October

உடன்படிக்கையின் அடையாளம்

(வேதபகுதி: ஆதியாகமம் 9:1-17)

“நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும்” (வச. 13).

நோவாவும் அவனுடைய குடும்பமும் பெரு வெள்ளத்துக்குப் பிறகான புதிய உலகத்தில் பலுகிப் பெருகும்படி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பேழையில் வைத்துக் காப்பாற்றப்பட்ட உயிரினங்களுக்கு அவனையே அதிகாரியாக்கினார். ஆயினும் மீண்டும் பிரச்சினைகள் தோன்றாது என்பதல்ல இதன் பொருள். பூமி முழுவதிலும் ஏற்பட்ட பெருவெள்ளம் பாவத்தின் விளைவுகளையும், அதன் சுவடுகளையும் சுத்தமாக்கிவிட்டது என்பது உண்மைதான். ஆயினும் பெருவெள்ளத்தின் அனைத்து நீரும் ஒன்று சேர்ந்தாலும் ஒருபோதும் சுத்தம் செய்ய முடியாத பாவத்தின் தீய வேர் மனித இதயத்தில் இன்னும் உள்ளது. அது நோவாவுக்குள்ளும் உள்ளது, அவனுடைய குமாரருக்குள்ளும் உள்ளது. அது எப்பொழுது வேண்டுமானாலும் தேவனுக்கு எதிராகத் திரும்பக்கூடும். இச்சூழ்நிலையில்தான் பூமியை ஆட்சி செய்யும் அரசாங்கத்தை தேவன் நோவாவின் சந்ததிக்குக் கொடுத்தார். தேவன் அளித்த இத்தகைய தெய்வீக நன்மையை நோவாவின் சந்ததியினர் எவ்வாறு எடுத்துக்கொள்ளப்போகிறார்கள்?
காயீனைப் போலவே, ஒரு சகோதரனுக்கு எதிராக ஒரு சகோதரன் எழும்பக்கூடும்; இரத்தம் சிந்துவதன் மூலம் வன்முறை மீண்டும் தோன்றும் என்பதைத் தேவன் அறிந்திருந்தார். ஆகவே நோவாவுக்கு அறிவுரையும் ஆலோசனையும் அவசியம். மனிதன் தேவ சாயலில் உண்டாக்கப்பட்டவன், மனிதனுடைய உயிருக்காக அவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன் என்று புதிய உலகத்துக்கான தன்னுடைய சட்டங்களைத் தேவன் அவனுக்கு அளிக்கிறார். ஒருநாள் தேவகுமாரனின் இரத்தம் சிந்தப்படும், அது மனித இதயத்தைச் சுத்தமாகக் கழுவும். இது ஒன்றே மனித குலத்துக்கான நிரந்தரமான மீட்பின் வழி.

தேவன் நோவாவுடன் பண்ணிய தம்முடைய உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை மேகத்தில் வைத்தார். இந்த வானவில் வானத்தில் தோன்றும் ஒவ்வொரு முறையும் தேவ கிருபையின் அடையாளமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இது உண்மையாக இருக்கிறது. வாழ்க்கையில் தோன்றும் கருமேகம் போன்ற இருளான நேரங்களுக்கும், மழை போன்ற பிரச்சினைகளுக்கும், இடிபோன்ற துன்பங்களுக்கும் அப்பால் நமக்கு நன்மையை வழங்கக்கூடிய தேவனுடைய வாக்குறுதி உள்ளது. வார்த்தையில் உண்மையுள்ள தேவனை வானத்தை நோக்கிப் பார்த்து ஆறுதலையும், சமாதானத்தையும் அடையும் பாக்கியம் நமக்கு இருக்கிறது. நமக்காக நித்திய மீட்பை உண்டு பண்ணிய நம்முடைய இரட்சகர் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவர் அங்கே நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அங்கே நமக்காக வேண்டுதல் செய்கிறார். நோவாவைக் காட்டிலும் சிறந்த நம்பிக்கையின் ஆதாரம் நமக்கு இருக்கிறது. நோவாவுடன் ஏற்படுத்திய உடன்படிக்கையைக் காட்டிலும் சிறந்த புதிய உடன்படிக்கை நமக்கு இருக்கிறது. கிறிஸ்து அதைத் தம்முடைய மரணத்தாலும் இரத்தத்தாலும் ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவே நாம் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்போம்.