February

பெலவீனர்களையும் பெலவான்களாகக் காண்கிற கர்த்தர்

(வேதபகுதி: யாத்திராகமம் 12:31-42)

“நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்திலிருந்து புறப்பட்டது” (வச. 41).

கர்த்தர் உண்டுபண்ணிய அற்புதச் செயல்களால் எகிப்தியரில் பலரும் கவரப்பட்டிருந்தார்கள். எபிரெயர்களோடு சேர்ந்து, அழிவுக்குப் பயந்து வேறு இன மக்களும் புறப்பட்டார்கள். வெளியரங்கமாகத் தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று அறிக்கையிட்டு, உள்ளுக்குள் மெய்யான மனந்திரும்புதல் அற்ற விசுவாசிகளுக்கு இவர்கள் அடையாளமாயிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் என்ற போர்வையில் கிறிஸ்துவுக்குச் சம்பந்தமில்லாதோர் இன்று பெருகியிருக்கிறார்கள். கிறிஸ்துவின் அற்புதங்களைக் கண்டு அநேகர் அவரைப் பின்பற்றினார்கள், ஆயினும் அவர்கள் உள்ளான மனதோடு பின்பற்றவில்லை, கிறிஸ்துவும் அவர்களை நம்பி இணங்கவில்லை (யோவான் 2:23-25).

எகிப்தில் எழுபத்தைந்து நபர்களோடு தொடங்கிய ஓர் அற்பமானஆரம்பம் இன்று ஏறத்தாழ இருபது இலட்சம் கொண்ட மிகப்பெரிய சேனையாக மாறிற்று (வச. 17, 40, 51). எகிப்தியரைப் பொருத்தவரை எபிரெயர்கள் அடிமைகள், செங்கல் செய்பவர்கள், வேலைக்காரர்கள். தேவனுடைய பார்வையிலோ இவர்கள் அணிவகுத்துச் செல்லுகிற போர் வீரர்கள். இந்த உலகம் நம்மை பெலனற்றவர்களாகவும், அற்பமமானவர்களாகவும் எண்ணுகிறது. தேவனோ நம்மை சர்வாயுதங்கள் தரித்தவர்களாகவும், மெய்யான எதிரிகளாகிய இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் போரிடுகிற தீரமிக்கவர்களாகக் காண்கிறார் (எபே. 6:11,12).

எபிரெயர்களின் எகிப்திய வாசம் முடிவுக்கு வந்தது. நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றையத்தினமே அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள் (வச. 41). ஒரு நாள் முந்தியும் அல்ல, ஒரு நாள் பிந்தியும் அல்ல. பஸ்காவின் நாளே அவர்களுடைய விடுதலையின் நாளுமாயிற்று. கர்த்தர் எபிரெயர்களின் இன்னல்களை நினைவுகூர்ந்தார், மோசேயை அனுப்பினார், அடையாளங்களை நிகழ்த்தினார், ஆயினும் விடுதலை என்பது பஸ்காவுக்குப் பின்னரே நடைபெற்றது. கிறிஸ்துவின் பிறப்பு, அவருடைய போதனைகள், அவர் நிறைவேற்றிய அற்புதங்கள் யாவும் முக்கியமே. ஆயினும் அவருடைய சிலுவை மரணமே நமக்கான விடுதலையைக் கொண்டுவந்தது. அவருடைய வேளை வந்த போது, அவர் நமக்காகச் சிலுவையில் பஸ்கா ஆட்டுக்குட்டியைப் போல அடிக்கப்பட்டு மரித்தார். இதுவே நாம் எந்நாளும் நினைக்கத்தக்க முக்கியமான நாள்.