October

இஸ்ரயேல் என்னும் கர்த்தருடைய கண்மணி

(வேதபகுதி: உபாகமம் 32:1-14)

“பாழான நிலத்திலும், ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்” (வச. 10).

தேவன் தம்முடைய இறையாண்மையின்படி, எதிர்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தன்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு அந்நிய தேவர்களைப் பின்பற்றுவார்கள் என்று அறிந்திருந்தார். ஆயினும் இந்த உடன்படிக்கையின் கர்த்தர் அவர்களை தொடர்ந்து நேசிக்கிறார். அவர்களை குடியமர்த்த யோசுவாவை நியமிக்கிறார். அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டதை நிறைவேற்றும்படி முனைப்புக் காட்டுகிறார். இத்தகைய சூழ்நிலையில் வருங்காலத் தலைமுறையினரை எவ்வாறு உணர்த்துவது? கர்த்தருடைய நன்மைகளையும், மக்களின் பின்மாற்றத்தையும் எவ்வாறு அறியச் செய்வது? அவர்களுடைய மனதில் என்றென்றுமாக நிலைத்து நிற்கும்படியும், அவர்கள் பாடும்படியும் அவர்களுடைய ஒரு பாடலைக் கொடுக்கிறார். அந்தப் பாடலைப் பாடும்போது, அது அவர்களை யோசிக்கச் செய்யும், அது அவர்களை உணர்த்துவிக்கும். காலங்காலமாக கிறிஸ்தவ சபைகளில் பாடப்படுகிற ஞானப்பாட்டுகளின் சத்தியங்கள் நம்மை உணர்த்திக்கொண்டே இருக்கின்றன என்பது உண்மையல்லவா? பாடல்களின் வாயிலாக இரட்சிக்கப்பட்டோரும், பின்மாற்றத்திலிருந்து திரும்பியோரும், கர்த்தருடைய சேவைக்கும், ஊழியத்திற்கும் தங்களை அர்ப்பணித்தோரும் ஏராளம் ஏராளம்.

இந்தப் பாடல் இஸ்ரயேல் மக்களுடைய வரலாற்றின் முழு சுருக்கத்தை விவரிக்கிறது. வானத்தையும் பூமியையும் அழைப்பதன் மூலம் இந்தப் பாடலைத் தொடங்குகிறார். தேவனின் பெயரைப் பிரகடனம் செய்கிறார். தேவன் தனது பண்புகளிலும், அவனுடைய எல்லா வழிகளிலும் பரிபூரணமானவர். அவர் முற்றிலும் உண்மையுள்ளவர், முற்றிலும் நேர்மையானவர் மற்றும் முற்றிலும் உண்மையுள்ளவர். இருப்பினும், இஸ்ரயேலர்கள் தங்களுடைய மதிகேட்டினால், தந்தையைப் போலப் பராமரித்த அவரை நிராகரித்துவிட்டது துக்கமான காரியமே.

தீங்கிலிருந்தும், எதிரிகளிடமிருந்தும் பாதுகாக்கும் கன்மலையாக அவர் திகழ்கிறார் (வச. 4), அதுவே நமக்கான அடைக்கலம், தாகம் தீர்க்கும் ஜீவதண்ணீர், வெயிலுக்கு ஒதுங்கும் புகலிடம். கன்மலையின் தேனினால் நம்மை திருப்தியாக்குகிறார். அதிலிருந்து வடியும் எண்ணெயினால் நம்மைப் போஷிக்கிறார் (வச. 13 மற்றும் 31:2; 71:3; ஏசா. 32:2).

சதாகாலங்களிலுமுள்ள இந்தத் தேவன் நமக்கு இன்னும் என்ன செய்கிறார். உலகத்தின் பல்வேறு மக்கள் கூட்டத்திலிருந்து அவர் அவர்களைத் தெரிந்தெடுத்தார், இவர்களைக் கொண்டே பிற இனங்களைத் தீர்மானித்தார் (வச. 8). இவர்களைத் தம்முடைய சொந்தச் சொத்தாக சுதந்தரமாகப் பாவித்தார் (வச. 9) தொலைந்து போன ஆடுகளைப் போலிருந்த அவர்களைக் கண்டுபிடித்தார், அவர்களை ஆட்டு மந்தையைப் போல ஒரு நல்ல மேய்ப்பனாக நடத்தினார், அவர்கள் தவறிழைத்தபோது உணர்த்தினார், கண்ணின் இமைகளாலும், இமையின் முடிகளாலும், நெற்றி மற்றும் கன்னத்தின் எலும்புகளாலும் பாதுகாக்கப்படுகிற கண்மணியைப் போலக் காத்தருளினார் (வச. 10). இஸ்ரயேலரைத் தொடுகிறவன் கர்த்தருடைய கண்மணியைத் தொடுகிறான் என்று பிற்காலத்தில் சகரியாக அறிவிக்கிறார் (2:8). கண்மணியைப் போல என்னைக் காத்தருளும் என்று தாவீது ஜெபிக்கிறான் (சங். 17:8). நாமும் அவருக்கு அவ்விதமாக இருக்கிறோம், இத்தகைய பாதுகாப்பை அவரிடமிருந்து கேட்கலாம். இறுதியாக எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அவர்களை உயர்த்தினார் (வச. 13).

நம்மைக் குறித்து பவுல் இவ்விதமாகக் கூறுகிறார்: “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார் (ரோமர் 8:28-30).