September

நீதிசெய்வதில் தேவனைப் பிரதிபலித்தல்

(வேதபகுதி: உபாகமம் 19:14-21)

“ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.” (வச. 15).

தேவனுடைய நியாயப்பிரமாணச் சட்டங்கள் அவருடைய இயல்பையும் குணநலனையும் பிரதிபலிக்கின்றன. ஒரு நீதியுள்ள நியாயாதிபதியாக, தேவன் தம்முடைய ராஜ்யத்தின் தன்மைகள் சரியான நீதியோடும் நியாயத்தோடும் இருக்க வேண்டுமென விரும்புகிறார். ஒரு நாள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தை பரிபூரண நீதியிலும் நேர்மையிலும் நிலைநிறுத்தும்படிக்கு பூமிக்கு திரும்புவார் (காண்க: ஏசாயா 11:3,4). இது மட்டுமின்றி, மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ், தேவன் அவருடைய மக்களுக்கு அளித்த ராஜ்யத்தில் விழுந்துபோன குறைந்த அறிவுள்ள மனிதர்களே மத்தியஸ்தர்களாகவும் நியாயாதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் பாகுபாடு காட்டக்கூடியவர்களாகவும் ஊழலுக்கு ஆதரவானவர்களாகவும் மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தன. எனவே இவர்கள் உள்நோக்கத்தோடு மக்கள்மேல் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கான ஏதுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி தேவன் தம்முடைய ஞானத்தினால் சில அமைப்புகளை ஏற்படுத்தினார்.

முதலில், ஒருவரைக் குறித்துச் தீர்ப்புச் செய்வதற்கு ஆதராமாக பல சாட்சிகளைக் கவனிக்க வேண்டும் (வச. 15). பின்னர், தேவனால் ஏற்படுத்தப்பட்ட இப்பிரதிநிதிகள், நியாயதிபதிகள் ஆகியோர் முன்னிலையில் ஒரு பொது விசாரணை வேண்டும் (வச. 16,17). இதன் பிறகு மூன்றாவதாக, சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் மனபூர்வமாகவும், நேர்மையோடும் கவனமாக விசாரிக்க வேண்டும் (வச. 18). இதன் மூலம் அவர்கள் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்து ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும். ஒருவன் மேல் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்று உறுதியானால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து, குற்றம் சாட்டியவரைத் தண்டிக்க வேண்டும் (வ.19). இது தீமைகளையும், பொய் வழக்குகளையும் தேசத்திலிருந்து அகற்றி, சுபீட்சமாகவும், ஆசீர்வாதமாகவும் இருப்பதற்கு வழிவகுக்கம்.

விசுவாசிகள் ஒரு நாள் உலகத்தையும் தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்பார்கள் என்று பவுல் கற்பித்தார் (1 கொரி. 5:7,12,13). மேலும் நம்முடைய சபைகளில் விசுவாசிகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களையும், வழக்குகளையும் தீர்ப்பதற்கும் விசுவாசிகளே பொறுப்பாயிருக்கிறார்கள். இது ஏதோ கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்ற அளவில் மட்டும் நின்றுவிடாமல், அனைத்து உள் விவகாரங்களையும் விசாரித்து காரியங்களைச் சரி செய்யவேண்டும். சில நேரங்களில் விசுவாசிகளின் வியாபார விவகாரங்கள் சபையின் அமைதியையும் ஒற்றுமையையும் குலைக்கத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நமது விவகாரங்களை உலக நீதிமன்றங்களுக்கு எடுத்துச் செல்வதைக் காட்டிலும், அநியாயத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று பவுல் கூறுகிறார் (1 கொரி. 5:6-7). கர்த்தராகிய இயேசு நீதியாக நியாயந்தீர்க்கிறவருக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார் (1 பேதுரு 2:23). அவ்வாறே நாமும் நீதியை நிறைவேற்ற வேண்டும் என்ற விருப்பத்தை ஆண்டவரிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஏதோவொரு பிரச்சினை சபைக்கு முன் கொண்டுவரப்படும் போது, அவற்றைத் தீர்க்க தேவனுடைய வார்த்தைகள், வேதத்தில் காணப்படும் முன்னுதாரணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். மேலும் தவறான குற்றச்சாட்டுகளில் இருந்து தேவன் எவ்வாறு மக்களைப் பாதுகாத்தாரோ அதை நினைவிற்கொண்டு, நேர்மை, உண்மை மற்றும் நீதி வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.