October

ஆதாமின் வம்சவரலாறு

(வேதபகுதி: ஆதியாகமம் 5:1-32)

“ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்” (வச. 5).

“விசுவாசத்தின் தங்க இழை” என்று அழைக்கப்படுகிற தேவபக்தியுள்ள சந்ததியின், சுருக்கமான வரலாற்றை இந்தப் பகுதி நமக்கு அறிவிக்கிறது. வீழ்ச்சிக்குப் பிறகு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட “ஸ்திரீயின் வித்தாகிய” மேசியாவின் குடிவழிப்பட்டியல் இது. காயீனின் சந்ததியில் சொல்லப்பட்டுள்ளதுபோல, இவர்கள் இந்த உலக முன்னேற்றுத்துக்கோ, சமுதாயப் புரட்சிக்கோ ஏதும் செய்யவில்லை. மாறாக, ஆங்காங்கே அத்திபூத்தாற்போல் இவர்களுடைய விசுவாசச் செயல்கள் மட்டும் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. பிறந்தார்கள், வாழ்ந்தார்கள், குழந்தைகளைப் பெற்றார்கள், பின்னர் இறந்தார்கள். ஆதாமுக்குள் ஒவ்வொருவரும் மரிக்கிறார்கள். இதுவே ஆதாம் செய்த பாவத்தின் விளைவு. “நீங்கள் சாகவே சாவதில்லை” என்று சாத்தான் பொய்யை ஊதினான். “மண்ணாய் இருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்” என்று தேவன் விளம்பினார். தேவ வார்த்தையின் உண்மையை இங்கே காண்கிறோம். “மரித்தான்” என்னும் வார்த்தையை எட்டு முறை காண்கிறோம்.

ஆதாம் தொடங்கி, நோவாவின் குடும்பத்தாருடன் இந்த அதிகாரம் நிறைவு பெறுகிறது. ஆதாம் தன்னுடைய தோல்வியை, மேசியாவின் வாக்குறுதியைப் பெற்றதை, தான் விசுவாசித்ததை தன்னுடைய பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் சான்று பகர்ந்திருப்பான் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஏனோக்கின் நாள் வரை அவன் வாழ்ந்தான். ஏனோக்கு அறுபத்தைந்து வயதில் தன்னுடைய விசுவாச வாழ்க்கையைத் தொடங்கினான். முந்நூறு ஆண்டுகள் தொடர்ந்து தேவனோடு நடந்தான். அவன் தேவனுடைய வழியை அறிந்தான், தேவன் நடந்த திசையில் நடந்தான், தேவ சித்தத்தை அறிந்தான். தேவனோடு எவ்வித முரண்பாடும் இல்லை. தேவன் இவனில் மகிழ்ந்தார். ஒரு நாள் தேவன் இவரை மரிக்காமலேயே தம்முடன் அழைத்துக் கொண்டார். மரணச் சந்ததியின் நடுவில் மரணமே சந்திக்காத பக்தன். கிறிஸ்து தம்முடைய மணவாட்டியாகிய சபையை அழைத்துக்கொள்ள ஒருநாள் வருவார், அப்பொழுது அவரை விசுவாசித்து, உயிரோடு இருக்கிறவர்கள் அவ்வண்ணமாகவே எடுத்துக்கொள்ளப்படுவார்கள். அது ஓர் அற்புதமான நாள். ஏனோக்கின் வாழ்க்கை அதை நமக்கு உறுதிப்படுத்துகிறது.

ஏனோக்கு தன் மகனுக்கு அவனுக்குப் பின் இது சம்பவிக்கும் என்ற பொருளில் “மெத்தூசலா” எனப் பெயரிட்டான். இவனே மிக நீண்ட நாட்கள் வாழ்ந்தவன். இவன் தொள்ளாயிரத்து அறுபத்தொன்பது வயதில் மரித்தான். அவ்வாண்டிலேயே பெருவெள்ளம் வந்து பூமியை அழித்தது. இவனுடைய நாட்களின் மூலமாக தேவனின் நீடிய கிருபையைக் காண்கிறோம். மக்கள் மனந்திரும்புவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். இப்பொழுதும், “கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டும் என்று விரும்பி நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2 பேதுரு 3:9) என்று பேதுரு கூறுகிறார். ஏனோக்கின் பேரன், லாமேக்கு, சபிக்கப்பட்ட பூமியில் இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி தன் மகனுக்கு நோவா என்று பெயரிட்டான். பேரழிவில் காப்பாற்றப்பட்ட ஒரே குடும்பம். நமக்கான இரட்சகரை கொண்டுவந்த குடும்பம். இன்று நோவாவின் வழிவந்த இரட்சகரால் நாம் தேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.