July

யூலை 19

யூலை 19

தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல.3:27).

ஒருவனுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காகவும், உண்மையோடும் செய்து முடிக்கவேண்டும். மற்றவர்களுடைய அபிப்பிராயங்களைப்பற்றி கவலைப்படாமல் நம் கடமையில் தவறாமல் தவறுகளை யாரேனும் சுட்டிக்காட்டினால் நன்றியோடு ஏற்றுக்கொண்டு திருத்தமாய்ச் செய்யவேண்டும். இப்படிப்பட்ட வேலைக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிட்டும். இந்த அனுபவத்திற்குள் சென்று பழக வேண்டுமென்பதற்காகவே நாம் இளமையில் நுகத்தைச் சுமக்க வேண்டியுள்ளது. இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமந்து பழகினால்த்தான் முதுமையில் எளிதாக சுமக்க இயலும். அது தேவனுக்குப் பிரியமானதாகவும், அயலானுக்கு உதவியாகவும் இருக்கும்.

கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் (1.சாமு.16:7). நாம் கண்ணுக்கு அழகாயும் நல்ல உயரமாயும், நற்பழக்கவழக்கங்களை உடையவர்களாயும் இருப்பதையே உயர்வாகக் கருதுகிறோம். ஆனால் அது தேவன் நேசிக்கும் உள்ளத்திற்கு ஈடு இணையாகாது. தாவீதின் ஏழு சகோதரரும் தேவனுடைய தேர்வில் தோற்றுப்போயினர். கடைசியாக தாவீது வந்தபோது கர்த்தர் சாமுவேலிடம் இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார் (1.சாமு.16:12).

வாலிபர் சிலர் இளம் வயதில் தங்கள் பொறுப்பை உணர்ந்து அதன்படி நடந்துகொள்கின்றனர். ஆனால் பெரும்பாலானோர், தங்களைப்போன்ற வாலிபர் நல்ல நிலையில் இருப்பதைக் குறித்துப் பொறாமைப்படுகின்றனர். தங்களுக்கென தேவன் என்ன சித்தம் கொண்டுள்ளார் என்பதை அவர்கள் அறியாமல் என்ன திட்டமிடலாம்? எந்தக் கல்லூரிக்குச் செல்வது? எந்தத் துறையில் சேர்ந்து படிப்பது? எந்த வேலையில் சேர்வது? என்றெல்லாம் சிந்திக்கின்றனர். இவைகளை விட்டுவிட்டு இப்பொழுது தங்கள் கைக்கு நேரிடும் காரியத்தை முழுமனதோடும், உண்மையோடும் செய்யவேண்டும். அவரைச் சார்ந்திருப்போர், தங்கள் கடமையில் தவறாமலிருக்கவேண்டும். அப்பொழுது உன்னைச் சூழ்ந்துள்ள இருள் நீங்கி ஒளி வீசும். உண்மையாக ஊழியம் செய்தால் உயர்வடையலாம். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பின் களிப்புடன் வாழலாம் !