November

அழுகையும் களிப்பும்

(வேதபகுதி: ஆதியாகமம் 15:7-21)

“சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின.” (வச. 17).

இந்தப் பகுதி இஸ்ரயேல் தேசத்தின் முழு வரலாற்றையும் மட்டுமின்றி, நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் முழுக் கதையையும் சுருக்கமாகச் சொல்கிறது எனலாம். புகைகிற சூளை மற்றும் அக்கினிச் ஜுவாலை; அதாவது நம்மைத் துன்பப்படுத்தும் சூளை போன்ற பாடுகள் மற்றும் அதிலிருந்து வெளியே வருவதற்கு அக்கினிஜுவாலை போன்ற விடுதலையின் வெளிச்சம். இது துன்பத்தைத் தொடர்ந்து வருகிற ஆசீர்வாதத்தின் கதையைச் சொல்கிறது. முதலில் இஸ்ரயேல் சூளையில் உள்ளது, பின்னர் அவர்கள் மீது விளக்கு பிரகாசிக்கிறது. இது அவர்களுடைய வரலாற்றில் மாறிமாறி நடக்கிறது. அவர்கள் எகிப்தில் நானூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்தார்கள். பிற்பாடு ஆபிராமுக்கு வாக்களிப்பட்ட சுதந்தர நாட்டுக்கு வந்தார்கள். தற்போது அவர்கள் தங்கள் அவிசுவாசத்தின் நிமித்தம் இரண்டாயிரம் ஆண்டுகளாக சூளையில் இருக்கிறார்கள். ஒரு காலம் வர இருக்கிறது; அது அவர்களுடைய வரலாற்றில் சூளையின் உச்சகட்டம். அப்பொழுது அவர்கள் தங்கள் குற்றத்தை உணர்ந்து தங்கள் மேசியாவை நோக்கிக் கதறுவார்கள். அவர் அவர்களுக்கு ஒரு விடுதலையின் விளக்காக வந்து அவர்களைக் காப்பாற்றுவார்.

நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் கதையும் இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவுடன் அது வெற்றிப் படிக்கட்டுகளாக மாறுகின்றன. இன்னும் மேல் நோக்கி நகரும்போது, அதாவது ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி நகரும்போது, சோதனை என்னும் சூளையின் வழிலே கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே நம்முடைய சுயம், பெருமை, போன்றவை அந்த சூளையின் நெருப்பால் எரிக்கப்படுகின்றன. நாம் நம்முடைய சொந்தப் பெலன் இழந்து, செய்வதறியாது திகைக்கும்போது கிறிஸ்து விளக்காக வந்து நமக்கு உதவி செய்கிறார். நம்முடைய வாழ்க்கையைப் பிரகாசமானதாக மாற்றுகிறார். இந்த அனுபவங்களைக் கடந்து செல்லாத கிறிஸ்தவர்கள் இருக்க முடியாது எனலாம். இதைத் தாவீது தன்னுடைய கவிதை மொழிகளில், “அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்” (சங். 30:5) என்று விவரிக்கிறார்.

“நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன்” என்று அடையாளத்தைக் கேட்ட ஆபிராமுடன் கர்த்தர் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். உடன்படிக்கை இருவருக்குரியது. ஆனால் தன்னை மட்டுமே நிபந்தனையின் பங்குதாரராக ஆக்கிக்கொண்டார். ஆசீர்வாதம் ஆபிராமுக்கு கிடையாமற்போனால் அதற்கு நானே பொறுப்பு என்று கர்த்தர்தாமே அதை ஏற்றுக்கொண்டார். உடன்படிக்கையை மீறுபவர்கள்மேல் சாபம் வந்து சேரும். ஆபிராமின்மீது அந்தச் சாபம் வராதபடி பார்த்துக்கொண்டார். எவ்வளவு கரிசணை மிக்க கர்த்தர்? நம்முடைய இரட்சிப்புக்காக, ஆசீர்வாதங்களுக்காக, நாம் எதையும் செய்யாதபடி கிறிஸ்துதாமே நம்முடைய பாவங்களையும் சாபங்களையும் சிலுவையில் சுமந்தார். விலங்குகள், பறவைகள் அல்ல கிறிஸ்துவின் மரணமே நமக்கு உடன்படிக்கையின் அடையாளம். ஆபிராமைப் போல நாமும் விசுவாசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்.