February

நம்முடைய புதிய எஜமானனாகிய கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 14:15-31)

“இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது” (வச. 22).

இஸ்ரயேலர் செங்கடலைக் கடந்து சென்றது அவர்களது வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்பட்ட தனித்துவமிக்க ஒரு நிகழ்வாகும். “விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்” (எபி. 11:29). மோதி அடிக்கிற அலைகளின் நடுவாகச் செல்வது சாத்தியமற்றது, ஆயினும் தேவன்மீதுள்ள விசுவாசம் அதைச் சாத்தியமாக்குகிறது. “நீங்கள் நின்றுகொண்டிருங்கள்” (வச. 13) என்று சொன்ன கர்த்தரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால் மட்டுமே இப்பொழுது “புறப்பட்டுப்போங்கள்” (வச. 15) என்ற அடித்த படிக்கு முன்னேறிச் செல்ல முடியும். கீழ்ப்படிதல் விசுவாசத்தை வருவிக்கிறது, விசுவாசம் வழிகளை உண்டாக்குகிறது.

இப்பொழுது காட்சி மாறுகிறது. இஸ்ரயேல் சேனைக்கும் எகிப்தியரின் சேனைக்கும் நடுவாக தேவதூதனானவர் வருகிறார் (வச. 19). இப்பொழுது எகிப்தியர், தேவதூதனை வென்றாலொழிய அவருடைய பிள்ளைகளைத் தொடமுடியாது. நமக்கும் பிரச்சினைகளுக்கும் நடுவாக தேவனை வைப்பது ஒரு விசுவாசியின் ஞானமுள்ள செயல். நாம் பிரச்சினைகளை அல்ல, தேவனையே நோக்கிப் பார்க்க வேண்டும். இதுவே நமக்கான பாதுகாப்பு. அவ்வாறே மேகஸ்தம்பமும் நடுவாக வந்தது. தேவனுடைய செயல்கள் நமக்கு வெளிச்சமாகவும், உலகத்துக்கோ இருளாகவும் இருக்கிறது. நமக்கு வழியைக் காட்டக்கூடியது உலகத்துக்கு கலக்கத்தை உண்டுபண்ணுகிறது.

எகிப்தியர் செங்கடலைக் கடக்கத் துணிந்து அழிந்துபோனார்கள் (எபி. 11:29). மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழித்து, மரண பயத்திலிருந்து கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியிருக்கிறார் (எபி. 2:14,15). நாம் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு கிறிஸ்துவோடுகூட மரித்து அடக்கப்பண்ணப்பட்ட நாம் அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலில் இணைக்கப்பட்டிருக்கிறோம் (ரோமர் 6:4,5). மரணத்துக்கு இனி நம்மேல் எவ்வித ஆளுகையும் இல்லை.

இஸ்ரயேலர் மோசேக்குள்ளாக மேகத்தினாலும், சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள் (1 கொரி. 10:2). செங்கடல் பார்வோனிடமிருந்து மக்களைப் பிரித்து அவர்களை மோசேக்கு உரியவர்களாக்குகிறது (வச. 31). மக்கள் பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, மோசேயின் தலைமையின்கீழ் வந்தார்கள். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாம் பழைய மனிதனுக்குச் செத்து, புதிய மனிதனாக எழுந்து கிறிஸ்து என்னும் புதிய எஜமானனுடன் நாம் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவுக்குள்ளாக நாம் பெற்றிருக்கிற இந்தப் புதிய உறவு நம்முடைய ஒப்புவித்தலையும், அவருக்குப் பிரியமாயிருத்தலையும் எதிர்பார்க்கிறது. செங்கடலைக் கடந்துவந்த பலரிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது (1 கொரி. 10:5). இவ்விதமான நிலைக்கு நாம் ஆளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம்.