July

யூலை 18

யூலை 18

உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் (உபா.7:9).

தான் வாக்களித்த யாவற்றையும் நிறைவேற்றுவதற்கு உன்னதமான தேவன் கண்ணும் கருத்துமாயிருக்கிறர். பாவத்தில் மனுக்குலம் வீழ்ந்து, சர்வ வல்லவருக்குப் பயந்து ஒளிந்த வேளையில், தேவன் ஆதாமை நினைத்து, அவனைத் தேடி வந்தார். (உன்னைப்போலும், என்னைப்போலுமுள்ள பாவிகளை அவர் இன்னும் தேடிக்கொண்டேயிருக்கிறார். நம்மை அவர் மறப்பதில்லை). அவர் நோவாவை நினைத்தருளினார் (ஆதி.8:1). அதனால் அவர் அவனையும், அவனது முழுக் குடும்பத்தையும் பெருவெள்ளத்தின் அழிவுக்கு காத்தார். இனிமேல் பிரளயத்தினால் பூமியை அழிப்பதில்லை என்றும் வாக்களித்தார்.

அவர் ஆபிரகாமை நினைத்தருளினார். அவனை அவர் தன் சொந்த நாட்டை விட்டுப் புறப்பட்டு முன்பின் அறியாத புதிய நாட்டிற்கு அழைத்துச் சென்றார் (சங்.105:42). எகிப்தின் கொடிய கட்டில் இருந்த இஸ்ரவேலரை அவர் நினைத்தருளினார். ஆகவே அவர்களை ஆபிரகாமுக்கு வாக்களித்த அந்த தேசத்திற்கு திரும்ப அழைத்துக்கொண்டு வந்தார். தாம் வாக்களித்த எல்லா வாக்குத்தத்தங்களையும் அவர் நினைவுகூர்ந்தார். ஆகவே இரட்சகராக இருக்கும்படி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அனுப்பி வைத்தார் (கலா. 4:4-5).

யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது அவனை ஒருவன் மறந்ததுபோல மனிதர் நம்மை மறந்துவிடலாம் (ஆதி.40:33). ஆனால் தேவனோ அவனை நினைத்தருளினார். அவனை அவர் ஏற்ற வேளையில் நியமிக்கப்பட்ட இடத்தில் நிலைநிறுத்தினார் (சங்.105:17-22). தேவன் உண்மையுள்ளவர். அவர் நம்முடைய பழைய மீறுதல்களையும், அக்கிரமங்களையும் மறந்துவிடுகிறார். ஆனால் நம்மை மறந்து விடுவதுமில்லை. கைவிடுவதுமில்லை.