May

மகிமை வெளிப்படும் இடம்

(வேதபகுதி: லேவியராகமம் 9:1-24)

“பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது” (வச. 23).

ஓர் அற்புதமான காட்சி. ஆரோனுக்கும் அவனுடைய குமாரருக்கும் எட்டு நாட்களுக்கான சுத்திகரிப்பு முறைமைகள் முடிந்துவிட்டன. எட்டாம் நாளில் அவர்கள் முதன் முதலாக ஆசரிப்புக்கூடாரத்துக்குள் சென்று பலிசெலுத்துகிறார்கள். இலட்சக்கணக்கான மக்கள் கூடாரத்தின் முன்னால் இருந்து அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கர்த்தருடைய கட்டளையின்படி ஆரோனும் மோசேயும் உள்ளே கூடாரத்துக்குள் பிரவேசித்துவிட்டு திரும்பி வந்து மக்களை ஆசீர்வதிக்கிறார்கள்.

அப்பொழுது இரண்டு முக்கியமான காரியங்கள் நடைபெற்றன. முதலாவது கர்த்தருடைய மகிமை எல்லா மக்களுக்கும் வெளிப்பட்டது. ஷெக்கினா மகிமையின் வெளிச்சம் அவ்விடத்தை நிரப்பியது. இரண்டாவதாக கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்திலிருந்த சர்வாங்க தகனபலியையும், கொழுப்பையும் எரித்தது. மக்களை அதைக் கண்டு ஆரவாரித்தார்கள், முகங்குப்புற விழுந்தார்கள் (வச. 24).

கிறிஸ்துவின் மரணம் தேவனுடைய மகிமையின் பிரசன்னத்தை மக்களிடத்தில் கொண்டுவந்தது. ஆரோனின் செலுத்திய பலிகள் மக்களை ஆசரிப்புக்கூடாரத்துக்கு நேராகக் கொண்டுவந்ததுபோல கிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக நாமும் கர்த்தருடைய மகிமை விளங்கும் திருச்சபைக்கு நேராக கொண்டுவரப்பட்டிருக்கிறோம். பழைய ஏற்பாட்டில் மக்களுக்காக ஒரு பிரதான ஆசாரியர் இருந்தார், இன்றைக்கோ மக்களாகிய நாமோ ஆசாரியர்களாக ஆக்கப்பட்டிருக்கிறோம். ஆகவே நாம் செலுத்துகிற ஆவிக்குரிய பலிகளும், தேவனுக்காகச் செய்கிற பணிகளும் அவருடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாக அமைய வேண்டும். அந்த மகிமையை மக்கள் காண வேண்டும், மக்கள் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.

மக்கள் ஆவலோடு கூடாரத்தின் வாசலில் காத்திருந்தார்கள். தங்களுக்காக செலுத்தப்படுகிற பலிகளைக் குறித்து அவர்கள் ஆர்வத்துட.ன் இருந்தார்கள். தங்களுடைய பிரதிநிதியைக் குறித்த உத்வேகம் அவர்களுக்கு இருந்தது. புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் மக்களின் நன்மதிப்பை இந்த வகையில் பெற்றுக்கொள்கிறோமா? இவர்கள் தங்களுக்காக தேவனிடம்
ஜெபிப்பவர்கள், நம்முடைய நன்மைக்காக உழைக்கிறவர்கள் என்று பெயரைப் பெற்றிருக்கிறோமா?

தேவனுடைய கூடாரத்திலிருந்து புறப்பட்ட நெருப்பு, பலியின் மாம்சத்தைப் பட்சித்தது. நம்முடைய ஆவிக்குரிய பலிகள் தேவனுக்குப் பிரியமானவையாக இருக்கின்றனவா? அவரால் ஏற்றுக்கொள்ளப்படுபவையாக இருக்கின்றனவா? நம்முடைய ஆராதனைகளில் அந்நிய அக்கினி ஊடுருவாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நம்முடைய உணர்வு, மனக்கிளர்ச்சி, உற்சாகம் இவை போன்ற காரியங்களின் வெளிப்பாடு அல்ல ஆராதனை. அது கர்த்தருடைய மகிமை விளங்கும் இடமாகவும், நாம் தேவனை முகங்குப்புற விழுந்து பணிகிற இடமாகவும் இருக்க வேண்டும்.