March

மனிதர்களோடு வாசம்பண்ண விரும்புகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 25:1-9)

“நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக” (வச. 9).

தேவன் கற்களினால் எழுதப்பட்ட தம்முடைய பிரமாணத்தை எழுதிக் கொடுக்கும்படி மோசேயை மலையுச்சிக்கு அழைத்தார். அதைத் தொடர்ந்து, மனிதர்களின் நடுவில் நான் வாசம்பண்ண விரும்புகிறேன் என்றும், அதற்கான ஒரு வாசஸ்தலத்தை உருவாக்க வேண்டும் என்ற தம்முடைய மனவாஞ்சையைத் தெரிவிக்கிறார். பரலோகத்தில் தூதர்களின் துதிக்கு நடுவில் வீற்றிருக்கிற தேவன் இந்தப் பூமியில் மனிதர்களின் நடுவிலும் வாசம்பண்ண விரும்புகிறார் என்பது ஆச்சரியமளிக்கும் காரியமல்லவா? அதற்காக ஒரு பரிசுத்த கூடாரத்தை பாவிகளின் நடுவில் அமைக்க வேண்டும் என விரும்பியது ஆச்சரியமல்லவா? மேலும் இந்தக் கூடாரம் தம்மால் அழைத்துவரப்பட்ட மனிதர்களின் பங்களிப்பினால் நிறைவேற்றப்பட வேண்டும் என வாஞ்சித்தது விந்தையல்லவா? தேவனுக்காக மாபெரும் ஆலயத்தைக் கட்டிய சாலொமோன் அரசனின் கூற்று இதன் உண்மையைப் புலப்படுத்தும்: “மெய்யாகவே தேவன் பூமியில் வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? (1 இரா. 8:27).

“அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்” (யோவான் 1:14) என்று யோவான் நமக்கு அறிவிக்கிறார். “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவில் நான் இருக்கிறேன்” (மத். 18:20) என்று ஆண்டவர்தாமே சொன்னார். இன்றைய காலகட்டத்தில், ஒரு கட்டடத்தில் அல்ல, பாவம் மன்னிக்கப்பட்ட அவருடைய பிள்ளைகளாக நாம் எப்பொழுதெல்லாம் சபையாகக் கூடிவருகிறோமோ அப்பொழுதெல்லாம் அது சிறிய சபையாக இருந்தாலும் பெரிய சபையாக இருந்தாலும் சபையின் தலைவராம் கிறிஸ்து அதன் நடுவில் இருக்கிறார். இதுவும் நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறதல்லவா. கிறிஸ்துநாதர் தம் சொன்னபடியே சபையில் வீற்றிருக்கும் போது, அழைக்கப்பட்ட மக்களாகிய நாம் பல நேரங்களில் சபை கூடுகையைப் புறக்கணிப்பது துக்கமான காரியம் அல்லவா?.

இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கை கொண்டுவர வேண்டும் என்றும், அது மனப்பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் மோசேயிடம் தேவன் கூறினார் (வச. 2). புதிய ஏற்பாட்டில் சபையின் நடுவில் வீற்றிருக்கிற ஆண்டவருக்குச் செலுத்துவதற்கு ஏதுமில்லாமலும், ஆயத்தமில்லாமலும் எத்தனை தடவை சென்றிருக்கிறோம்? அல்லது செய்கிறதை கடமைக்காகவும் சடங்காச்சாரமாகவும் எத்தனை தடவை செய்திருக்கிறோம்? இவற்றையெல்லாம் கண்டு அவர் துக்கம் அடைந்திருப்பார் அல்லவா? சபையின் கூடுகையில் செய்யப்படுகிற எந்தக் காரியமானாலும் அது நல்லதோ கெட்டதோ, ஐக்கியமோ அல்லது பிரிவோ, உற்சாகத்துடனோ அல்லது சோர்வுடனோ அவை எல்லாவற்றையும் அவர் கவனிக்கிறார். ஆகவே தேவன் நம் நடுவில் இருக்கிறார் என்ற சிந்தையோடும், அவருக்கே உரிய பயபக்தியோடும் ஆராதனையில் பங்குபெறுவோம், ஆசாரியர்கள் என்ற முறையில் மனப்பூர்வமான பங்களிப்பை செலுத்துவதற்கு எப்பொழுதும் ஆயத்தமாயிருப்போம்.