July

கிறிஸ்துவின் ஒப்பற்ற பலி

(வேதபகுதி: எண்ணாகமம் 28:11-29:40)

“நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்த வேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார்” (வச. 29:39).

இந்த நீண்ட வேதபகுதியில் இஸ்ரயேல் மக்கள் அனுசரிக்க வேண்டிய ஏழு பண்டிகைகளும் அப்பண்டிகையின் நாட்களில் செலுத்த வேண்டிய பலிமுறைமைகளும் கூறப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி மக்கள் தானாக முன்வந்து மனபூர்வமாகச் செலுத்த வேண்டிய பலிகளுக்கான விதிகளும் சொல்லப்பட்டுள்ளன. இவையாவும் முடிவில்லாமல், தொடர்ந்து செய்ய வேண்டிய பலிகள். இந்தப் பண்டிகைகள் இஸ்ரயேல் மக்களின் கடந்த காலத்தோடும் வருங்காலத்தோடும் தொடர்புடையவை. மேலும் பலிகள் கிறிஸ்துவின் ஒப்பற்ற பலியைச் சுட்டிக்காட்டும் நிழலுருவங்களாகவும் உள்ளன.

புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் இப்பலிகளின் வாயிலாகக் கற்றுக் கொள்ள வேண்டிய நடைமுறைப் பாடங்களும் பல உள்ளன. இந்தப் பலிகள் யாவும் கிறிஸ்துவில் நிறைவேறுகின்றன (எபி. 10:1-18). விலங்குகளின் இரத்தம் நம்முடைய பாவங்களைப் போக்குவதில்லை, அவை தேவனுடைய கோபத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்கின்றன. ஆனால் கிறிஸ்துவின் தூய இரத்தமோ நம்முடைய பாவங்களற நம்மை முற்றிலும் கழுவிச் சுத்தமாக்குகிறது (எபே. 1:7; 1 யோவான் 1:7). மிருகங்கள் தொடர்ச்சியாகப் பலியிடப்பட்டன. ஆனால் கிறிஸ்துவோ நித்தியபலியாக தம்மைத்தாமே ஒரே தரம் பலியாக ஒப்புக்கொடுத்தார். இந்த ஒரே பலியினாலே நாமும் நித்தியமாக இரட்சிக்கப்படுகிறோம் (எபி. 9:24-28).

இந்தப் பலிகள் ஆசாரியன் இல்லாமல் தேவனுக்குச் செலுத்தப்பட முடியாது. ஆசாரியர்கள் மக்களுக்கும் தேவனுக்கும் இடையே மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டார்கள். இன்றைக்கு கிறிஸ்துவே விசுவாசிகளின் பிரதான ஆசாரியராக இருக்கிறார். நம்முடைய பிரதான ஆசாரியர் வானங்களில் வழியாக உயிர்த்தெழுந்து சென்றவர் (எபி. 4:14-16); மேலும் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார், நம்மை முற்றும் முடிய இரட்சிக்க வல்லவராகவும் இருக்கிறார் (எபி. 7:25). இவரே நமக்காகப் பரிந்துபேசுகிறார், மத்தியஸ்தராகச் செயல்படுகிறார்.

பழைய ஏற்பாட்டுப் பலிகள் யாவும் செலவு மிக்கவை. ஓராண்டில் மக்களுடைய பொருத்தனைகள் தவிர, நியாயப்பிரமாணம் கூறுகிறபடி அந்தந்த விசேஷ நாட்களில் பலியிடுவதற்காக, 113 காளைகளும், 32 எருதுகளும், 1086 ஆட்டுக்கடாக்களும் பலியாகச் செலுத்தப்பட்டன. கிறிஸ்துவின் ஒரே பலியின் அடிப்படையில் நாம் எவ்விதமான பலிகளையும் செலுத்தாமல் கிருபையினாலே இலவசமாக நம்முடைய இரட்சிப்பையும், நித்திய பாதுகாப்பபையும் பெற்றிருக்கிறோம். மட்டுமின்றி, பழைய ஏற்பாட்டு விசுவாசிகளே இத்தனை அதிகமான பலிகளைச் செலுத்துவார்களாயின் கிருபையின் கால விசுவாசிகளாகிய நாம் எவ்வளவு அதிகமாகச் செலுத்த வேண்டும். நம்முடைய சரீரங்களைப் பலியாகப் படைப்பது (ரோமர் 12:1); அவருடைய நாமத்தைத் துதிக்கும் நம்முடைய ஸ்தோத்திர பலியை ஏறெடுப்பது (எபி. 13:15); நற்கிரியைகளாகிய பலியை நிறைவேற்றுவது (எபி. 13:16); ஜெபங்களாகிய பலியைச் செய்வது (சங். 141:2); தேவனுக்காக நம்முடைய ஊழியமாகிய பலியை நிறைவேற்றுவது (ரோமர் 15;15-16) ஆகிய பலிகளை நாம் மனபூர்வமாகவும் உற்சாகமாகவும் செலுத்தக் கடனாளிகளாக இருக்கிறோம்.