May

மெய்யான ஓய்வும் இளைப்பாறுதலும்

(வேதபகுதி: லேவியராகமம் 23:1-3)

“ஆறுநாளும் வேலை செய்ய வேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்ய வேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக” (வச. 3).

ஓய்வு நாள் படைப்பில் தொடங்குகிறது. தேவன் ஆறு நாளில் இப்பிரபஞ்சத்தைப் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அதாவது அந்த நாளில் படைப்பின் எவ்விதச் செயலும் செய்யாமல் ஓய்ந்திருந்தார். சீனாய் மலையில் மோசேக்கு நியாயப்பிரமாணத்தை வழங்கியபோது, தன்னுடைய எல்லாக் கிரியைகளிலும் ஓய்வுநாளை மையமாகக் கொண்டிருக்கிறேன் என்பதை தம்முடைய மக்களுக்கு நினைவுபடுத்தும்பொருட்டு அவர் இந்த ஓய்வுநாள் கட்டளையை மீண்டும் வழங்கினார் அல்லது ஓய்வுநாள் கட்டளையைப் புதுப்பித்தார்.

இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையை ஓய்வுநாள் என்றும், சிறுவர்களுக்கான ஞாயிறு பள்ளியை ஓய்நாள் பாடசாலை என்றும் பலர் கூறுகிறதை நாம் கேட்டிருக்கலாம். இது அறியாமையினால் சொல்லக்கூடிய வார்த்தை. ஞாயிற்றுக் கிழமையைக் குறித்து ஒருபோதும் ஓய்வுநாள் என்று வேதத்தில் சொல்லப்படவில்லை. அது ஒருபோதும் ஓய்வுநாளாக இருந்ததில்லை. இவ்வாறு ஓய்வுநாளாகிய சனிக்கிழமையை ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றுவது முற்றிலும் வேதத்துக்குப் புறம்பானது. இன்றைக்கும் இஸ்ரயேலர்கள் சனிக்கிழமையையே ஓய்வுநாளாக அனுசரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமைதான் ஓய்வுநாள் அன்றுதான் ஆராதனை செய்ய வேண்டும் என்று சில கிறிஸ்தவர்கள் நினைக்கிறார்கள். இதுவும் தவறானது. கிறிஸ்தவர்கள் நியாயப்பிரமாணக்காரர்கள் அல்லர். இப்படியிருந்தால் நியாயப்பிரமாணத்தின் எல்லாக் கட்டளைகளையும் இன்றும் அனுசரிக்க வேண்டியது வரும். நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது ஓய்வுநாள் என்பது ஒரு நிழல், அது ஓர் அடையாளம். இதன் மூலமாக தேவன் வேறொன்றை நமக்குச் சொல்ல வருகிறார். இதன் கருத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

பவுல் கொலோசெயருக்கு எழுதும்போது, பழைய ஏற்பாட்டுக் காரியங்களாகிய பண்டிகைகள், மாதப்பிறப்புகள், ஓய்வுநாட்கள் ஆகியவை, “வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது, அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது” என்று எழுதுகிறார் (2:16-17). அதாவது ஓய்வுநாளை நாம் எழுத்துப்பூர்வமாக அனுசரிக்க அல்ல, அதன் பொருளை அறிந்து நாம் பயன்படுத்த வேண்டும். “நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர், நம்முடைய இரட்சிப்புக்காக நாம் முயற்சி செய்து வந்தோம். கிறிஸ்து கல்வாரியில் அந்த வேலையைச் செய்து முடித்துவிட்டார் என்று நாம் உணர்ந்தபோது, நம்முடைய பயனற்ற முயற்சிகளை நிறுத்திவிட்டு மீட்பரிடத்தில் விசுவாசம் வைத்தோம்” என்று திருவாளர் வில்லியம் மெக்டொனால்டு விவரிக்கிறார் (எபிரெயர் 4:9-10).

இது கிறிஸ்துவுக்குள்ளாக நாம் அனுபவிக்கும் நித்திய இளைப்பாறுதலைக் குறிக்கிறது. மேலும் இப்பொழுது மனிதன் தன்னுடைய பிரயாசத்திலிருந்து விடுபட்டு கிறிஸ்து நமக்கு வழங்கிய இளைப்பாறுதலைச் சார்ந்துகொள்வது. நம்முடைய சுயகிரியைகளை ஒழித்துவிட்டு கிறிஸ்துவின் நிறைவேற்றி முடிக்கப்பட்ட செயலில் நம்மை இணைத்துக்கொள்வது ஆகும். பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளாக கிரியை செய்ய இடம் கொடுப்பது. இது நம்மை ஆவிக்குரிய பலன்களை கொடுப்பதற்கு நேராக வழிநடத்தும்.