January

முன்னதாகவே ஆயத்தம் செய்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 6:14-30)

“இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்குக் கர்த்தரால் கட்டளை பெற்ற மோசேயும் ஆரோனும் இவர்களே” (வச. 26).

தேவனுடைய தெரிந்தெடுப்பின் அட்டவணை இயற்கையின்படியானது அல்ல, மாறாக அது இறையாண்மைமிக்க அவருடைய கிருபையின்படியானது. இந்தப் பகுதி இஸ்ரயேல் வம்சத்தாரின் தெரிந்தெடுக்கப்பட்ட சில குடும்பங்களும் அவர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடைய நோக்கம் மோசே மற்றும் ஆரோனின் பூர்வீகத்தை தெரிவிப்பதே. ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த மோசே இப்புனிதப் பணிக்காக அழைக்கப்பட்டான். மிகவும் சாதாரண மனிதர்களைக் கொண்டு, அசாதாரண முறையில் தன்னுடைய ஊழியத்துக்குத் தேவன் பயன்படுத்துகிறார் என்பதற்கு இவர்கள் முன்னோடிகளாயிருக்கிறார்கள். தாயின் கருவில் உருவாகும் முன்னரே எரேமியாவைத் தம்முடைய ஊழியத்துக்கு தெரிந்தெடுத்து அழைத்தார் (எரே. 1:5). புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நம்மையும் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் தேவன் தெரிந்துகொண்டார் (எபே. 1:4) என்பதை நினைக்கும்போது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது.

இப்பகுதியில் யாக்கோபின் முதல் மூன்று குமாரர்களின் குடும்பங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள்: ரூபன், சிமியோன், லேவி. அற்பமாய் எண்ணப்பட்ட லேயாளின் மகன்கள் இவர்கள். லேயாளின் சிறுமையைக் கண்ட கர்த்தருடைய பெருந்தன்மையின் அடையாளங்கள் இவர்கள். இந்த உலகத்தால், சுற்றத்தால் நாம் அற்பமாய் எண்ணப்படலாம், ஆனால் கர்த்தர் நம்மை இரக்கத்துடன் பார்க்கிறார். நம்மை அவர் மறந்துபோகிறதில்லை.

மேலும் யாக்கோபின் கடைசி ஆசிர்வாதத்தின் போது, தவறு செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்களே இம்மூவரும் (ஆதி. 49:5-7). பாவம் பெருகிற இடத்தில் அவருடைய கிருபையும் அதிகமாய்ப் பெருகுகிறது. கொடுமையின் பட்டயங்கள் என்று அறியப்பட்ட லேவியின் குடும்பத்திலிருந்தே தேவன் மோசேயையும் ஆரோனையும் தெரிந்துகொண்டார். பாவத்தில் வாழ்ந்த நம்மை அவருடைய பெரிய கிருபையினால் இரட்சித்து அழைத்திருக்கிறார்.

மூத்தவன் ஆரோன் இருக்க இளையவன் மோசேயைத் தெரிந்து கொண்டதும் தேவ கிருபையின் வெளிப்பாடே அன்றி வேறென்னவாக இருக்க முடியும்.

தேவ பணிக்கென தெரிந்துகொள்ளப்பட்ட மோசே ஏழு முறை தன்னுடைய இயலாமையையும் அவிசுவாசத்தையும் வெளிப்படுத்தினான். இது அவனுடைய பெலவீனத்தின் பூரண வெளிப்பாடாக இருக்கிறது. ஆயினும், இதுவே இஸ்ரயேலரை வழிநடத்தும் பொறுப்பைப் பெற்றதற்கு தேவனுடைய கிருபையின் ஐசுவரியத்தின் பூரண வெளிப்பபாடாகவும் இருக்கிறது.

இந்தப் பட்டியலில் இன்னும் பல பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தங்களுடைய விசுவாசத்துக்காக அறியப்பட்ட மோசேயின் பெற்றோரும் அடங்குவர். நல்ல நோக்கத்துக்காகவும், தீய காரியங்களுக்காகவும் அறியப்பட்ட சிலருடைய பெயர்களும் உள்ளன. நம்முடைய பெயர்கள் எத்தகைய நோக்கத்தத்துக்காக அறியப்படப்போகின்றன?