இந்த வார்த்தை கிறிஸ்துவை எதிர்த்து நிற்கிறவன் என்ற
அர்த்தமுள்ளது. யோவானுடைய நிருபங்களில் மாத்திரம் இந்தச் சொல்
பாவிக்கப்பட்டுள்ளது (1.யோ.2:18,22, 4:3, 2.யோ.7). பவுலும் இப்படிப்பட்ட ஒருவனைக் குறித்துப்பேசி, அவன்
கேட்டின் மனுஷனாகிய பாவமமனுஷன் என்றும், கிறிஸ்து இரண்டாம்முறை வருமுன் இவன்
வெளிப்படுவான் என்றும் குறிக்கிறார் (2.தெச.2:3). மேலும் பவுலும் யோவானும்
கிறிஸ்து வரும்பொழுது இவன் அழிக்கப்படுவானென்று சொல்கிறார்கள். இயேசுவும் கடைசி
நாட்களில் கள்ளக் கிறிஸ்துக்கள் எழும்பி அநேகரை வஞ்சிப்பார்களென்று எச்சரிக்கை
கொடுத்திருக்கிறார் (மத்.24:24).
இயேசுவை, கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனும்,
மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாதவனும் அந்திக் கிறிஸ்து என்று
யோவான் சொல்லி, இப்பொழுதும் அநேக அந்திக் கிறிஸ்துக்கள் இருக்கிறார்களென்கிறான்
(1.யோ.2:18, 4:3).
மேலும் மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை
அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்தில் தோன்றியிருக்கிறார்கள் (2.யோ.7).
நாம் பிழைக்கும்படி தேவன் தமது ஒரேபேறான குமாரனை
உலகத்தில் அனுப்பினார். இதை மறுதலிக்கிறவன் விசுவாசத்தை அழித்து, சாத்தானின்
கிரியையை நடப்பிக்கிறான். இப்படிப்பட்ட தீமை வளர்ந்தோங்கி கடைசி காலத்தில்
சாத்தானால் அனுப்பப்படும் மிருகத்தில் நிறைவேறும். அந்த அக்கிரமக்காரனை
கர்த்தர் தமது வருகையின் பிரசன்னத்தினால் நாசம்பண்ணுவார் (2.தெச.2:8).