச. 17), தேவன் பிள்ளையுடனே இருந்தார் (வச. 20) என்று சொல்லப்பட்டுள்ளதுபோல, யூதர்களுடைய உபத்திரவத்தின் கண்ணீரைக் கண்டு, அவர்களுடன் இருந்து அவர்களைக் காப்பாற்றுவார். இஸ்மவேலைப் பெரிய ஜாதியாக்கியதைப் போல இஸ்ரயேலையும் ஆயிரமாண்டு ஆட்சிக் காலத்தில் பெரியவர்களாக்குவார்.

இது நமக்கும் உண்மையாக இருக்கிறது. ஆவிக்குரிய வாழ்க்கை வாழ வேண்டுமானால் மாம்சத்தை புறம்பே தள்ள வேண்டும். மாம்சமும் ஆவியும் ஒருங்கிணைந்து செல்ல முடியாது. இஸ்மவேலை புறம்பே தள்ளும் என்று சாராள் சொன்னபோது, ஆபிரகாமுக்கு துக்கமாயிருந்ததுபோல (வச. 11) இன்றைக்கும் நமக்கும் மாம்சத்தைப் புறம்பே தள்ளுவது துக்கமாயிருக்கிறது. ஆனால் ஆவிக்குரிய சுதந்தரவாளிகளாகவும், மேலான எருசலேமின் பிள்ளைகளாகவும் வாழ்வதற்கு அப்படிச் செய்வது அவசியமானது. ஆண்டவர் தரும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; அது நித்திய காலமாய் ஊறுகிற நீருற்றாயிருக்கும் (யோவான் 4:14). இதுவே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் உயிர்பெற்று வாழ்வதற்கான ஆதாரம்.