January

2022 ஜனவரி 22

(வேதபகுதி: யாத்திராகமம் 5:1-3)

“பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிட வேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்” (வச. 1).

சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது, பிரச்சினையை விலைகொடுத்து வாங்குவது மட்டுமல்ல, தங்கள் உயிருக்கே உலைவைக்கும் செயலும் ஆகும். ஆயினும், மோசேயும் ஆரோனும் தங்கள் சொந்த மாம்ச பெலத்தை முறியடித்து, தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டும், பயந்த இருதயத்தைப் பெலப்படுத்தும் கிருபையைப் பெற்றுக்கொண்டும் பார்வோனுக்கு முன் நின்றார்கள். சத்துருவின் கொடுங்கோன்மைக்கு ஆட்பட்டு, பாவத்தின் அடிமைத்தனத்துக்குள் சிக்கியிருக்கிற மக்களை மீட்கும் பணிக்கு ஓர் அழகிய சித்திரமாக மோசேயும் ஆரோனும் நமக்கு முன் நிற்கிறார்கள்.

“வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிட வேண்டும்” (வச. 1) என்று கர்த்தர் சொல்லுகிறார். “எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படி போகவிட வேண்டும்” (வச. 3) என்று மோசே கூறினார். தேவனுடைய விருப்பமே மோசேயின் விருப்பமாக இருந்தது. தேவ விருப்பமும் நம்முடைய விருப்பமும் இணைந்து செல்கின்றனவா? பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டியது, பலி தியாகத்துடன் செய்ய வேண்டியது. தேவனுக்கு நம்மையும் நம்முடையவற்றையும் தியாகத்துடன் அர்ப்பணிப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியை நம்முடைய ஆராதனைகளில் அனுபவிக்கிறோமா? “மூன்று நாட்கள் பயணம்” பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக நாம் செய்ய வேண்டிய ஆயத்தத்தைச் சுட்டிக்காட்டுகிறது (ஒப்பிடுக: ஆதி. 221-13).

கர்த்தர் தம்முடைய நியாயமான எளிய கோரிக்கையின் மூலம் தம்மை யாரென்று வெளிப்படுத்தி (ஆராதனைக்குரியவர்), பார்வோனுடைய ஆத்துமத்தின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டு, மனம்திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கினார். கோபத்துடன் இடைபடுவதற்கு முன் தேவன் எப்போதும் இரக்கத்துடன் இடைபடுவார். பார்வோனோ, “கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்?, நான் அறியேன்” என்று கூறி கர்த்தரின் கிருபையைப் புறக்கணித்தான். இந்த உலகம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கொடுக்கும் மதிப்பு இதுதான். போலிப் பெருமையும், மிதமிஞ்சிய எண்ணமும் ஜீவனுள்ள தேவனின் வார்த்தைகள் உட்புகாதபடி தடைகளாக அமைந்துவிடுகின்றன.

“என் ஜனங்கள்” (வச. 1) என கர்த்தர் உரிமையுடன் அழைக்கிறார். அவரால் மீட்கப்பட்ட பிள்ளைகளாக நாம் நம்முடைய பிதாவுக்குக் கொடுக்க வேண்டிய கனத்தைக் கொடுத்து கனப்படுத்துவோம். இந்த உலகம் புறக்கணிக்கலாம், நாம் புறக்கணிக்கலாமா?