இது கிரேக்க தேசத்தின் முக்கிய பட்டணம். இந்தப் பேர்
அவர்கள் வணங்கின தேவியிலிருந்து வந்தது. இந்தப் பட்டணம் கி.மு. 1556ல் கெக்குரோபு
(Cecrops) என்பவனால் கட்டப்பட்டதென்று பாராம்பரியமாய்
சொல்லப்படுகிறது. மகா அலெக்சாந்தரின் நாட்களில் இந்தத் தேசம் விசேஷ
மேன்மைபெற்றது. கல்வித் தேர்ச்சி அதிகமாயிருந்தது. சர்வகலா சபை சங்கங்கள்,
அத்தேனே, தர்சு அலெக்ஸ்சாந்திரியாப் பட்டணங்களிலிருந்தன. நீதி சாஸ்திரிகளான
டிராகோ (Draco), சோலோன் (Solon)
என்பவர்களும், பெரிகிலீஸ் (Pericles)
என்னும் மந்திரியும், பிடியாஸ் (Phidias)
என்னும் சித்திரக்காரனும், பிளேற்றோ (Plato),
சாக்கிரடீஸ் (Socrates), அரிஸ்டாட்டில் (Aristatle)
என்னும் தத்துவ சாஸ்திரிகளும் இந்தப் பட்டணத்திலிருந்தார்கள். அதோடு அநேக
கோயில்களும் சொரூபங்களும் அத்தேனேதேவியின் கோயிலிலிருந்தது. ரோமருக்குக்
கீழ்ப்பட்டிருந்த காலத்திலும் இத்தேசத்திற்குச் சுயாதீனமிருந்தது.
பவுலும் அத்தேனே பட்டணத்துக்குப் போனவேளையில், அது
விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் வைராக்கியமடைந்து, ஜெப
ஆலயத்தில் யூதரோடும், மற்றவர்களோடும் தர்க்கம் பண்ணினான். எப்பிக்கூரரும்,
ஸ்தாயிக்கரும் அவனோடு வாக்குவாதம் பண்ணினார்கள்.
இவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்
பேசச்சொன்னபோது அவன் அறியப்படாத தேவனைக் குறித்து பிரசங்கம் பண்ணினான்.
மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்து கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள், வேறு
சிலர் விசுவாசித்தார்கள். அவர்களுக்குள் நியாயதிபதியான தியொனீசியுவும், தாமரி
என்னும் ஸ்திரியும் விசுவாசிகளானார்கள் (அப்.17:16-34).
பின்பு இந்த தியொனீசியு அங்கிருந்த சபையின்
கண்காணியாயிருந்தானென்று தெரிகிறது.