November

வெற்றியின் ஆபத்து

(வேதபகுதி: ஆதியாகமம் 14:17-24)

“… ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்.” (வச. 22).

“போருக்குமுன் கொள்ளவேண்டிய எச்சரிக்கையைக் காட்டிலும், பெற்றிக்குப் பின்னர் நமக்கு அதிக எச்சரிக்கை அவசியம்” என்று திருவாளர் ஆன்ட்ரு போனார் கூறினார். வெற்றிக்குப் பின் ஏற்படும் சோதனையே அநேகரைத் தோல்வியடையச் செய்திருக்கிறது. இங்கே மேலோட்டமாகப் பார்த்தால், சோதோமின் ராஜா ஆபிராமுக்கு அளித்த வெகுமதி நியாயமானதாவும் சரியானதாகவும் தெரிகிறது. ஆபிராம் தனது போரை சோதோமின் அரசனுக்காக அல்ல, மாறாக லோத்துக்காகவும் அவனது குடும்பத்திற்காகவுமே செய்தான். ஆயினும், ஆபிராமின் வெற்றி பொல்லாத மக்களும், கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளும் வாழ்ந்த சோதோமுக்கும் பெரும் நன்மையைக் கொண்டு வந்தது. இதனாலேயே சோதோமின் ராஜா ஆபிராமைச் சந்திக்க வந்தான். ஒரு வெற்றி வீரனுக்கு வழங்கப்பட வேண்டிய வழக்கமாக வெகுமதியை அளிப்பதற்காக அரசர் தலைமையில் ஒரு சிறப்புக் குழுவின் வடிவில் அச்சோதனை வந்தது. “பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும்; மக்களை என்னிடம் கொடுத்துவிடும்” என்பதே அது.

இந்தச் சோதனை மிக நுணுக்கமானது, மிகச் சிக்கலானது. அதாவது உயிரைப் பணயம் வைத்து பெற்ற வெற்றிக்கான பிரதிபலன். அதாவது நீ உழைத்திருக்கிறாய், ஆகவே இதைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவன் என்னும் சிந்தையை உருவாக்குவது. ஆனால் ஆபிராமின் பதில் நமக்கு வியப்பாக இருக்கிறதல்லவா? பொதுவாக வெளிப்படையாக வரும் ஆசீர்வாதத்தில் மறைமுக ஆபத்து இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதை ஆபிராம் உணர்ந்தான். பரிசைப் பெற்றுக்கொண்ட பின்னர், சோதோமின் அரசன் ஒரு நிபந்தனையை விதித்தாலோ, அல்லது ஒப்பந்தத்தில் கையெழுத்திடச் சொன்னாலோ என்ன செய்வது? ஏறத்தாழ இன்றைய நாட்களில், வங்கிக் கடன், வங்கிக் கடன் அட்டை வேண்டுமா என்று அலைபேசி அழைப்பு வருவதுபோல்தான் அது. ஆகவே, “ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன்” என்று வாய்ப்பை நிராகரித்துவிட்டான்.

இந்தச் சிக்கலான நேரத்தில் ஆபிராம் எப்படி தெளிவான முடிவை எடுத்தான்? சோதோமின் ராஜா ஆபிராமை தனது தந்திரமான சலுகையுடன் சந்திப்பதற்கு முன்னதாகவே ஆபிராம் மற்றொரு ராஜாவாகிய மெல்கிசேதேக்கைச் சந்தித்திருந்தான். இவர் ஓர் அரசர் மற்றும் ஆசாரியர். இவர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய ஆசாரியத்துவத்திற்கு ஒரு நிழலாக இருக்கிறார். நம்முடைய சோதனைகளை எதிர்கொள்வதற்ககாக இடைவிடாடல் நமக்காகப் பரிந்துபேசிக்கொண்ருக்கிற நித்திய பிரதான ஆசாரியராக கிறிஸ்துவை இவர் பிரதிபலிக்கிறார். இவர் ஆபிராமை ஆசீர்வதித்தார். ஆபிராம் இவரைச் சந்திக்காமல் சென்றிருந்தால் அந்தப் பொறியில் மாட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனின் ஆசீர்வாதத்தை உணராதிருந்தால் சோதோமின் ராஜாவின் வளையில் விழுந்திருப்பான். கிறிஸ்துவுடனான நெருக்கமே இந்த உலகத்தின் கண்ணியிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. ஆபிராமைப் பணக்காரானாக்கினால் அது தேவனாக இருக்கட்டும், நீ உன் அழிந்துபோகிற செல்வங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுப்போ என்று சொல்லிவிட்டான். என்னே ஒரு தைரியம்! இதுதான் வெற்றிக்குப் பின் வரும் வெற்றி! ஒரு மெய்யான விசுவாச வீரனின் வெற்றி.