June

அவிசுவாசம் ஆசீர்வாதத்துக்கு எதிரி

(வேதபகுதி: எண்ணாகமம் 13:1-33)

“நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மால் கூடாது; அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்” (வச. 2).

விசுவாசித்து நடவாமல் கண்டு நடப்பதே மனித மனதின் இயல்பு. கானான் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன் என்று தேவன் வாக்களித்துவிட்டார். அது எப்படிப்பட்ட தேசம் என்பதையும் பல தடவை சொல்லிவிட்டார். அதைச் சுதந்தரித்துக்கொள்வதே அவர்களுடைய பொறுப்பு. எப்பொழுது தேவ வார்த்தையை நம்ப மறுக்கிறோமோ அப்பொழுது நாம் உலக வழியைத் தேடுவோம். கானான் நாட்டை வேவு பார்ப்பதற்கு பன்னிருவரை அனுப்பக் காரணமாயிருந்தது யார்? இந்த அதிகாரத்தின் முதல் இரண்டு வசனங்கள் கர்த்தர் அனுப்பச் சொன்னதாக வாசிக்கிறோம் (எண். 13:1-2). ஆயினும் உபாகமம் முதல் அதிகாரத்தில், மக்கள் கேட்டுக்கொண்டதிற்கிணங்க மோசே அனுப்பினான் என்று வாசிக்கிறோம் (உபா. 1:20-23). பல நேரங்களில் நம்முடைய விடாப்பிடியான வேண்டுகோள்களுக்கு கர்த்தர் செவிசாய்க்கிறார். ஆயினும் அவை நமக்கு ஆசீர்வாதத்துக்குப் பதிலாக பிரச்சினைகளைக் கொண்டுவருகின்றன.

வேவுகாரர்கள் சென்றார்கள். கானான் நாட்டைப் பற்றிய நல்ல செய்தியையும், அதன் விளைச்சல்களில் சிலவற்றையும் கொண்டுவந்தார்கள். ஆயினும் கூடவே துர்ச்செய்தியையும் கொண்டுவந்தார்கள். மோசே, யோசுவா, காலேப் ஆகியோரைத் தவிர வேறு ஒருவரும் அந்த நாட்டுக்குள் கர்த்தர் தங்களைக் கொண்டு செல்வார் என்று நம்பவில்லை. அவிசுவாசம் கர்த்தருடைய ஆசீர்வாதங்களை அனுபவிப்பதைத் தடைசெய்யும் என்பதற்கு அடையாளமாக இந்தப் பத்து நபர்கள் இருக்கிறார்கள். நற்செய்தியைக் காட்டிலும் துர்ச்செய்தி மக்களை அதிகமாகச் சென்றடைகிறது. மக்கள் அதை நம்பவும் செய்கிறார்கள். கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய சுதந்தரம் என்பது வேவு பார்ப்பதற்கு அல்ல, அதைச் சுதந்தரிப்பதற்கும் அனுபவிப்பதற்குமே ஆகும்.

உலகத்தின் மனிதர்கள், அதின் அதிகாரம், அதன் வலிமை ஆகியவை நம்மை மலைக்க வைக்கலாம். ஆயினும் நாம் பயப்படத் தேவையில்லை, உலகத்தின் முடிவுபரியந்தமும் நான் உங்களோடு இருக்கிறேன் என்ற உயிர்த்தெழுந்த கர்த்தரின் வாக்குறுதியை நாம் பெற்றிருக்கிறோம். உலகம் இராட்சதர்களைப் போலப் பலவான்களாகவும், நாம் வெட்டுக்கிளிகளைப் போல அற்பமாகவும் நம்முடைய பார்வைக்குத் தெரியலாம். ஆயினும் நாம் விசுவாசத்தை இழக்க வேண்டாம். நம்மைக் கொண்டும் பெரிய காரியங்களைச் செய்ய தேவன் ஆயத்தமாயிருக்கிறார். உலகத்தில் இருக்கிறவனிலும் நம்மோடு இருக்கிறவர் பெரியவர்.

யோசுவாவைப் போலவும், காலேபைப் போலவும் கர்த்தருடைய வார்த்தையை உள்ளபடியே நம்பி, விசுவாச வார்த்தைகளைப் பேசக்கூடிய மனிதர்களை தேவன் எதிர்பார்க்கிறார். இவர்களே மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள். ‘அந்த ஜனங்களை எதிர்க்க நம்மால் கூடாது’ என்று கூறுவோர் நடுவில், ‘நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம்’ என்று கூறுகிற காலேப்புகள் நமக்குத் தேவை. அவிசுவாசம் தடைகளை உண்டாக்கும், விசுவாசம் வழிகளைக் கண்டறியும். விசுவாசிக்கிறவர்களே கிறிஸ்துவுக்குள்ளான நன்மைகளை சுதந்தரித்துக்கொள்ள முடியும்.