September

சுற்றத்தாரைக் குறித்த அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 23:1-25)

“அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது” (வச. 3).

இஸ்ரயேல் தேசத்தின் பெரிய பாக்கியங்களில் ஒன்று அவர்கள் நடுவில் கர்த்தருடைய பிரசன்னம் இருப்பது. பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி அவர்கள் கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். பரித்த தேவன் மக்கள் வசிக்கும் பாளையத்தில் உலாவுகிறார். இது மக்களுடைய பரிசுத்தத்தையும் கோரியது (வச. 14). இந்தப் பரிசுத்தத்தை நிலைநிறுத்துவதற்காக, குறிப்பிட்ட மக்கள் இஸ்ரயேல் மக்களோடு கலந்து ஒன்றாக வாழ்வதற்கும், கர்த்தரை வழிபடுவதற்கும் தடை செய்யப்பட்டனர் (வச. 1-8). அண்ணகர்களுக்கும், திருமண உறவுக்கு மீறிப் பிறந்தவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இவர்கள் தங்கள் உடலைச் சிதைத்துக்கொண்டதாலும், தவறான உறவுமுறையைப் பேணியதாலும் தேவன் இவர்களை விலக்கினார்.

அம்மோனியரும் மோவாபியரும் இஸ்ரயேலர்களின் கோரிக்கைகளுக்கு செவிகொடுக்கத் தவறியதாலும், பிலேயாம் தீர்க்கதரிசியின் மூலம் வஞ்சகமாய் அவர்களுக்குத் தீமையை உண்டாக்கியதாலும் பத்தாம் தலைமுறையானாலும் கர்த்தருடைய பிரசன்னத்துக்கு வர அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. உதவி கேட்டும், அடைக்கலம் தேடியும் வருகிறவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். உதவி செய்யாவிட்டாலும் அவர்களுக்குத் தீமை செய்யாமலாவது இருக்க வேண்டும். ஏசாவின் வழி வந்த ஏதோமியரையும், பஞ்சத்தில் பிழைப்புத் தேடி எகிப்துக்குச் சென்றபோது, அடைக்கலம் அளித்த எகிப்தியரையும் வெறுப்புடன் பார்க்காதே என்று தேவன் கூறுகிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு நன்மை செய்தோரை ஒருபோதும் மறக்காதவர். இந்தச் சிறியர்களாகிய இஸ்ரயேல் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்கிறீர்களோ எதை எனக்கே செய்தீர்கள் என்று ஆண்டவர் கூறுகிறார். ஆகவே நாமும் நம்முடைய ஆண்டவரைப் பின்பற்றி செய்நன்றி மறக்காதவர்களாக இருப்போம்.

ஆயினும் தனிப்பட்ட முறையில் தேவன் எந்த இன மக்களுக்கும் விரோதியானவர் அல்லர். ரூத் மோவாபிய பெண்ணாக இருந்தாலும், விசுவாசத்தினாலே தேவனுடைய பிள்ளைகளுக்கு உரிய சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டாள். மேசியாவின் குடிவழிப் பட்டியலில் இடம்பெற்றாள் (மத். 1 ஆம் அதி.). இன்றைக்கு கர்த்தருடைய சபையில் இத்தகைய பாகுபாடுகள் இல்லை. எந்த இனத்தாராயினும், அவர்கள் கர்த்தரை விசுவாசித்தால், எவ்விதப் பேதமுன்றி கர்த்தருடைய சபையில் பங்கு பெறலாம். கிரேக்கர் என்றும் யூதர் என்றும் வேறுபாடு இல்லாமல் செய்து அனைவரையும் ஒரே மந்தைக்குள் கொண்டுவந்து விட்டார். யூதர் புறவினத்தார் என்னும் பகையாகிய நடுச்சுவரைத் தேவன் தகர்த்துப்போட்டுவிட்டார். ஆகவே தேவன் இடித்ததை நாம் மறுபடியும் கட்டக்கூடாது. ஏழை-பணக்காரன், படித்தவன்- படிக்காதவன், உயர்த்தசாதி-தாழ்ந்தசாதி போன்ற பாகுபாடுகள் எந்த வடிவில் வந்தாலும் தேவனுடைய திருச்சபையில் அவற்றை அனுமதிக்கக்கூடாது. தேவன் இவற்றை வெறுக்கிறார்.

இஸ்ரயேலர்களின் பாளையம் தூய்மையாக இருக்க வேண்டும் (வச. 9-14) என்பதைப் போலவே, நம்முடைய சபைகளிலும் பரிசுத்தம் காக்கப்பட வேண்டும். தேவனுடைய வீட்டில் நடந்துகொள்ள வேண்டிய முறையைப் பற்றி பவுல் முதலாம் தீமோத்தேயு நிருபத்தில் நமக்கு அறிவுறுத்துகிறார் (3;16). நாம் கிருபையின் அடிப்படையில் அழைக்கப்பட்டிருந்தாலும் வரைமுறையற்ற வாழ்க்கைக்கு அழைக்கப்படவில்லை. தேவன் தம்மால் மீட்கப்பட்ட மக்களிடையே வாசம் பண்ணுகிறார். தம்மைப் போலவே தம்முடைய மக்களும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.