January

2022 ஜனவரி 09

(வேதபகுதி: யாத்திராகமம் 2:23-25)

“தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும், ஈசாக்கோடும், யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்” (வச. 24).

காலங்கள் கடந்தன. எபிரெயர்களைக் கொடுமைக்குள்ளாக்கிய அரசன் இறந்தான். ஒருவேளை புதிய அரசன் தங்களை மென்மையாக நடத்தலாம் என்று இவர்கள் நம்பியிருக்கலாம். ஆனாலும் இவர்களுடைய துன்பத்துக்கு முடிவில்லை. புதிய பார்வோனும் இவர்களைத் துன்பப்படுத்துவதையே தெரிந்துகொண்டான். தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட இந்த மக்கள் உலகத்திலிருந்து நமக்கு நன்மை உண்டாகும் என்ற பொய்யான நம்பிக்கையைச் சார்ந்துகொள்ளாமல் இருப்பதற்கு துன்பத்தைத் தேவன் தொடரவிட்டிருக்கலாம். உலகம் நம்மைப் பகைக்கவே செய்யும், உபத்திரவத்தைக் கொடுக்கவே செய்யும். தேவனே ஒரே மீட்பர் என்ற எண்ணத்தை தேவ பிள்ளைகளின் மனதில் ஆழமாக வேறுன்றச் செய்வதற்காக இதுபோன்ற காரியங்களை இன்றைக்கும் அவர் அனுமதிக்கிறார்.

இந்த நேரத்திலும் தேவன் எதுவும் செய்யாததுபோல் தோன்றுகிறதல்லவா? இல்லை, புயலின் நடுவே பயணிக்கிற நம் வாழ்க்கைப் படகின் சுக்கான் இன்னும் அவருடைய கரத்தில்தான் இருக்கிறது. தாம் செயல்படுவதற்கான சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறார். தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டார், உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார், இஸ்ரயேல் புத்திரரைக் கண்ணோக்கினார், அவர்களை நினைத்தருளினார். அவருடைய மக்கள் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை என்பது எவ்வளவு அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாம் பிரச்சினைகளால் மூழ்கடிக்கப்பட்டிருந்தாலும் ஓர் இமைப்பொழுதாயினும் அவரால் நினைக்கப்படாமல் இருக்கவில்லை. எப்பொழுதெல்லாம் தேவன் செயல்படுகிறாரோ அப்பொழுதெல்லாம் சரியான திட்டத்தோடு, சரியான நர்களைக் கொண்டு, சரியான நேரத்தில் செயல்படுகிறார். ஆம், இந்த நாட்களில் தேவன் மோசேயையும் ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்.

நம்முடைய தேவன் உடன்படிக்கையின் தேவன், தாம் சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிறவர். தேவன் ஆபிரகாமிடத்தில், உன் தலைமுறையினர், நானூறு ஆண்டுகள் அந்நிய தேசத்தில் அகதிகளைப் போல வாழ்ந்து, துன்பப்படுவார்கள் என்றும் பின்பு அடிமைப்படுத்துகிற நாட்டை நான் நியாந்தீர்த்து, உங்களை அங்கிருந்து அழைத்துவருவேன் என்று சொல்லியிருந்தார் (ஆதி. ஆதி. 15:13,14). நானூறு ஆண்டுகள் முடியும் வரைக்கும் அவர் பொறுமைiயாகக் காத்திருந்தார். அவர் பொய் சொல்லாத இறைவன். ஆபிரகாமையும், ஈசாக்கையும், யாக்கோபையும் மக்கள் மறந்துபோகலாம். ஆனால் தேவன் அவர்களோடு பேசினதை, வாக்குரைத்ததை மறக்கமாட்டார். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கும் இதைவிட மேலான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த உலகத்தை வென்ற தேவன்மேல் நம்முடைய கண்களைப் பதித்துக்கொள்வோம்.