October

முதல் கேள்வி

(வேதபகுதி: ஆதியாகமம் 3:7-13)

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்” (வச. 9).

முதல் தம்பதியினரின் முதல் பாவம் பல விளைவுகளை உண்டாக்கியது. அவர்கள் கண்கள் திறக்கப்பட்டதனால் தங்களை நிர்வாணிகள் என்று அறிந்துகொண்டார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் நிர்வாணிகளாகவே இருந்தார்கள், ஆயினும் அவர்கள் வெட்கப்படாமல் இருந்தார்கள். அப்பொழுது பாவம் வந்தபோதோ, அவர்கள் தங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள், குற்ற மனசாட்சி ஏற்பட்டது, அவர்கள் வெட்கமும், அவமானமும் அடைந்தார்கள். இதை மூடி மறைக்க தாங்களாகவே ஓர் ஆடையைச் செய்துகொண்டார்கள். மனிதன் தேவனின்றி தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்படி எடுத்த முதல் சுயமுயற்சி. வெயிலுக்கு நிலைத்து நிற்கக்கூடாத ஆடை இது. அன்று முதல் இன்றுவரை மனிதன் தன்னுடைய சுயமுயற்சியால், மதங்களையும், கடவுள்களையும் உண்டாக்கிக் கொண்டேயிருக்கிறான். மனிதனின் சுயகிரியைகள் மெய்யான தேவனுக்கு முன்பாக செல்லுபடியாகாது. மேலும் ஆடை அணிதல் என்பது நாகரீக வளர்ச்சியின் கண்டுபிடிப்பு அல்ல. ஆதிமுதலே மனிதன் ஆடை அணிந்தவனாகவே இருக்கிறான்.

அடுத்ததாக, அவர்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் காண்பதற்குப் பயந்து, அவருடைய பிரசன்னத்தை விட்டு விலகி, ஒளிந்துகொண்டார்கள். பாவத்தின் விளைவுகளில் முக்கியமானது மனிதன் தேவனை முகமுகமாகப் பார்க்க முடியாமற்போனது. ஆனால் அன்று முதல் இன்று வரை தேவனின் சத்தத்தைக் கேட்க முடியும். தேவனை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை, கண்டவர்கள் உயிரோடு இருக்க முடியாது என்பது இதுவே. எங்கெல்லாம் “கர்த்தருடைய தூதனைக் கண்டோம்” என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் திரித்துவத்தின் இரண்டாம் நபராகிய கிறிஸ்துவையே கண்டார்கள். குற்றம் செய்த எல்லா மனிதர்களும் பயத்திலும், குற்றமனசாட்சியிலும் ஆட்கொள்ளப்படுகிறார்கள் என்பது பொதுவான உண்மை. ஆகவேதான் குற்றவாளிகளைகளை சில நேரங்களில் காவல்துறையினர் கண்டவுடன் அடையாளம் கண்டுவிடுகிறார்கள். தங்களுடைய குற்றச்செயலுக்கு பிறரைக் குற்றஞ்சாட்டும் மனோபாவமும் இங்கிருந்துதான் முதலாவதாகத் தொடங்குகிறது.

ஆனால் நல்ல தேவன் அவர்களை அப்படியே விட்டுவிடவில்லை. ஆதாமைக் கூப்பிட்டு: “நீ எங்கே இருக்கிறாய்” என்று தேடிவந்தார். பிற மதங்களில் மக்கள் கடவுளைத் தேடிச் செல்கிறார்கள். நம்முடைய தேவன் மட்டுமே இழந்துபோன மனிதனைத் தேடி வந்தார். பழைய ஏற்பாட்டின் இந்த முதல் கேள்வி, “யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே” என்னும் புதிய ஏற்பாட்டின் முதல் கேள்விக்கு நேராக நம்மை அழைத்துச் செல்கிறது. ஆம், கடவுள் பெத்லகேமில் மனிதனாக அவதரித்தார். அவர் பாவ மனிதர்களைத் தேடி வந்தார். “நீ எங்கே இருக்கிறாய்” என்னும் தேவனுடைய கேள்விக்கான நம்முடைய நேர்மையான பதில் என்ன? இழந்துபோனோரின் கூட்டத்திலா? அல்லது நம்மைத் தேடிவந்த நித்திய ஜீவவார்த்தைகளைக் கொண்டிருக்கிற கிறிஸ்துவோடா? இவருடன் இருப்பதே நமக்கு எப்பொழுதும் பாதுகாப்பு.