January

2022 ஜனவரி 23

(வேதபகுதி: யாத்திராகமம் 5:4-14)

“அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பாலாயிருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள் ” (வச. 8).

“தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும்” (வச. 8) என்பதை கூக்குரலாகவும், வீண் வார்த்தைகளாகவுமே (வச. 9) இந்த உலகம் கருதுகிறது. தன்னுடைய ஆன்மாவின் நிலையை உணர முடியாத ஒருவரால் பிறருடைய ஆவிக்குரிய தேவையையும் உணர முடியாது என்பதே நிதர்சனம். ஆராதனையை வேலைகள் எதுவும் இல்லாத சோம்பேறிகளின் கொண்டாட்டம் அல்லது வேலைகள் எதுவும் இல்லாத நேரத்தில் செய்வது என்று நம்புவது ஆவிக்குரிய குருட்டாட்டத்தின் வெளிப்பாடேயன்றி வேறல்ல. வேலை செய்ய மனதற்றோரின் சாக்குப்போக்கும் அல்ல ஆராதனை. இது மீட்பின் ஆண்டவருக்கு விசுவாச மக்கள் செய்ய வேண்டிய ஆகச் சிறந்த மரியாதை.

சாத்தான் ஒரு சர்வாதிகாரி, இவன் எப்பொழுதும் மக்களுடைய விடுதலையை விரும்புகிறதில்லை. தனக்கு அடிமைகளாக வைத்துக்கொள்ளவே விரும்புபவன். இஸ்ரயேலர்கள் தேவனைக் குறித்துச் சிந்திக்க நேரமில்லாதபடி பார்வோன் வேலைப் பளுவைக் கடினமாக்குகிறான். விடுதலை பெற்ற மக்களும் கர்த்தருடைய காரியங்களிலும், கவனம் செலுத்த முடியாதபடியும், இரட்சிப்பின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாதபடியும் தங்கள் அலுவல்களில் மூழ்கிக்கிடப்பது மிகவும் துக்கமானது. விசுவாசிகள் தங்களுடைய உள்ளான நிலையையும், ஆத்துமாவின் தேவையையும், நித்தியத்தின் மேன்மையையும் உணர முடியாதபடி அழிந்துபோகிற காரியங்களைக் கொண்டு திசை திருப்புவதில் சாத்தான் வல்லவன். அவனுடைய தந்திரங்கள் அறிய முடியாதவை அல்ல, எச்சரிக்கை அவசியம்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளன. வீட்டில் இருந்தே வேலை செய்யும் அளவுக்கு வசதிகள் பெருகிவிட்டன. ஆனால் இவையாவும் வேலைப் பளுவைக் குறைத்து, கர்த்தருக்கு நேரத்தைக் கொடுப்பதை எளிதாக்கிவிட்டனவா? இல்லையே! இவை ஆண்டவருடைய எதிராளியின் நவீன ஆயுதங்கள். தேவ பிள்ளைகள் அவனைக் காட்டிலும் அதிக ஞானத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது.

“தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசமெங்கும் சிதறிப் போனார்கள்”(வச.11). ஐக்கியங்கொள்ளாதடி, கூடி வாழாதபடி, விடுதலையை யோசிக்க முடியாதபடி சுயநல நோக்குடன் பிரிந்துபோனார்கள். சாத்தானின் பிரித்தாழும் சூழ்ச்சிக்கு மக்கள் இன்றைக்கும் இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரயேலருடைய உழைப்பு எகிப்தின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கியம். பார்வோன் அவர்களை உழைப்பாளிகளாகவும், அடிமைகளாகவும், தங்களுடைய முன்னேற்றுத்துக்கான காரணிகளாகவுமே பார்த்தான். தேவன் மட்டுமே அவர்களை தம் சொந்த ஜனங்களாகவும், விடுதலை பெற வேண்டியவர்களாகவும், சுதந்தரக் காற்றைச் சுவாசிக்க வேண்டியவர்களாகவும் பார்க்கிறார். இது இன்றைய காலகட்டத்தின் மனோபாவத்தைப் பிரதிபலிக்க வில்லையா? தேவன் பார்க்கும்வண்ணமாகவே நாமும் மக்களைப் பார்க்க ஆசிப்போம், விடுதலைக்காக ஜெபிப்போம்.