July

லேவியர்: கர்த்தருடைய ஊழியர்கள்

எண்ணாகமம் 35:1-8

“இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு” (வச. 2).

லேவியர்கள் தேவனுடைய வேலைக்காக அழைக்கப்பட்டவர்கள். இவர்களுடைய பணி ஆசரிப்புக்கூடாரத்தையும் அதைச் சார்ந்ததுமாகவே இருந்தது. ஆசாரிப்புக்கூடாரம் நிர்மாணிக்கப்பட்டது தொடங்கி, முப்பத்தெட்டு ஆண்டுகளாக பாலைவனத்தில் அதைச் சுமந்து வந்தவர்கள் இவர்களே. முந்தின அதிகாரத்தில் நாட்டைப் பங்கு பிரிக்கும் குழுவில் இவர்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் தங்களுடைய நிலை என்னவாகும் என இவர்கள் யோசித்திருக்கலாம். கர்த்தர் தமக்காகப் பணி செய்கிறவர்களை ஒருபோதும் மறந்துவிடமாட்டார். அழைத்தவர் உண்மையுள்ளவர், முடிவுபரியந்தமும் நடத்திச் செல்வார்.

யாக்கோபு தன்னுடைய முதிர் வயதில், தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் போது, “யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன்” என்ற சாபத்தையே லேவிக்கு வழங்கினான். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், வனாந்தரத்தில் இஸ்ரயேல் மக்கள் விக்கிரக ஆராதனையில் ஈடுபட்டு, தேவனுக்கு எதிராகத் திரும்பியபோது இந்த லேவியர்கள் கர்த்தருடைய பக்கம் நின்றார்கள் (யாத். 32 அதி.). இஸ்ரயேல் நாட்டில் அவர்களைச் சிதறப்பண்ணுவேன் என்னும் கோபத்தின் வார்த்தையை தேவன் மகிழ்ச்சியின் ஆசீர்வாதமாக மாற்றினார். லேவியர்களுக்கு இஸ்ரயேல் மக்கள் நடுவில், நாடு முழுமைக்கும் நாற்பத்தியெட்டு பட்டணங்களைக் கொடுத்தார். தேவனுடைய கிருபையையும் இரக்கத்தையும் நாம் என்னவென்று சொல்ல முடியும்? நம்மிடத்திலும் தேவன் இவ்விதமாகவே தம்முடைய கிருபையையும் இரக்கத்தையும் காண்பிக்கிறார். சாபத்துக்கு உள்ளானவர்களாகிய நம்மை தேவன் தம்முடைய கிருபையினாலே இரட்சித்து, அவருடைய பிள்ளைகளாகவும் ஊழியக்காரர்களாகவும் மாற்றியிருக்கிறார்.

லேவியர்கள் பிற கோத்திரத்தார் அளித்த நகரங்களில் குடியிருந்தார்கள். மோசே இவர்களுக்கென்று சொந்தமாகப் சுதந்தரம் கொடுக்கவில்லை. “தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி அவரே அவர்களுடைய சுதந்தரம்” (யோசுவா 13:33). கர்த்தரைச் சுதந்தரமாகப் பெற்றிருப்பது எத்தனை நற்பேறு. முழுநேரமாக உழைக்கும்படி தங்களை கர்த்தருக்கென்று ஒப்புவித்திருக்கும் கர்த்தருடைய பணியாளர்களாகிய இவர்கள் தங்களுடைய தேவைகளுக்காக அவரையே சார்ந்து வாழ வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாக இருக்கிறோம் என்று பவுல் கூறுகிறார் *(ரோமர் 8:17). கிறிஸ்துவினுடையவைகள் யாவும் நம்முடையவைகள். நாமும் எல்லாவற்றுக்காகவும் கிறிஸ்துவைச் சார்ந்துகொண்டு விசுவாச வாழ்க்கை வாழ வேண்டும் என்றே அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இன்றைக்கு நம்முடைய எல்லாத் தேவைகளுக்காகவும் கர்த்தரைச் சார்ந்து வாழ்வது மக்களிடத்தில் மறந்துபோன ஒரு சத்தியமாக மாறிவிட்டது. இன்றைக்கு விசுவாச வாழ்வு என்பது மக்களிடத்தில் வரவேற்புக்குரிய ஒன்றாக இல்லாமற்போய்விட்டது. முழு நேரமாக கர்த்தருடைய பணிக்கு ஒப்புவித்தவர்கள் அற்பமானவர்களாக எண்ணப்படுகிறார்கள். அப்படிப்பட்ட வாலிபர்களுக்கு பெண் கொடுப்பதற்கும் தயங்குகிறார்கள். ஆயினும் கர்த்தரே இவர்கள் பங்கு. அவர் ஒருபோதும் தம்முடையவர்களை மறந்துவிடமாட்டார், கைவிடவுமாட்டார். ஆகவே நாம் தைரியமாய் கர்த்தரைப் பின்பற்றுவோம்.