September

கர்த்தருக்கு முன்பாகச் சந்தோஷப்படுதல்

(வேதபகுதி: உபாகமம் 16:9-17)

உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், … உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு (வச. 11).

பஸ்கா பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு இஸ்ரயேல் நாட்டின் சமய நாட்காட்டி நிறுவப்பட்டது (யாத். 12:2). பஸ்காவே தொடர்ந்து நடைபெற்ற அனைத்திற்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இந்த மீட்பின் நிகழ்வே அவர்களுடைய ஒவ்வொரு தேசிய ஆசரிப்புக்குமான சாராம்சத்தை வழங்குகிறது. இன்று அது விசுவாசியின் வாழ்க்கையிலும் உண்மையாயிருக்கிறது. கிறிஸ்துவின் மரணத்தினால் உண்டாகும் இரட்சிப்பு என்னும் தொடக்கப் புள்ளியே அவனுடைய முழு வாழ்க்கையையும் வண்ணமயமாக ஆக்குகிறது. மீட்பே அவனுடைய உண்மையான மகிழ்ச்சிக்கும் பிற நற்செயல்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது. இரட்சிப்பின்றி கட்டப்படும் ஒருவனுடைய சமய வாழ்க்கையானது வெறுமையாகவும் போராட்டமாகவும் பாரமாகவும் மாறுகிறது.

பெந்தெகொஸ்தே என்று அழைக்கப்படும் வாரங்களின் பண்டிகையின் கணக்கீடு துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதற்பழங்களின் அறுவடையைச் சேகரிப்பதில் இருந்து ஏழு வாரங்கள் கணக்கிடப்பட்டன. இந்தப் பண்டிகையின் முக்கியத்துவமும், சிறப்பும் அதனுடைய இறுதி நாளின் நிறைவேற்றத்தின் மீதே குவிகிறது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் தொடங்கி, பரிசுத்த ஆவியானவரின் வருகை வரைக்கும் ஐம்பது நாட்கள் ஆகின. உண்மையான “பெந்தெகொஸ்தே நாள்” வந்தபோது (அப். 2:1) சபை தொடங்கப்பட்டது. இரட்சிப்பில் தொடங்கப்பட்ட ஒருவனுடைய கிறிஸ்தவ வாழ்க்கையானது சபையாக இணைவதில் சிறப்பைப் பெறுகிறது. அவன் வளர்ந்து கனிகொடுப்பதற்கும், இரட்சிப்பின் மகிழ்ச்சியை தொடர்ந்து வெளிப்படுத்துவதற்குமான சிறந்த இடம் சபையே ஆகும். தேவனுடைய காலத்திட்டங்களும், அட்டவணைகளும் மாறாதவை, அவை துல்லியமானவை. தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் உண்மையாயிருக்கிற தேவன்மீது நாம் நம்பிக்கை வைப்பது நமக்கு எவ்வளவு சிறந்தது.

இந்தப் பண்டிகையின் போது மக்கள் தாங்கள் பெற்ற ஆசீர்வாதத்துக்குத் தக்கதாய் காணிக்கை கொண்டுவர வேண்டும். ஆவிக்குரிய மற்றும் பொருட் செல்வங்கள் அனைத்தும் தேவனிடமிருந்தே வருகின்றன என்னும் பாடம் இஸ்ரயேல் மக்களின் மனதில் ஆழமாகப் பதியவைக்கப்பட்டிருந்தது. ஆகவே அவற்றிலிருந்து மனபூர்வமான காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தினார்கள். ஒரு விசுவாசியின் வாழ்க்கையிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. நாம் கர்த்தரிடமிருந்து பெற்றுக்கொண்டதை கடின மனதோடு அல்ல, மகிழ்ச்சியின் இருதயத்தோடு கொடுக்க வேண்டும். நம்முடைய கரங்களில் இருந்து இப்பிரபஞ்சத்தின் உரியமையாளர் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறார் என்பதை நினைக்கும்போது நமக்குத்தான் எத்தனை சந்தோஷம். இஸ்ரயேல் மக்களின் மகிழ்ச்சி எப்பொழுதும் கர்த்தருடைய பிரசன்னத்துடன் தொடர்புடையதாகவே இருந்தது. இந்த உலகம் தரும் மகிழ்ச்சி தற்காலிகமானது, அது கானல் நீரைப் போன்றது. “கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு” (வச. 11), “சந்தோஷப்படக்கடவர்கள்” (வச. 14), “சந்தோஷமாயிருப்பாயாக” (வச. 15) ஆகிய வார்த்தைகள் நம்முடைய மகிழ்ச்சிக்கான ஊற்றுக்கண் எங்கே இருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன.

இது தனிப்பட்ட மகிழ்ச்சி அல்ல, கூட்டுச் சந்தோஷம். குடும்பத்தார், வேலைக்காரர்கள், அந்நியர்கள், பரதேசிகள், திக்கற்ற பிள்ளைகள், விதவைகள் ஆகிய யாவரும் சேர்ந்த மகிழ்ச்சியாயிருப்பது (வச. 11). சபை ஒரு சிறப்பான கூட்டுறவை பேணுகிற இடம். பெந்தெகொஸ்தே நாளில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் யூதர், புறவினத்தார், என்னும் பாகுபாடு இன்றி எல்லாரும் ஒன்றாய் இணைக்கப்பட்டோம். தேவனுடைய கிருபை யூத மதத்தின் இருண்ட திரையை கிழித்தெறிந்து. புறவினத்தாராகிய நாம் கிறிஸ்துவின் மந்தையில் இணைக்கப்பட்டோம். ஆகவே கல்வாரியின் அன்பை நினைவுகூர்ந்து, திருச்சபையின் மேன்மையை போற்றி என்றென்றுமாக நாம் மகிழ்ந்திருப்போம்.