June

புறங்கூறுதல் வேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 12:1-16)

“கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்” (வச. 2).

ஒருவருடைய ஆவியின் கனியில் ஒன்றாகிய சாந்தகுணம் எப்பொழுது தெரியவரும்? தனக்கு எதிராகக் காரியங்கள் நடக்கும்போது மோசே தன்னுடைய சாந்தகுணத்தை வெளிப்படுத்தினான். எதிர்ப் பேசுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தும் பொறுமையுடன் இருந்தான். மேலும் மக்களை வழிநடத்துகிற தலைவர்கள்மேல் பொறாமையால் ஏற்படும் எதிர்ப்புகளை கைக்கொள்வதற்கு மோசேயின் வழி நல்லதோர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆரோனும் மிரியாமும் மோசேக்கு விரோதமாக ஏன் குற்றஞ்சாட்டினார்கள். சற்று முன்னர்தான் மோசே தலைமைத்துவப் பொறுப்புகளை எழுபது பேருக்கு கொடுத்திருந்தான். அவர்களில் ஆரோனும் மிரியாமும் இல்லை. ஒருவேளை மோசேக்குப் பிறகு அப்பொறுப்பு தங்களுக்கு வரும் என்று காத்திருந்திருக்கலாம். பொறுப்பு தங்களைவிட்டுப் போனது பொறாமையை ஏற்படுத்தியிருக்கலாம்.

பொறாமையின் எதிர்ப்பு எப்பொழும் நேரடியாக வருவதில்லை. மோசேயின் மீது விழுந்த தனிப்பட்ட தாக்குதல் இது, அதாவது அவருடைய மனைவியின் பெயரில் எழுந்தது. பொறாமை ஒருவரை ஒழித்துக்கட்ட காரண காரியங்களைத் தேடியழையும். சொந்தக் குடும்பத்திலிருந்து எதிர்ப்புகள் வராது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. சொந்தக் குடும்பத்தார்களே பொறாமைப்படுவார்கள் என்பதற்கு ஆரோனும் மிரியாமும் நம் கண்முன் நிற்கும் அடையாளங்களாயிருக்கிறார்கள். சொந்தக் குடும்பத்தில், ஐக்கியமாயிருக்கும் சபைகளில், உடன் ஊழியர்களிடமிருந்து, ஊழிய ஸ்தலங்களிலும், நிறுவனங்களிலும் பொறாமைகள் வந்து இருதயத்தை உடைக்கும் காரியத்தைப் போல் வேறெதுவும் இருக்க முடியாது. அப்பொழுதெல்லாம் தேவன்மேல் பாரத்தைப்போட்டுவிட்டு நம்முடைய சாந்தகுணத்தையே காண்பிக்க வேண்டும். இதுவே மோசே நமக்குச் சொல்லிக் கொடுத்த பாடம். தேவன் தலையிட்டு காரியத்தை முடித்துவைப்பார்.

பொறாமை ஏன் வருகிறது? விரோதங்கள் ஏன் எழுகின்றன? கர்த்தர் தங்களுக்கு அளித்த பொறுப்புகளில் திருப்தியில்லாதது ஒரு காரணமாக இருக்கிறது. ஆரோன் பிரதான ஆசாரியன், மிரியாம் ஒரு தீர்க்கதரிசினி (யாத். 15:20). இவர்களுக்கென்று தேவன் தனிப்பட்ட சிறப்பான பொறுப்புகளை அளித்திருக்கிறார். மோசேக்கு என்று தேவன் வேறு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். “எங்களைக் கொண்டும் தேவன் பேசினதில்லையோ” என்று கூறி மோசேயின் பொறுப்புக்கு இருவரும் ஆசைப்பட்டிருக்க வேண்டியதில்லை. சபைகளில் விசுவாசிகளுக்கு தேவன் ஒவ்வொருவருக்கென்றும் ஆவிக்குரிய வரங்களைக் கொடுத்திருக்கிறார். தேவன் தங்களுக்கு என்ன பொறுப்பு கொடுத்திருக்கிறாரோ அதை உண்மையுடன் பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைய வேண்டும். எல்லாரும் எல்லா பொறுப்புகளையும் சரியாக நிறைவேற்ற முடியாது.

மிரியாமே இப்பிரச்சினைக்கு முதற்காரண கர்த்தாவாக இருந்திருக்கலாம். தொழுநோய் ஏற்பட்டது. ஆரோன் மோசேயிடம் மன்னிப்புக் கேட்டான் (வச. 11,12). மோசே மிரியாமுக்காக ஜெபித்தான். கர்த்தர் இரக்கம்பாராட்டினார். ஒரு தலைவனுடைய உண்மையான அன்பையும், தாழ்மையையும் மோசே வெளிப்படுத்தினான். இதுவே ஒவ்வொரு விசுவாசியும் செய்ய வேண்டிய காரியம். வையப்படும்போது பதிலுக்கு வையாமலும், பாடுபடும்போது அவர்களை எதிர்த்துப் பயமுறுத்தாமலும் இருந்த நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நினைத்துக்கொள்வோம். இவரே மோசேக்கும் முன்மாதிரி, நமக்கும் முன்மாதிரி. இவரையே பின்பற்றுவோம்.