July

சகோதரர்களை மறந்துவிடவேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 32:20-42)

“அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் பாதிக் கோத்திரத்தாருக்கும் எமோரியருடைய … தேசங்களையும் அவைகளிலுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்” (வச. 33).

ரூபன் வழிவந்தவர்களும், காத் சந்ததியினரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் யோர்தானுக்கு இக்கரையில் தங்களுக்கான சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். பல நேரங்களில் இஸ்ரயேல் நாட்டின் தேசிய வாழ்க்கையோடும், சமய வழிபாடுகளுக்கும் இவர்கள் குடும்பமாக இணைந்து செல்ல முடியாமல் போவதற்கு இந்தத் தெரிந்தெடுப்பு ஒரு காரணமாக இருந்துவிட்டது. கர்த்தர்மேல் பெரும் வாஞ்சையும் விருப்பமும் வைத்திருப்பவர்களுக்கு சபைக் கூட்டங்களில் பங்குபெறுவதற்கு தூரமும், உடைமைகளும் ஒரு காரணமாக இருப்பதில்லைதான். ஆயினும் நாளடைவில், குடும்பமாக நாம் எல்லாக் கூட்டங்களிலும் பங்குபெறுவதற்குத் தூரமும், உடைமைகளும் தடைகளாக அமைந்துவிடுகின்றன என்றால் அது மிகையல்ல.

பின்னாட்களில், “ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி, மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி, கீலேயாத் மனிதர் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்து விட்டார்கள்” (நியா. 5: 15-17) என்று போருக்கு வராத இவர்களைக் குறித்து தெபோராள் பாடுகிறாள். ஆம், இவர்களுடைய செழிப்பான வாழ்க்கை, கால்நடைகளைப் பராமரிக்க வேண்டும் என்ற அக்கறை, அவர்களுடைய உடன் கோத்திரத்தாராகிய சகோதரர்களுக்கு மிகுந்த மனவேதனையை உண்டாக்கிற்று. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியே கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் என்ற புதிய ஏற்பாட்டு கட்டளையை நாம் பெற்றிருக்கிறோம். சுயநலப்போக்கு, சகோதரர்களுடன் இணைந்து செல்லாமை, ஒத்துழையாமை, ஐக்கியமின்மை ஆகியவை சபையில் விசாரங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்திவிடும். ஆகவே நாம் எச்சரிக்கையாயிருந்து சபையின் ஒற்றுமைக்கும், மகிழ்ச்சிக்கும் எவ்விதப் பங்கமும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

முன்னொரு நாளில், உங்கள் மனைவிகள், பிள்ளைகள், ஆடுமாடுகள் ஆகியவை இங்கே எகிப்திலேயே இருக்கட்டும், ஆண்கள் மட்டும்போய் உங்கள் தேவனுக்குப் பலி செலுத்துங்கள் என்று பார்வோன் சொன்னான். அன்றைக்கு மோசே அதை மறுத்துவிட்டான். இப்பொழுது, பார்வோனின் கூற்றை இந்த இரண்டரைக் கோத்திரத்தார் வழிமொழிகிறார்கள்: “எங்கள் பிள்ளைகளும், எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருக ஜீவன்களோடும் இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள்” (வச. 26). நாம் குடும்பமாக நம்முடைய அனைத்து உறுப்பினர்களோடும் எல்லாக் கூட்டங்களிலும் பங்குபெறும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். பார்வோனின் அதிகாரமும், உபத்திரவமும் தடுக்க முடியாததை, இந்த ஆடுமாடுகளும் மிருக ஜீவன்களும் சாதித்துவிட்டன. ஆத்துமாக்கள் இல்லாத உடைமைகளினிமித்தம், அழிவில்லா ஆத்துமாக்களை உடைய மனிதர்களை நாம் இழந்துவிட வேண்டாம்.

யோர்தானுக்கு இக்கரையில் ஆடுமாடுகளுக்கு புல்வெளிகள் இருக்கின்றன, கோட்டைச் சுவர்களோடு பட்டணங்கள் இருக்கின்றன. ஆனால் யோர்தானுக்கு அக்கரையில் பாலும் தேனும் ஓடுகிற வாக்குத்தத்த பூமியின் ஆசீர்வாதங்களை அடையமுடியால் போய்விட்டது. நாம் இப்பொழுது எடுக்கிற தவறான தீர்மானங்கள் பின்னாட்களில் நம்முடைய தலைமுறையைப் பாதித்துவிடும். ஆகவே காண்கிற இவ்வுலகத்தைத் தரிசித்து நடவாமல், பரந்த மனப்பான்மையோடும், தொலைநோக்குப் பார்வையோடும் காணாத பரலோகத்தை நோக்கி விசுவாசித்து நடைபோடுவோம்.