October

உண்மையான ஓய்வுநாள்

ஆதியாகமம் 2:1-3

“தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்” (வச. 3).

தேவன் ஆறு நாட்களில் தம்முடைய படைப்பின் செயல்களையெல்லாம் முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அவர் களைப்பினாலும் சோர்வினாலும் ஓய்ந்திருந்தார் என்று நாம் எண்ணக்கூடாது, மாறாக, படைப்பின் செயல்கள் எல்லாம் முடிந்துவிட்டபடியால் அந்த நாளில் ஓய்ந்திருந்தார். அவர் தூங்குவதுமில்லை, அவர் உறங்குவதுமில்லை. பலருக்கு ஆறு நாள் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. ஒரு நாள் என்பது ஒரு நீண்ட கால அளவா அல்லது இருபத்தினான்கு மணி நேரம் கொண்ட ஒரு நாளா என ஐயம் எழுப்புகின்றனர். தேவனுடைய அளவிட இயலாத வல்லமையையும் ஞானத்தையும் நாம் ஒப்புக்கொள்வோமாயின், தேவன் இந்த உலகத்தைப் படைக்க ஏன் ஆறு நாள் எடுத்துக்கொண்டார், ஒரே நாளில் முடித்திருக்கக் கூடாதா என்றே கேள்வி இருக்க வேண்டும். இருப்பினும் இருபத்தினான்கு மணிநேரம் கொண்ட ஆறு நாட்களிலேயே இது நடைபெற்றது என்பதை யாத்திராகமம் 20:11 உறுதிப்படுத்துகிறது. மேலும் அதை ஆசீர்வதித்து, பரிசுத்தமாக்கினார் என்பது பிற நாட்களைக் காட்டிலும் அதைச் சிறப்பானதாக்கினார் என்பது பொருள்.

ஆயினும், பழைய ஏற்பாட்டு ஓய்வு நாள் என்பது உண்மையான ஓய்வு நாள் அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு நிழல், இது ஒரு நினைவூட்டல், பழைய எற்பாட்டின் நிழல் காரியங்கள் யாவும் கிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுவதுபோல, இதுவும் கிறிஸ்துவையே சுட்டிக்காட்டுகிறது. இயேசு கிறிஸ்து வந்த நோக்கமும் அவருடைய வேலையும் முடிந்துவிட்டதால் இனி நிழல்களுக்கு அவசியமில்லை. நாம் முகமறியாத பலரிடம் கைபேசியில் பேசுகிறோம், பழகும்போது அவர்களுடைய நிழற்படத்தை அனுப்பச் சொல்லிப் பார்க்கிறோம். ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்புக்கிடைக்கும் போது அந்தப் படத்துக்கு அவசியமில்லாமல் போகிறது. இதுபோல பழைய ஏற்பாட்டின் நிழல் காரியங்களும். கிறிஸ்துவில் எல்லாம் நிறைவேற்றப்பட்டபடியால் நிழலுக்கு வேலையில்லை. கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தில், பவுல் அதை நமக்கு உறுதிப்படுத்துகிறார்: “… ஓய்வுநாட்களையுங் குறித்தாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக, அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது” (2:16,17).

நிழல் ஓய்வு நாள் சிலுவையில் முடிவுற்றது. மறுநாள் உயிர்த்தெழுதலின் நாள். ஆண்டவர் இயேசு கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த நாள். அது ஒரு புதிய நாளின் தொடக்கம், அது கர்த்தருடைய நாள். ஆகவே ஆதிக் கிறிஸ்தவர்கள் உடனடியாக வாரத்தின் முதல் நாளை கர்த்தருடைய நாளாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். அவர்கள் ஓய்வுநாளைக் கடைப்பிடிப்பதை நிறுத்திவிட்டார்கள். ஆயினும் இந்த நிழல் ஓய்வு நாள் சிலுவையில் முடிவடைந்தாலும், உண்மையான ஓய்வுநாள் இன்றும் தொடர்கிறது. அது இளைப்பாறுதலின் காலம். “தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்திருந்ததுபோல தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்” என்று சொல்லப்பட்டுள்ளது (எபி. 4:9,0).

இது எவ்வாறு நமக்குச் சாத்தியமாகிறது. இது நம்முடைய சொந்த முயற்சிகளையும், கிரியைகளையும் நிறுத்துவது, மேலும் நாம் கிறிஸ்துவைச் சார்ந்துகொள்வது. நம்முடைய சொந்த வேலையை நிறுத்திவிட்டு நாம் கிறிஸ்துவின் வேலையைச் செய்வது. ஆகவேதான் பவுல், “இனி நான் அல்ல, கிறிஸ்துவே என்னில் வாழ்கிறார், இனி அவருக்காகப் பிழைத்திருக்கிறேன்” என்று கூறுகிறார் (கலா. 2:20). அதாவது தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி நம்மில் உருவாக்கும் விருப்பத்துக்கு இணங்குவதும், அவர் ஏவுகிற செயலைச் செய்வதும் ஆகும் (பிலி. 2:13). இதுவே இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையின் இரகசியமாகவும் இருந்தது. “என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார் (யோவான் 14:10) என்று அவர் கூறினார். இதுவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் இரகசியமாகவும் இருக்கிறது. நித்தியத்தில் இது முழுமையாக நிறைவேறும்.