December

கிறிஸ்துவே நமக்கு ஞானம்

(வேதபகுதி: ஆதியாகமம் 41:1-36)

“இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது” (வச. 32).

சிறையிலிருந்தும், அடிமைதனத்திலிருந்தும் விடுதலை பெற்றவர் ஒரே நாளில் உலகின் சக்திவாய்ந்த ஆட்சியாளராக மாறும் கதாபாத்திரங்கள் புனைகதைகளில்கூட மிகமிகக் குறைவு. ஆனால் இறையாண்மையுள்ள தேவனின் கதையில் இத்தகைய ஒரு பாத்திரத்தை யோசேப்பு வகிக்கிறார். சகோதரர்களால் வெறுக்கப்பட்ட ஒருவன், பொய்யாய்க் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவன் எகிப்தை ஆட்சி செய்யும் ஆளுநராய் மாறுகிறான். பார்வோன் தன் கனவால் கலக்கமடைந்தான். இது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிய கவலை. இன்றைக்கு பெரும்பாலானோர் தங்கள் எதிர்காலத்தைக் குறித்த கவலையுடன் இருக்கின்றனர். எதிர்பராமல் ஏதாவது பேரழிவு தங்கள் வாழ்க்கையில் வந்துவிடுமோ என்று மக்கள் பீதியுடன் இருக்கிறார்கள். எதிர்காலத்தைக் குறித்த அனைத்துக் காரியங்களும் வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் தேவனின் ஆவி இல்லாதோருக்கு இந்தத் தீர்க்கதரிசனங்கள் புரியாது. இறைவனின் ஞானத்தைப் புரிந்துகொள்ள எந்தவொரு மனித ஞானத்தாலும் முடியாது. தேவ ஆவியைப் பெற்றிருந்த யோசேப்பு போன்றோரால் இது சாத்தியமாகும். பொருளாதாரம், அரசியல், சமூகம் போன்றவற்றின் எதிர்காலத்தைக் குறித்து தொலைநோக்குப் பார்வையுடன் அறிந்திருக்கிற ஞானிகளைக் காட்டிலும், வேதத்தை அறிந்த ஒருவர் அதிகமாக அறிந்திருக்கிறார். ஆம், பரிசுத்த ஆவியானவர் அதற்கான புரிதலைக் கொண்டுவருகிறார்.

பானபாத்திரக்காரர்களின் தலைவன் தன்னை நினைவுகூருவான் என்று யோசேப்பு நினைத்திருந்தான். ஆனால் பார்வோனுக்குக் கனவு உண்டாகி, அவனை கலங்கடிக்கும் வரையிலும், மனிதர்கள் ஒருவரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. அவனுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாத ஆசையைப் போன்று தோன்றியது. தேவனுடைய கடிகாரத்தின் முட்கள் ஒரு நிமிடம் தாமதமாகலும் ஓடாது, ஒரு நிமிடமும்கூட முன்கூட்டியும் செல்லாது. “நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களகரமான உத்தரவு அருளிச் செய்வார்” (வச. 16) என்று கூறியதன் வாயிலாக யோசேப்பு தன்னைச் சிறுகவும் தேவனுடைய மகிமையைப் பெருகவும் பண்ணினான். பெருமையுள்ளவனுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ அவர் கிருபை அளிக்கிறார். யோசேப்பு அடங்கி நடந்தான், தேவன் அவiனை உயர்த்தினார். மேலும் “இந்தக் காரியம் ‘தேவனால்’ நிச்சயயிக்கப்பட்டது என்றும், ‘தேவன்’ இதைச் சீக்கிரத்தில் செய்வார்” (வச. 32) என்றும் தேவனுடைய பெயரை மீண்டும் மீண்டும் கூறி, அவருடைய நாமத்தை புறஜாதி அரசனிடம் பெருமைப்படுத்தினான்.

பஞ்சம் வருவதற்கு முன்பாக செழிப்பான வருடங்களைத் தேவன் கட்டளையிட்டது போலவே பஞ்சத்தால் யாக்கோபின் குடும்பம் அழியாதபடிக்கு யோசேப்பை முன்னதாக அனுப்பினார். இன்றைக்கு வேதமும், வேதத்தின் விளக்கங்களும், பிரசங்கங்களும் ஏராளமாய் நமக்குக் கிடைக்கின்றன. ஒரு நாள்வரும், அப்போது, வசனம் கிடைக்காத பஞ்சம் ஏற்படும். ஆகவே இப்பொழுது நமக்குக் கிடைத்திருக்கிற நல்ல சமயத்துக்குத் தக்கதாக, வேதத்தைக் திறம்படக் கற்றுக்கொள்வோம். தேவனை அறிகிற அறிலும் வளர்ந்து, அவருடைய கிருபையில் பலப்படுவோம்.