July

சுதந்தர நாட்டின் எல்லைகள்

எண்ணாகமம் 34:1-29

“கானான் தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது” (வச. 2).

கடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்க்கும்படி நினைவூட்டிய தேவன் இப்பொழுது எதிர்கால ஆசீர்வாதத்தின் எல்லைகளை முன்னோக்கிப் பார்க்கும்படி மோசேயின் மூலமாகப் பேசுகிறார். நாம் பெரும்பாலும் கடந்த காலத்தின் நினைவுகளில் மூழ்கிக்கிடக்கும் இயல்புடையவர்கள். சில சமயங்களில் கடந்தகால சுயபெருமையைப் பேசுவோம், அல்லது வீழ்ச்சியின் மனக்கிலேசத்தின் வருத்தத்தில் மூழ்கிக்கிடப்போம். நாம் இவற்றிலிருந்து விடுபட்டு, கடந்த காலத்தில் கர்த்தர் நமக்குச் செய்த கிருபையின் செயல்களை எண்ணிப்பார்க்கவும், எதிர்கால நன்மைகளைச் சுதந்தரிக்கும்படி முன்னேறிச் செல்லவும் அழைக்கப்பட்டுள்ளோம்.

இங்கே வரையரைக்கப்பட்ட எல்லைகளை இஸ்ரயேல் மக்களால் ஒருபோதும் அடைய முடியவில்லை என்பதுதான் உண்மை. சாலொமோனின் மகிமை நிறைந்த ஆட்சிக் காலத்தில் சிறிது காலம் இந்த எல்லைகள் இஸ்ரயேல் மக்களுக்குச் சொந்தமாக இருந்தது. எப்பொழுதும் தேவனுடைய ஆசீர்வாதங்கள் நாம் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாகவே இருக்கின்றன. தம் மக்களுக்கான அவருடைய எல்லைகள் எப்பொழுதும் பெரிதானவையே. அவர் நமக்கு அருளிய சமாதானம் உலகம் கொடுக்க முடியாதது அல்லவா? நம்முடைய சுதந்தரம் அழியாததும், மாசற்றதும், வாடாததும் அல்லவா? அவர் நமக்குத் தருகிற மகிழ்ச்சி சொல்லி முடியாததும், மகிமையால் நிறைந்ததும் அல்லவா? அவருடைய அன்பு அறிவுக்கு எட்டாதது அல்லவா? கிறிஸ்துவே நம்முடைய சுதந்தரமாக இருக்கிறார். கிறிஸ்துவுக்குள் நம் ஒவ்வொருவருக்கும் ஓரிடம் இருக்கிறது என்பதை அறிந்து அவரையே பின்தொடர்வோம். அவர் நமக்கென்று ஒதுக்கியிருக்கிற சுதந்தர பாகத்தை வேறு எவரும் பெற்றுக்கொள்ள முடியாது; நாமே பெற்றுக்கொள்வோம். அவரையே நம்முடைய சுதந்தரராக்குவோம். கிறிஸ்து அங்கே இருக்கிறார். நாமும் அங்கே அவருடன் இருக்கப்போகிறோம்.

இன்றைய நாள் வரைக்கும் தேவன் கொடுத்த எல்லை இஸ்ரயேலருக்குச் சொந்தமாகவில்லை. அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்காததினிமித்தம் இழந்துபோனார்கள். கிறிஸ்து தம்முடைய அரசாட்சியை இப்பூமியில் நிலைநாட்டும்போது அது அவர்களுக்குச் சொந்தமானதாக மாறும். இந்த உலகத்தில் அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நமக்கு கிறிஸ்துவுக்குள் பரலோகத்தில் நமக்கென்று பெரிய சுதந்தரத்தைக் கொடுத்து நம்மைக் கனப்படுத்தியிருக்கிறார். நாமும் அவிசுவாசத்தினால் இழந்துபோகாதிருக்கும்படி எச்சரிக்கப்படுகிறோம். கிறிஸ்துவுக்குள் நாம் பெற்றிருக்கிற வாக்குறுதிகளை நாம் உரிமைபாராட்டுவோம். “தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் ஆம் என்னும் ஆமென் என்றும் இருக்கிறதே” (2 கொரி. 1:20).