November

தேவனின் தெரிந்தெடுப்பு

(வேதபகுதி: ஆதியாகமம் 11:10-32)

“தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், … அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டுடான்; அவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்” (வச. 31).

ஆதியாகமப் புத்தகத்தில் இதுவரை சொல்லப்பட்ட வம்சாவழிப் பட்டியலிலிருந்து இந்த பட்டியலின் வேறுபட்ட அம்சம் என்னவென்றால், மனிதர்களுடைய வாழ்நாட்களின் ஆண்டுகள் வேகமாக குறைந்து வருவதுதான். பெருவெள்ளத்துக்குப் பின் வாழ்ந்தோரின் சராசரி ஆயுட்காலம் படிப்படியாகக் குறைந்துவிட்டது. மனிதனின் வீழ்ச்சி, காலநிலை மாற்றங்கள் போன்றவற்றின் விளைவாகவும், பாவம் பெருகியதன் விளைவாகவும் இருக்கலாம். பெருகிவரும் பாவத்தை ஒழிக்க முழு உலகத்துக்கான தீர்ப்பை வழங்கமாட்டேன் என்று தேவன் நோவாவுக்கு உறுதியளித்தார். இந்த வாக்குறுதியை மனதில் கொண்டு, மக்களைக் காப்பாற்றும் தம்முடைய சிறப்பான வழிமுறையை நடைமுறைப்படுத்த ஒரு குடும்பத்தைத் தெரிந்தெடுக்கிறார்.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, அழைக்கப்பட்ட “ஆபிராம்” என்ற ஒரு மனிதனின் பெயரை இங்கே முதலாவது வாசிக்கிறோம். நோவாவின் பிள்ளைகளில் சேமைத் தெரிந்துகொள்கிறார், சேமின் ஐந்து குமாரர்களில் அர்பக்சாத்தைத் தெரிந்துகொள்கிறார், பின்பு தேராகுவின் மூன்று குமாரர்களில் ஆபிராமைத் தேவன் தம்முடைய திட்டத்துக்கு ஏற்றவனாகக் காண்கிறார். தேவன் ஆபிராமை நல்லவனாகக் கண்டதால் அழைக்கவில்லை. அவன் ஊர் என்கிற கல்தேயப் பட்டணத்தில் சிலைவணக்கத்தில் ஈடுபட்டவன்தான். தேவன் தம்முடைய கிருபையினாலேயே ஆபிராமை அழைத்தார். தேவன் அழைக்காவிட்டால் அவன் ஒரு சிலை வழிபாட்டுக்காரனாகவே மரித்திருப்பான். ஆனால் ஆபிராம் தேவனுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்தான்.

ஆபிராம் தன் தந்தை தேராகுவின் தலைமையில் ஊர் என்ற பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டான். அவனுடைய தந்தையால் தன் சொந்த இடத்தை விட்டு வெளியே வரமுடிந்ததே தவிர கானானுக்குள் அழைத்துச் செல்லமுடியவில்லை. தேராகு பிரிந்து வந்தான், ஆனால் தன் முழு இருதயத்தையோ தேவனிடத்தில் அப்பணிக்கவில்லை. அவன் ஆரானுக்கு வந்தபோதோ அதன் செல்வச் செழிப்பும், வளமும் அவனைக் கவர்ந்துவிட்டன. “தாமதம்” என்னும் தன்னுடைய பெயருக்கு ஏற்றாற்போல் ஆரானில் தங்கிவிட்டான். கிறிஸ்தவ வாழ்வில் பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையைப் போலவே ஒப்புவித்தலும் முக்கியமானது. நாம் தேராகுவைப் போலவே கிறிஸ்தவர்களாக நம்மை உலகத்திலிருந்து பிரித்துக்கொள்கிறோம். ஆனால் நாம் நம்மை கர்த்தருக்கு முற்றிலுமாக ஒப்புவிக்கத் தவறிவிடுகிறோம். அவனால் வாக்குத்தத்த பூமியின் ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியாமலேயே போய்விட்டது. தேராகு வெளிப்புறமான ஆசீர்வாதங்களைப் பார்த்துத் திருப்தியடைந்தான்; எவ்வித முன்னேற்றமுமில்லாமல் அங்கேயே மரித்தான்.

பல நேரங்களில் ஆண்டவரைக் காட்டிலும் குடும்பங்களின்மேல் வைக்கப்படும் அதீதப் பற்று தேவ ஆசீர்வாதங்களைத் தாமதப்படுத்தி விடுகிறது. “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ என்னைப் பின்பற்றி வா” என்பதே நம்முடைய ஆண்டவருடைய அழைப்பாக இருக்கிறது. மேலும் கிறிஸ்துவின் ஒரு மெய்யான சீடனாக வாழ்வதற்கு குடும்பம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார். ஆனால் தேவன் ஆபிராமைத் தொடர்ந்து நேசிக்கிறார். இதற்குப் பின்னர், தந்தையின் பிரதிபலிப்பு தன்மீது தாக்கத்தை ஏற்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனால் தேராகுவின் சொகுசு வாழ்க்கை லோத்தின் வாழ்வில் பிரதிபலித்தது. கிறிஸ்துவின் தன்னமலற்ற தியாகச் செயலும், அவமானத்தை எண்ணாமல் முன்னேறிச் சென்ற பரலோகப் பார்வையும் நம்மில் பிரதிபலிக்க இடங்கொடுப்போமாக.